நகரங்களில் வசிப்பவர்கள் இன்று வீட்டில் ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ, குழாயில் கசிவு என்றாலோ அல்லது வீட்டிலேயே ஒரு ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும் என்றாலோ நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் ‘அர்பன் கம்பெனி’ (Urban Company). ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியான ஒரு சேவை சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று இளைஞர்களின் கனவுதான் இந்த நிறுவனம். ஆம், ‘அர்பன் கம்பெனி’ தான் இப்போது நாம் பார்க்கப் போகும் யூனிகார்ன் எபிசோடு.
கடந்த ஏழு ஆண்டுகளில் வீட்டு பராமரிப்பில் பிளம்பிங், ஏர் கண்டிஷனர் சர்வீசிங் அல்லது சுத்தம் செய்தல், என எந்த சேவையாக இருந்தாலும் ‘அர்பன் கம்பெனி’ தான் என்கிற வகையில் இந்தியாவின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் மாறியிருக்கிறது. ஆனால் இது ஏதோ ஒரே இரவில் நடந்துவிடவில்லை. அதன் முழுக்கதை இங்கே...
ஒரு தேடலும் தீர்வும்...
அபிராஜ் சிங் பால், வருண் கைதான் மற்றும் ராகவ் சந்திரா ஆகிய மூவரின் தேடல்தான் இந்த கதைக்கு ஆரம்பப் புள்ளி. பெரும்பாலானவர்கள் புறக்கணித்த ஒரு துறையை மறுபரிசீலனை செய்யத் துணிந்த மூன்று நபர்கள்தான் இவர்கள். மிகவும் மாறுபட்ட வாழ்க்கைத் துறைகளைச் சேர்ந்த இந்த மூவரும் மில்லியன் கணக்கானவர்கள் தினமும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிணைந்தனர். இந்தக் கதை 2014-ம் ஆண்டு தொடங்குகிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி கான்பூரில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டமும் பயின்றவர்தான் அபிராஜ் சிங் பால். ஐஐடி கான்பூரில் படித்த நாட்களிலிருந்தே அவருக்கு நண்பராக இருந்தவர்தான் வருண் கைதான். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்து தொழில்முனைவு பற்றி பேசிக்கொள்வது வழக்கம். எம்பிஏ முடித்த பிறகு, அபிராஜ் சிங்கப்பூரில் உள்ள பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் வேலை செய்ய, குவால்காம் என்கிற நிறுவனத்தில் வருண் பணிபுரிந்தார்.
அபிராஜ் எப்பொழுதும் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். அதே எண்ணத்தில் இருந்த வருணுடன் சேர்ந்த அபிராஜ் தங்கள் வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட்அப் பற்றிய சிந்தனையில் இறங்கினர். அபிராஜும் வருணும் இணைந்து ‘சினிமா பாக்ஸ்’ என்ற மொபைல் ஸ்ட்ரீமிங் தளத்தைத் தொடங்கினார். இது பேருந்து அல்லது ரயில்களில் பயணம் செய்யும்போது வைஃபை (Wi-Fi) மூலம் படங்கள் பார்க்கும் வசதியை வழங்கியது. ஆனால், இது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடங்கிய ஆறு மாதங்களுக்காகவே மூடப்பட்டது ‘சினிமா பாக்ஸ்’.
அந்த சமயத்தில், ‘பக்கி’ என்கிற ஆட்டோ ரிக்ஷா சவாரி ஸ்டார்ட்அப் ஒன்றை தொடங்கி, தோல்வியால் அதனை மூடியிருந்தார் ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ராகவ் சந்திரா என்பவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்ற கணினி அறிவியல் பொறியாளரான ராகவ் சந்திராவை பொதுவான நண்பர்கள் மூலம் சந்தித்தனர் அபிராஜும், வருணும். தங்களுக்கு கிடைத்த தோல்வியால் துவண்டு விடாமல் மூவரும் பரஸ்பரம் நண்பர்களாகி தங்களுக்கான ஐடியாவை தேடும் சிந்தனையில் மூழ்கினர்.
