சென்னை டு கோவா: 1,000 கிமீ ஆட்டோ பயணத்தை தொடங்கிய 35 இங்கிலாந்து பெண் தொழில்முனைவோர்கள்!

06:00 PM Mar 06, 2026 | Chitra Ramaraj

இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண் தொழில்முனைவோர், மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் முயற்சியாக, சென்னை டு கோவா வரை, சுமார் 1,000 கிமீ ஆட்டோ சவாரியை சென்னையில் இருந்து மேற்கொண்டுள்ளனர்.

‘லெட்ஸ் கோவா 2026 – ரிக்க்ஷா ரேலி’ (Let’s Goa 2026 Rickshaw Rally) என்று பெயரிடப்பட்ட இந்த ரேலியானது, இங்கிலாந்தைச் சேர்ந்த சிஸ்டர்ஹுட் குழுவால் (Sisterhood Group) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2வது ஆண்டாக சவால் பயணம்

கடந்தாண்டு (2025) மெட்ராஸ் மிட் டவுன் ரவுண்ட் டேபிள் 42 (MMRT42) மற்றும் மெட்ராஸ் மிட் டவுன் லேடீஸ் சர்க்கிள் 7 (MMLC7) ஆகியவற்றுடன் இணைந்து, இதே போன்றதொரு பயணத்தை சென்னையில் இருந்து இங்கிலாந்து தொழில்முனைவோர் ஆரம்பித்தனர். அப்போது அதில் சுமார் 70 தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுப்பயணமாக இல்லாமல், சாகசத்தையும் அடிமட்ட தாக்கத்தையும் இணைக்கும் ஒரு ஆழமான, நேரடி அனுபவமாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து, இந்தாண்டும் அதே போன்றதொரு பயணத்தை இங்கிலாந்து தொழில்முனைவோர் இந்தியாவில் மேற்கொண்டுள்ளனர். அதில் சிஸ்டர்ஹுட் குழுவைச் சேர்ந்த சுமார் 35 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 14 ஆட்டோக்களில் குழுக்களாகப் பிரிந்து, சென்னையில் இருந்து கோவாவிற்கு 1,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

‘லெட்ஸ் கோவா 2026 ரிக்‌ஷா பேரணி’ என்று பெயரிடப்பட்ட இந்த சவாலானப் பயணம், தமிழ்நாட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆதரிக்கும் முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, MMRT42ன் தலைவர் சித்தார்த் சங்கர் கூறுகையில்,

“சென்னையிலிருந்து கோவா வரையிலான இந்த 1,000 கிலோமீட்டர் பயணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ரூ.1-3 கோடி வரை நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

சிஸ்டர்ஹுட் குழுமம் இங்கிலாந்து மட்டுமின்றி, உலகளவிலும் நிதி திரட்டி வருகிறது. கடந்தாண்டு எங்கள் குழுவிற்கு கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, இந்தாண்டும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மாலையும், அவர்கள் நாங்கள் ஏற்பாடு செய்த இடங்களில் தங்குவார்கள். தங்களது பயணங்களுக்கு இடையில் தங்களது திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வகையில் சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்கிறார்.

பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கான முயற்சி

2006ம் ஆண்டு நிறுவப்பட்ட சிஸ்டர்ஹுட் குரூப்பானது, சவால் நிறைந்த தொண்டு நிறுவனமாக தனது அடையாளத்தை உருவாக்கியுள்ளது. அதன் நிறுவனரான எம்மா சேல், ‘இந்த மாதிரியான சவாலான பயணங்கள், உடல் ரீதியான சவாலாக மட்டுமல்லாமல், மன ரீதியான சவாலையும் உள்ளடக்கியது,’ என்கிறார்.

மேலும் அவர்,

“இந்தியா, ஒரு இயற்கையான தேர்வாக இருந்தது. அதன் அளவு, பன்முகத்தன்மை மற்றும் அடிமட்ட மட்டத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவை அதை நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. ரிக்‌ஷா பேரணி இங்கு அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. MMRT42 மற்றும் MMLC7 போன்ற அமைப்புகளுடன் கூட்டு சேர்வது, திரட்டப்பட்ட நிதி அளவிடக்கூடிய தாக்கமாக மாற்றப்படுவதை உறுதி செய்கிறது. லெட்ஸ் கோவா 2026 ரிக்‌ஷா பேரணி மூலம், நிதி திரட்டலுக்கு அப்பால் சென்று, பெண்களின் உடல்நலம், திறன் மற்றும் பொருளாதார சுதந்திரத்தைச் சுற்றி நிலையான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம்," எனக் கூறுகிறார் எம்மா சேல்.

இந்தப் பேரணிக்கான நன்கொடைகளை சிஸ்டர்ஹுட் பேரணி 2026 ஆன்லைன் போர்டல் மூலம் வழங்கலாம். ஒவ்வொரு பங்களிப்பும் தங்களது திட்டங்களை வலுப்படுத்துவதை நோக்கிச் செல்லும் என்கிறது சிஸ்டர்ஹுட்.