+

'குழந்தைகளை வைத்து வரும் பாலியல் உள்ளடக்கங்களை தடுக்க தீவிரமாக செயல்படுகிறோம்' - Meta விளக்கம்

மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களிலேயே, குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை (CSAM) தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மெட்டா (Meta) செவ்வாய்க்கிழமை விரிவாக விளக்கம் அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் சந்தேகத்திற்கிடமா

மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களிலேயே, குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை (CSAM) தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மெட்டா (Meta) செவ்வாய்க்கிழமை விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் சந்தேகத்திற்கிடமான கணக்குகளை கண்டறிதல், விதிமுறைகளை மீறும் விளம்பரங்களை அகற்றுதல் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட வலைப்பதிவில், குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டுவது 'மிகவும் கொடூரமான குற்றம்' என்று குறிப்பிட்ட மெட்டா, தனது தளங்களிலும் அவற்றுக்கு வெளியேயும் நடைபெறும் இத்தகைய குற்றங்களை தினந்தோறும் தீவிரமாக எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளது.

"இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் குழுக்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், விதிமுறைகளை மீறும் இணைப்புகளைத் தடை செய்தல், துறையெங்கும் உளவுத்தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் எங்களின் பாதுகாப்பு அமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. இருப்பினும், இன்னும் செய்ய வேண்டியவை இருப்பதை நாங்கள் அறிவோம். இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், விளம்பர ஆய்வு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களிலும் வளங்களிலும் தொடர்ந்து முதலீடு செய்வோம்," என்று மெட்டா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல் கொள்கைகளை மீறும் விளம்பரங்கள் வெளியானதாக சமீபத்தில் வெளியான செய்திகள் குறித்து தங்களுக்கு முழு கவலை இருப்பதாகவும்,

Meta has poached Apple AI search lead Ke Yang amid talent tussle
"இத்தகைய உள்ளடக்கங்கள் எங்கள் தளங்களில் இடம்பெறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. இதைத் தடுக்கும் எங்களின் முயற்சிகளை தொடர்ந்து மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்," என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், குழந்தைகள் இடம்பெறும் விளம்பரங்களை தவறான விருப்பம் கொண்ட நபர்களுக்கு மெட்டா திட்டமிட்டு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

"அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. அதற்கு நேர்மாறாக, குழந்தைகள் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய கணக்குகளை கண்டறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய 40 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தானாகவே நீக்கினோம்," என்று மெட்டா தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலைக் கண்டறியும் AI அமைப்புகள் தற்போது உலகளவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களில் 98 சதவீதம் பேர் பேசும் மொழிகளை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உலகளவில் 40 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான கணக்குகளும், 3.6 கோடி குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களும் அகற்றப்பட்டதாக மெட்டா கூறியுள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் சுரண்டல் தொடர்பான சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைப் பகிர்ந்ததாகக் கண்டறியப்பட்ட 1.6 லட்சம் கணக்குகள் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்கு வருவதற்கு முன்பே, விதிமுறைகளை மீறிய பல விளம்பரங்களையும் அவற்றை வெளியிட்ட கணக்குகளையும் தங்களது தானியங்கி கண்காணிப்பு அமைப்புகள் கண்டறிந்து முடக்கியதாக மெட்டா கூறியுள்ளது.

"அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கூடுதல் விளம்பரங்கள் அகற்றப்பட்டன; சம்பந்தப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன; கொள்கைகளை மீறும் இணைய இணைப்புகளும் தடை செய்யப்பட்டன," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்டாவின் கீழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்கள் செயல்பட்டு வருகின்றன.

"பிற இணையதளங்களுக்கான சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைப் பகிரும் நபர்களை, குழந்தைகள் சுரண்டல் தொடர்பான பிற அறிகுறிகளுடன் இணைத்து கண்டறியும் மேம்பட்ட AI அமைப்புகளை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன," என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மெட்டாவின் அதிகாரப்பூர்வ பதில் இன்னும் வரவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிறுவனம் மேற்கொண்டுள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினையை சரிசெய்ய எடுத்துள்ள முயற்சிகளில்தான் அரசின் கவனம் இருக்கும் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.

