போலி மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் தேவை என்ற கருத்தில் மத்திய அரசு இருப்பதாகவும், இதுகுறித்து தொழில்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் உள்ளடக்கங்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் நீக்க நடவடிக்கைகள் ‘டீப் ஃபேக்’ (Deep Fake) உள்ளடக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், உண்மையான கருத்துகள் அல்லது படைப்பாற்றல் உள்ளடக்கங்களை ஒடுக்குவது போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, என்றும் அவர் கூறினார்.
அண்மையில் சில யூடியூப் சேனல்களின் காணொளிகள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், ஆன்லைன் இயக்கமான Cockroach Janata Party-யின் தலைவர் அபிஜித் திப்கே, சிபிஎஸ்இ மதிப்பீட்டு பிழையால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆதரவாக வெளியிட்ட தனது காணொளி அரசின் கோரிக்கையின் பேரில் நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், சமூக ஊடகங்களில் பகிரப்படும் உண்மையான போராட்டக் காணொளிகள் நீக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றார்.
“நிச்சயமாக இல்லை. எங்கு போலி காணொளிகள் இருக்கிறதோ, அவற்றை அகற்றுவது அரசின் கடமையும் பொறுப்புமாகும். குறிப்பாக, தவறான செய்திகளை பரப்பும் டீப் ஃபேக் காணொளிகள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவை அகற்றப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையே சமூகத்தின் அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். நாம் பார்க்கும் தகவல் உண்மையா, பொய்யா, அது உண்மையான உள்ளடக்கமா அல்லது டீப் ஃபேக்கா என்பதை உறுதிப்படுத்தும் நம்பிக்கையை பல்வேறு தொழில்நுட்ப முறைகள் மூலம் மேம்படுத்த வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஒருவர் அடிப்படையில் உருவாக்கப்படும் மொத்த உள்ளடக்கங்களுடன் ஒப்பிடும்போது, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் டீப் ஃபேக் உள்ளடக்கங்களின் அளவு மிகவும் குறைவானது,” என்று வைஷ்ணவ் கூறினார்.
போலி மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ள புதிய சட்டம் தேவைப்படுவதாக அரசாங்கம் கருதுவதாகவும், இதுகுறித்து தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules) திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், போலிச் செய்திகள் யாரால் உருவாக்கப்பட்டாலும் அவை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதாக கூறினார். இந்த திருத்தம், செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான உள்ளடக்கங்களை ஆன்லைனில் பகிரும், பதிவு செய்யப்பட்ட பதிப்பாளர்கள் அல்லாத பயனர்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு, தடை மற்றும் நீக்க அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது.
“கேள்வி மிகவும் எளிமையானது. போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர அனுமதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் முக்கியம். அதை யார் உருவாக்கினார்கள் என்பது ஒருபோதும் விவாதத்தின் மையமாக இருக்கவில்லை. ஒரு செய்தித்தாள் போலிச் செய்தியை வெளியிட்டாலும் சரி, வேறு யாரேனும் வெளியிட்டாலும் சரி, அது போலிச் செய்தி என்றால் அது அகற்றப்பட வேண்டும்,” என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஆனால், எது போலிச்செய்தி எது உண்மைச் செய்தி என்று தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடத்தில் உள்ளது? உண்மையைப் போலி என்று நீக்கி விட்டு போலியை உண்மை என்று அனுமதி அளிக்கும் போக்கும் உண்டாகுமே என்ற இந்தத் துறை சார்ந்த நிபுணர்களின் கேள்விக்கு அமைச்சரிடத்தில் பதில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.