ஒரே நேரத்தில் தோல்வியை சந்தித்திருந்த மூவருக்கும் இருந்த ஒரு பொதுவான எண்ணம், மிகப் பெரிய அதேநேரம் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
“நாங்கள் எப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்குத் தெளிவான புரிதல் இருந்தது. அது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும், அதேசமயம் பலருக்கும் பயன்படும் வகையில் மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்,” - அபிராஜ் சிங் பால்.
நகர்ப்புற இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? என்ற கேள்விக்கு விடை தேடி நான்கைந்து மாதங்கள் டெல்லி முழுவதும் சுற்றித் திரிந்து பலரைச் சந்தித்தனர்.
“உங்களுக்கு அன்றாடம் இருக்கும் பெரிய தலைவலி எது?” என்று மக்களிடம் கேட்டார்கள். எலக்ட்ரீஷியன் வராதது, ஏசி மெக்கானிக் ஏமாற்றுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள்தான் மக்களின் நிம்மதியைக் கெடுக்கின்றன என்பது அந்த சந்திப்பில் அவர்களுக்கு புரிந்தது.
வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன பழுதுகளைச் சரிசெய்ய ஆள் கிடைப்பதில்லை என்பதுதான் மக்கள் தெரிவித்த முக்கிய புகார்களில் ஒன்று. இன்னும் சிலர் சலூன் சேவைகள் குறித்துப் புகார்களைத் தெரிவித்தனர்.
உண்மைதான், அப்போது இந்தியாவில் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தன. ஆனால், ஒரு எலக்ட்ரீஷியனையோ அல்லது ஒரு பிளம்பரையோ தேடுவது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒருவரை அழைத்தால் அவர் சரியான நேரத்திற்கு வரமாட்டார், தரமான வேலையைச் செய்வாரா என்பது தெரியாது, மேலும் அவர் கேட்கும் கூலி நியாயமானதா என்பதும் புரியாது.
நம்பிக்கையான பிளம்பர், எலக்ட்ரீஷியன் கண்டுபிடிப்பது பெரும்பாலும் மோசமான அனுபவம் நிறைந்ததாக நகர்ப்புற மக்கள் குமுறிக்கொண்டிருந்தனர். அப்படியே அவர்களை கண்டுபிடித்தாலும் சேவை தரத்தில் நிலைத்தன்மை இல்லை. மறுபுறம், திறமையான வேலையாட்கள் நிலையான வேலையைக் கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்தனர். இந்த எல்லாச் சிக்கல்களையும் இணைத்துப் பார்த்தபோதுதான், ‘வீடு தேடி வரும் Home Services சேவை’ என்ற ஐடியா அவர்கள் கண் முன்னே வந்து நின்றது.
பெரும்பாலான ஸ்டார்ட்அப்கள் பொருட்களை விற்க நினைக்கும்போது, இவர்கள் ‘சேவை’யை விற்க நினைத்தார்கள். 2010 வாக்கில் இந்தியாவில் சேவைத் துறை மிகவும் சிதறிப் போய் இருந்தது. ஒரு பிளம்பருக்கு சரியான வருமானம் இல்லை, அதேசமயம் வாடிக்கையாளருக்கு சரியான சேவை இல்லை. இந்த இரண்டு முனைகளையும் இணைப்பதுதான் தங்களின் பலம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான வீட்டு சேவைகளை ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யக்கூடிய ஒரு சந்தையை உருவாக்குவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும் என்று உறுதியாக நம்பினர். அதன் விளைவாகப் பிறந்ததுதான் ‘அர்பன் கிளாப்’ (UrbanClap). பின்னாளில் இதுவே ‘அர்பன் கம்பெனி’ எனப் பெயர் மாற்றப்பட்டது.
கியரை மாற்றுதல்....
தொடக்கத்தில், ‘அர்பன் கிளாப்’ வெறும் ஒரு ‘லிஸ்டிங்’ தளமாக மட்டுமே இருந்தது. அதாவது, வாடிக்கையாளர்களையும் சேவை செய்பவர்களையும் இணைக்கும் ஒரு பாலம் மட்டுமே. ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. சேவை செய்பவர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டாலும், சேவையின் தரம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்னும் புரியும்படியாக சொன்னால், தொடக்கத்தில் அர்பன் கிளாப் எலக்ட்ரீஷியன், பிளம்பர்களின் சேவை எண்களை மட்டுமே வழங்கியது. ஆனால், அவர்கள் அளிக்கும் சேவையில் தரம் இல்லை என்பதை மூவரும் உணர்ந்தனர்.
