
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில் முனைவோர் அமைப்பு மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு ஆகியவற்றுடன் இணைந்து, கோவையின் இரத்தினம் கல்வி குழுமத்தின் AIC RAISE, ஜெனிஸிஸ் நெக்ஸ்ட் ஜென் ஸ்டார்ட் அப் மாநாடு (GENESIS NextGen Startup Summit) கோவை பதிப்பை அண்மையில் இரத்தினம் கிராண்ட் ஹாலில் நடத்தியது.
இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் தொழில்முனைவோர் சூழலைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் சிறப்புரை ஆற்றினார். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில் முனைவோர் அமைப்பு தலைமை நிர்வாக இயக்குனர் பன்னீர் செல்வம் மதனகோபால், ஜெனிஸிஸ் திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகளை விளக்கினார். தமிழ்நாடு ஸ்டார்ட் அப் துணைத்தலைவர் பிரேம்குமார் ஸ்டார்ட் அப் சூழலை வலுவாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விளக்கினார்.

மேலும், இரத்தினம் நிகர்நிலை பல்கலை வேந்தர் மதன் ஏ.செந்தில் சிறப்புரையாற்றினார்.
இரத்தினம் கல்விக்குழுமம் துணைத்தலைவர் மாணிக்கம் ராமசாமி, இரத்தினம் குழுமம் மற்றும் ஏஐசி ரைஸ் துணைத்தலைவர் நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் ஜெனிஸிசின் தொழில்முனைவோருக்கான தொழில்முறை உறைவிட பயிற்சி 3.0, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தொழில்முனைவோர் அறிவுசார் சொத்துரிமை மையம் மற்று ஜெனிஸிஸ் ஐடியா வேர்ல்டு ஆகிய மூன்று புதிய முயற்சிகள் துவக்கி வைக்கப்பட்டன.
அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம் சார் நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, மேம்பட்ட உற்பத்தி, உள்ளிட்ட தலைப்புகளில் உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் 50க்கும் மேலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகளை காட்சிப்படுத்தினர். பார்வையாளர்கள், மற்றும் முதலீட்டாளர்கள் அவர்களுடன் உரையாடினர்.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அரசு அமைப்புகள், இன்குபேட்டர்கள், மற்றும் கல்வி நிறுவனங்களிடையே முதலீடு வாய்ப்புகள், புரிந்துணைர்வு ஒப்பந்தங்கள் உருவாகும் தளமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விளக்கும் பகுதியும் இடம்பெற்றது.
Edited by Induja Raghunathan