கடந்த வாரம், குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை (CSEAM) விளம்பரங்களின் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மெட்டாவுக்கு கடுமையான நோட்டீஸ் அனுப்பியது. இத்தகைய விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றுமாறும், ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிர்வாகத்தை ஆஜராகுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு முன்பு வெளியான பிபிசி விசாரணை அறிக்கையில், மெட்டாவின் பரிந்துரை அல்காரிதம் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்கள் கொண்ட வீடியோக்களை பரிந்துரைத்ததாகவும், பாதுகாப்பு நடைமுறைகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், நிறுவனத்தின் விளம்பரக் கொள்கைகளுக்கு எதிரான வகையில் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெற்றதாகவும் அந்த விசாரணை சுட்டிக்காட்டியது. குறிப்பாக, "rape video", "child video" போன்ற சொற்களுடன் வெளியான கட்டண விளம்பரங்கள், அத்தகைய சட்டவிரோத உள்ளடக்கங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் டெலிகிராம் சேனல்களுக்கு பயனர்களை வழிநடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மெட்டா, தனது விளம்பர ஆய்வு நடைமுறையில் தானியங்கி AI அமைப்புகளும், மனித ஆய்வாளர்களும் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், "எந்த அமைப்பாலும் அனைத்து விதிமீறல்களையும் நூறு சதவீதம் கண்டறிய முடியாது," என்பதையும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பே அவை ஆய்வு செய்யப்படுவதுடன், வெளியான பிறகும் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படுகின்றன. விதிமீறல்கள் இருப்பதாக பயனர்களும் புகார் அளிக்க முடியும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட விளம்பரங்களை மட்டுமல்லாமல், விளம்பரதாரர்களின் செயல்பாடுகளையும் கண்காணிப்பதாகக் கூறிய நிறுவனம், விதிமுறைகளை மீறுபவர்களின் விளம்பரக் கணக்குகள், வணிகக் கணக்குகள், பேஜ்கள் மற்றும் பயனர் கணக்குகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவோ அல்லது அவை முடக்கப்படவோ செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

"தீய நோக்கத்துடன் செயல்படுபவர்களை எங்கள் தளங்களிலிருந்து விலக்கி வைப்பதற்காக எங்கள் அமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். எங்கள் விளம்பரத் தரநிலைகளை உருவாக்குவதிலும் அமல்படுத்துவதிலும் பயனர்களின் பாதுகாப்பே முதன்மையானதாக உள்ளது," என்று மெட்டா தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நிர்வாணம், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பாக நிறுவனத்துக்கு "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" (Zero Tolerance) கொள்கை இருப்பதாகவும், குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்களை பகிர்வது அல்லது கோருவது, சிறார்களுடன் பொருத்தமற்ற தொடர்புகளை ஏற்படுத்துவது, அவர்களை பாலியல் ரீதியாக சித்தரிப்பது உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

"எங்கள் விளம்பரத் தரநிலைகளின்படி, அனைத்து விளம்பரங்களும் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாணம் தொடர்பான சமூக விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும். குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டும் அல்லது ஆபத்துக்குள்ளாக்கும் எந்த உள்ளடக்கமும் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது," என்று மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல் சம்பவங்கள் கண்டறியப்பட்டால் அவற்றை அமெரிக்காவின் National Center for Missing and Exploited Children (NCMEC) அமைப்பின் மூலம் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு தெரிவிப்பதாகவும், உலகளாவிய மற்றும் இந்தியாவுக்கான வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி தலைமை இணக்க அதிகாரி (Chief Compliance Officer), குறைதீர் அதிகாரி (Grievance Officer), ஒருங்கிணைப்பு அதிகாரி (Nodal Contact Person) ஆகியோரை நியமித்திருப்பதாகவும், தன்னுடைய தளங்களைத் தாண்டியும் ஆன்லைன் குழந்தைகள் சுரண்டலைத் தடுக்கும் முயற்சிகளில் சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகளை குறிவைக்கும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையே பகிரும் Lantern திட்டத்தின் நிறுவன உறுப்பினராக செயல்பட்டு வருவதாகவும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருக்கும் மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கான இணைப்புகளைத் தடுக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

facebook twitter