37 ஆண்டுகள் சமூகப்பணி: ‘பத்மபூஷன்’ விருது பெறும் தொழிலதிபர் SKM மயிலானந்தனின் கதை!

06:00 PM Feb 11, 2026 | Chitra Ramaraj

கால்நடைத் தீவனம், கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி மற்றும் சித்தா/ஆயுர்வேத மருந்துகள் என பன்முக தொழில்களைக் கொண்ட வணிகக் குழுமமான எஸ்.கே.எம் (SKM) குழும நிறுவனர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு 2026ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தக் குழுமத்தை, 1980-களின் முற்பகுதியில் மயிலானந்தன் என்பவரால் தொடங்கினார். தொழில் வளர்ச்சி மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த வணிகங்களில் தரம் மற்றும் சமூக சேவைக்கும் மயிலானந்தன் முக்கியத்துவம் அளித்து, செயல்பட்டு வருகிறார்.

அவரது இந்த பன்முக சமூகசேவையைப் பாராட்டி, இந்தாண்டிற்கான பத்மபூஷன் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய அங்காடி குழுமமாக மாறிய வரலாறு

1945ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மயிலானந்தன். பள்ளிப் படிப்பை முடித்த அவர், 1966ம் ஆண்டு ஈரோட்டில் ஒரு சிறிய பொது அங்காடியைத் தொடங்கினார்.

தனது கடின உழைப்பு மூலம் படிப்படியாக, கோழி வளர்ப்பு, ஆயுர்வேத மருந்துகள், உரம் விநியோகம், கால்நடை தீவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பில்லியன் வணிகக் குழுவான எஸ் கே எம் குழுமமாக அதனை வளர்த்தெடுத்தார். 1980ம் ஆண்டு இந்த எஸ்.கே.எம். குழுமம் ஆரம்பமானது. சமையல் எண்ணெய், சித்தா/ஆயுர்வேத மருந்துகள் மற்றும் கோழிப்பண்ணை தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த குழுமம், தரம் மற்றும் தொழில் நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றது.

1983ம் ஆண்டு, கோழிப்பண்ணை விவசாயிகளுக்கான நலச் சங்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவரானார் மயிலானந்தன். வணிகர்களால் தொடர்ந்து பின்பற்றப்படும் நவீன கிராமப்புற சந்தைப்படுத்தல் பண்டமாற்று முறையை அவர் முன்னோடியாகக் கொண்டு, கிராமப்புறங்களில் படித்த மற்றும் படிக்காத மக்களிடையே சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். இதன்மூலம் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைத்தது.

சந்தைப்படுத்தல் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்யவும், கோழி நோய்களைத் தடுக்கவும், கோழிப் பண்ணையாளர்களுக்கு கல்வி கற்பிக்கவும் 150க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை இதுவரை மயிலானந்தன் ஏற்பாடு செய்துள்ளார். குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாநில அரசின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளைச் சேர்ப்பதிலும் அவரது பங்கு இன்றியமையாதது.

இதுதவிர கடந்த 33 ஆண்டுகளாக ஈரோடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் (CPC) தலைவராகப் பணியாற்றி வருகிறார். மாவட்டத்தில் உள்ள 299 கிராம பஞ்சாயத்துகளிலும் CPC துணை மையங்களையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களையும் கொண்டுள்ளது. 1993ம் ஆண்டு, இந்திய அரசு CPCக்கு தேசிய சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் விருதை வழங்கி கௌரவித்தது.

பத்மஸ்ரீ விருது பெற்ற போது

தலித் கிராமங்களுக்கு உதவி

சிறந்த தொழில்முனைவோராக மட்டுமல்லாமல், சமூகப் பணிகளுக்கும் பேர் போனவர் மயிலானந்தன். 1999ம் ஆண்டு ஈரோடு அருகே சாமிநாதபுரத்தில் உள்ள ராஜீவ் நகர் மற்றும் காந்திநகர் என்ற இரண்டு தலித் கிராமங்களைத் தத்தெடுத்து, அந்த கிராமத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்து வருகிறார். இந்த இரண்டு கிராம மக்களின் திருமணம், பிரசவம் மற்றும் இறுதிச்சடங்கு போன்றவற்றிற்கும் தேவையான நிதியுதவிகளையும் மயிலானந்தனே செய்து வருகிறார்.

ஆனந்தமாக, ஆரோக்கியமாக மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் வாழ வேண்டும் என்ற வேதாத்திரி மகரிஷியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் மயிலானந்தன், கடந்த 37 ஆண்டுகளாக உலக சமூக சேவை மையத்தின் (WCSC) தலைவராக இருந்து மதிப்பு அடிப்படையிலான கலாச்சாரக் கல்வியைப் பரப்பி வருகிறார். அதன்மூலம், சுமார் 2.51 லட்சம் மாணவர்கள் பல்வேறு படிப்புகளைப் பெற்றுள்ளனர். WCSCன் 'கிராம சேவைத் திட்டத்தின்' கீழ், யோகா, தியானம் மற்றும் ஒழுக்க நெறிகள் கற்றுத் தரப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 389 கிராமங்கள் இதற்கென தத்தெடுக்கப்பட்டுள்ளன, இதனால் சுமார் 1.50 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

மயிலானந்தனின் இந்த சமூகப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில், கடந்த 2013ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இது தவிர பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தற்போது அவரது மகுடத்தில் மற்றொரு வைரமாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.