நிறுவனத்தை ஆரம்பித்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட சிக்கல் இது. இந்த சிக்கல் அவர்களின் வருவாயில் பாதிப்பை தந்தது. இதனால் யுக்தியை மாற்றினர். வாடிக்கையாளருக்கும் சேவை செய்பவருக்கும் இடையில் ஒரு பாலமாக மட்டும் இருக்காமல், சேவையின் முழுப் பொறுப்பையும் ‘அர்பன் கிளாப்’ நிறுவனமே ஏற்றுக்கொண்டது.
வெறும் இடைத்தரகராக இருக்காமல், தங்களது தளத்தில் இணையும் ஒவ்வொரு எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பரை நேர்காணல் செய்து, அவர்களுக்குத் தரமான பயிற்சி அளித்தார்கள்.
“தாங்கள் அனுப்பும் ஆள் தரமானவர்” என்ற உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களிடம் வழங்கினார்கள். இதுவே அவர்களைத் தனித்து காட்ட தொடங்கியது. சீருடை அணிந்த பணியாளர்கள், நிலையான கட்டணம், தரமான பொருட்கள் என அனைத்தும் அர்பன் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இது வாடிக்கையாளர் நம்பிக்கையை பலப்படுத்தியது. அதன் பிறகு நிறுவனம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.
“ஒரு பிசினஸ் வெற்றி பெற வேண்டுமானால், அது வாடிக்கையாளரின் ஒரு பெரிய சிக்கலைத் தீர்க்க வேண்டும். அந்தத் தீர்வை யாராலும் நகலெடுக்க முடியாத அளவுக்குத் தரமானதாக மாற்ற வேண்டும்,” - அபிராஜ் சிங் பால்
ராகவ் சந்திராவின் தொழில்நுட்ப திறனுடன் யுக்தியை வடிவமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் ஆன அபிராஜ் மற்றும் வருண் இணைந்து ஒரு புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதுதான் பணியாளர்களுக்கு பங்குகள் வழங்குவது. சிறந்த முறையில் பணிபுரியும் பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் அழகுக் கலை நிபுணர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை வழங்கினர்.
‘இது நம்ம கம்பெனி’ என்ற எண்ணம் பணியாளர்கள் மத்தியில் உருவானது. இதனால் சேவையின் தரம் தானாகவே உயர்ந்தது. இதுவரை சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்குகளைத் தனது பார்ட்னர்களுக்கு அர்பன் கம்பெனி வழங்கியுள்ளது.
இந்தியாவில் பலருக்கும் வேலை தெரியும், ஆனால் 'தொழில்முறை ஒழுங்கு' குறைவாக இருந்தது. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பயிற்சி மையங்களை அமைத்து, ஒரு நிபுணர் வாடிக்கையாளர் வீட்டிற்குச் சென்றால் எப்படிப் பேச வேண்டும், எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதற்குப் பயிற்சி அளித்தனர். இப்படியாக சந்தையில் இருக்கும் சாதாரண வேலை ஆட்களுக்கும், அர்பன் கம்பெனி நிபுணர்களுக்கும் இடையே ஒரு பெரிய தர வித்தியாசத்தை உருவாக்கினர்.
அர்பன் கம்பெனியின் வெற்றியின் ரகசியம் அதன் தொழிலாளர்கள்தான். இவர்கள் அவர்களை வெறும் வேலையாட்களாகப் பார்க்காமல், ‘சிறிய தொழில்முனைவோர்’களாக மாற்றினார்கள். ஒரு சாதாரண எலக்ட்ரீஷியன் முன்பை விட இருமடங்கு வருமானம் ஈட்டும் சூழலை உருவாக்கினார்கள். இந்த அணுகுமுறை அதிகப்படியான திறமையான தொழிலாளர்களை அர்பன் கம்பெனி நோக்கி ஈர்த்தது. அதேநேரம் மக்களிடம் நன்மதிப்பையும் அர்பன் கம்பெனி பெற்றது.
