யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா ஏன் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை விளக்கினார். பெரும் உள்கட்டமைப்பு முதலீடுகள், வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் (VC) ஆர்வம், மற்றும் சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் மக்கள் தொகை அளவிலான பயன்பாடுகள் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உரையாடலில், ஆற்றல் மற்றும் சிப்கள் (Chip) முதல் அப்ளிகேஷன்கள் வரை AI அடுக்கின் (AI stack) ஐந்து நிலைகளிலும் இந்தியா வேகமாகச் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மூலதன உறுதிப்பாடுகள்: உள்கட்டமைப்பு மற்றும் டீப் டெக் (Deep Tech) மீது கவனம்:
AI உள்கட்டமைப்பு தளத்தில் சுமார் 200 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதி கிடைத்துள்ளதாக வைஷ்ணவ் குறிப்பிட்டார். அதேபோல், டீப் டெக் மற்றும் அப்ளிகேஷன் தளங்களில் சுமார் 17 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான உறுதிப்பாடுகளும் உள்ளன என்றார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவை ஒரு சிறந்த கண்டுபிடிப்பு மையமாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த பெரிய முதலீட்டு வாக்குறுதிகளே சாட்சி என்று அவர் வாதாடினார். இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மாறுபட்ட பயனர் தளம், தொழில்நுட்பங்களை நிஜ உலகில் சோதித்துப் பார்க்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
வளர்ந்து வரும் திறமையாளர்கள்:
தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான செய்தியாக, "திறமையாளர்களின் வரிசை (Talent pipeline) இன்னும் அதிகரிக்கும்" என்று வைஷ்ணவ் கூறினார்.
"ஐந்தாவது தொழில் புரட்சிக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் கல்விப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் AI கருவிகளைப் பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவற்றைப் பயன்படுத்திப் புதியவற்றை உருவாக்கும் திறனைப் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்," என்றார்.
மாணவர்களுக்கு கருவிகளை எளிதில் கிடைக்கச் செய்தல்
அரசாங்கத்தின் ’AI மிஷனின்’ அடுத்த கட்டம் குறித்து அமைச்சர் சில குறிப்புகளை வழங்கினார். செமிகண்டக்டர் மற்றும் டெலிகாம் துறைகளில் பின்பற்றிய அதே உத்திகளை இங்கும் செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். எதிர்காலத்தில் மாணவர்கள் கற்றுக்கொள்ளவும், பரிசோதனை செய்யவும் தேவையான AI தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் சாதனங்களை அரசு வழங்கும் திட்டங்கள் உள்ளன.
"AI பரவலாக்கம்" (AI Diffusion - AI தொழில்நுட்பம் அனைவரையும் சென்றடைதல்) என்பது நம் நாட்டில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்டார்ட்அப்கள் எதை எதிர்பார்க்கலாம்?
ஸ்டார்ட்அப்களுக்கான ஆதரவு குறித்துக் கேட்கப்பட்டபோது, "ஏராளமான ஆதரவு கிடைக்கும்" என்று அவர் நேரடியாகப் பதிலளித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு சில நூறுகளாக இருந்த ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை, தற்போது 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த ஆற்றல்மிக்க சூழல் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் ஒரு முக்கியச் சொத்தாக மாறியுள்ளது.
செமிகண்டக்டர் வணிக ரீதியான உற்பத்தி
செமிகண்டக்டர் துறையில் திட்டமிடல் முடிந்து, தற்போது செயல்படுத்தும் கட்டத்திற்கு வந்துள்ளதாக வைஷ்ணவ் தெரிவித்தார். 10 உற்பத்தி அலகுகளில் ஒன்றில் இருந்து வணிக ரீதியான உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 50 டீப் டெக் ஸ்டார்ட்அப்கள் இந்தத் துறையில் உருவாகக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.
வைஷ்ணவ் AI-ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்?
நேர்காணலின் இறுதியில், தனது அன்றாட வாழ்க்கையில் AI-ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார் என்ற கேள்விக்கு,
"நான் எனது மூளையைக் கொண்டே சிந்திக்க விரும்புகிறேன்," என்று வைஷ்ணவ் நகைச்சுவையாகப் பதிலளித்தார். மேலும் விளக்குகையில், அவர் AI-ஐப் பயன்படுத்துவதாகவும், ஆனால் அடிப்படை சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் பணிகளைத் தாமே மேற்கொள்வதாகவும்,” அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவின் AI தருணம் என்பது வெறும் சந்தைக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் தீர்வுகளை வழங்கும் ஒரு பெரும் புரட்சியாக இருக்கும் என்பதே அஸ்வினி வைஷ்ணவின் செய்தி.