
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் சென்னை நந்தனம் சி.எம்.ஆர்.எல். தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற ’வெல்வோம் ஒன்றாக’ நிகழ்வில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 144 பயனாளிகளுக்கு மொத்தம் ₹7.21 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் 100 கிராமங்களைத் தேர்வு செய்து, அப்பகுதிகளில் 100 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில் “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக, கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 62 புத்தொழில் முனைவோருக்கு தலா ₹1 லட்சம் வீதம், மொத்தம் ₹62 லட்சம் நிதியை அமைச்சர் வழங்கினார். இதன் மூலம் கிராம அடிப்படையிலான தொழில்முனைவுத் திறன் மேம்பட்டு, உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் முக்கிய திட்டமான தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் செயல்படுத்தும் “தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED)” திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு மொத்தம் ₹2.9 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளும் வழங்கப்பட்டன. தொடக்கநிலை நிறுவனங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு நகர உதவும் வகையில் இந்த நிதி பயன்படும்.
“தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான நிதி உதவி” திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உருவான தொழில்நுட்பங்களை வர்த்தகமயமாக்கும் நோக்கில் தேர்வு செய்யப்பட்ட 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ₹2.48 லட்சம் ஊக்கத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தொழில்நுட்ப மாற்று மையம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தொழில்நுட்பக் கையகப்படுத்தல் அல்லது உரிமம் பெறுதல் செலவில் 50 சதவீதம், அதிகபட்சம் ₹5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள 39 நிறுவனங்களுக்கு ஆதார தொழில் வளர் காப்பகங்கள் அமைப்பதற்காக தலா ₹7.5 லட்சம் வீதம் மொத்தம் ₹2.92 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளும் வழங்கப்பட்டன. இதுவரை மாநிலம் முழுவதும் 87 தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காப்பகங்களின் திறன் மேம்பாட்டிற்காக 2025 டிசம்பரில் ஊட்டியில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்று வெற்றிகரமாக முடித்த 86 மேலாளர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தொழில் வளர் காப்பகங்களுக்கு தலா ₹5 லட்சம் வீதம் மொத்தம் ₹75 லட்சம் நிதி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆராய்ச்சி திட்டங்களின் வர்த்தகமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரின் முன்னிலையில் பரிமாறப்பட்டது.
மேலும், “Tamil Nadu Incubators Maturity Model (TNIMM) 2.0” கட்டமைப்பை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். Ailaysa AI நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆழி செந்தில் நாதன் ‘இனி எல்லாத் தொழிலும் AI தொழிலே!’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அமர்வை வழங்கினார்.
நிகழ்வில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் புத்தாக்கத்தையும் தொழில்முனைவையும் வலுப்படுத்தும் பல்வேறு முயற்சிகளின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக இந்நிகழ்வு அமைந்தது.