முதலீடு...
ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000 கோடி) சந்தை மதிப்பை எட்டும்போது அது ‘யூனிகார்ன்’ என்று அழைக்கப்படும். அர்பன் கம்பெனி இந்த இலக்கை அடையப் பல படிகளைக் கடந்தது.
ரத்தன் டாடா, டைகர் குளோபல் மற்றும் ஸ்டெட்ப்வியூ போன்ற பெரிய முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்தனர்.
முதலீடுகள் அதிகரிக்க டெல்லி, பெங்களூரு எனத் தொடங்கி மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் விரிவடைந்தது அர்பன் கம்பெனி. பின்னர் துபாய், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சவூதி அரேபியா என சர்வதேச சந்தையிலும் தடம் பதித்ததது.
2020-ல் ‘அர்பன் கிளாப்’ என்ற பெயரை ‘அர்பன் கம்பெனி’ என மாற்றினார்கள். உலகளாவிய சந்தைக்கு இது எளிமையாகவும், பிராண்ட் ரீதியாக வலுவாகவும் இருக்கும் என கருதி இம்முடிவை எடுத்தனர்.
ஜூன் 2021-ல் இந்நிறுவனம் சுமார் 255 மில்லியன் டாலர்களைத் திரட்டியது. இதன் மூலம் அர்பன் கம்பெனியின் மதிப்பு 2.1 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ‘யூனிகார்ன்’ கிளப்பில் இணைந்தது. இதுவரை சுமார் 470 மில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.3,900 கோடிக்கும் மேல் முதலீட்டைத் திரட்டியுள்ளது. அர்பன் கம்பெனியின் நிதி நிலை கடந்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலிருந்து, லாபத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வரும் நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. இந்நிறுவன வருவாயில் பெரும் பகுதி சுமார் 90% இந்தியா மூலமாகவும், மீதமுள்ளவை ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற சர்வதேச சந்தைகள் மூலமாகவும் கிடைக்கிறது.
அர்பன் கம்பெனி இரண்டு வழிகளில் பணம் ஈட்டுகிறது. ஒன்று கமிஷன், இன்னொன்று பொருட்கள் விற்பனை. ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு சேவையைப் புக் செய்யும் போதும், அந்தத் தொகையில் 20% முதல் 30% வரை நிறுவனம் கமிஷனாக எடுத்துக்கொள்கிறது. அதேபோல், சேவை செய்ய வரும் நிபுணர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை (உதாரணமாக ஃபேஷியல் கிட்கள், ஸ்பேர் பார்ட்ஸ்) நிறுவனமே மொத்தமாக வாங்கி அவர்களுக்கு விற்கிறது. இதன் மூலமும் லாபம் ஈட்டுகிறது.
அபிராஜ் சிங் பால் மற்றும் குழுவினர் அடுத்த ஒன்றிரெண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே தற்போது நஷ்டத்தைக் குறைத்து லாபகரமான நிறுவனமாக மாற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இன்று அர்பன் கம்பெனி வெறும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளோடு நின்றுவிடவில்லை. அழகுக் கலை, வீட்டைச் சுத்தப்படுத்துதல், பெயின்டிங், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்த்தல் என ஒரு முழுமையான ‘ஹோம் சர்வீஸ்’ நிறுவனமாக வளர்ந்துள்ளது.
தங்கள் சேவைகளால் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கியதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கௌரவமான வாழ்வாதாரத்தையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. அர்பன் கம்பெனியின் இந்த வளர்ச்சிக் கதை, ஒரு சாதாரணத் தேவையைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சரியான முறையில் பூர்த்தி செய்தால் எவ்வளவு பெரிய வெற்றியை அடையலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
இன்று அபிராஜ் சிங் பால் இளம் தொழில்முனைவோருக்குச் சொல்லும் அறிவுரை இதுதான்...
“பெரிய அளவில் யோசியுங்கள், ஆனால் மிகச் சிறிய இடத்திலிருந்து உங்கள் வேலையைத் தொடங்குங்கள்.”
யுனிக் கதை தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 50: ShareChat - மும்மூர்த்திகள் போராடி வெற்றி நிறுவனத்தை நாட்டிய கதை!