
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் சி.இ.ஓ.சுந்தர் பிச்சைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 692 மில்லியன் டாலர் சம்பளம் (சுமார் 6,200 கோடி ரூபாய்) வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரி என்றும் சிறப்பை அவர் பெறுகிறார்.
தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனத்தை சுந்தர் பிச்சை திறம்பட வழி நடத்தி வருகிறார். இந்நிலையில், கூகுளின் தாய் நிறுவனம், சுந்தர் பிச்சையின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுந்தர் பிச்சைக்கு 692 மில்லியன் டாலர் சம்பளம் வழங்க கூகுள் தீர்மானித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பிடம் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
எனினும், இது வழக்கமான சம்பளமாக இல்லாமல், நிறுவன பங்குகள் வாயிலாக அமைந்திருக்கும். மேலும், நிறுவன செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப இது அமைந்திருக்கும் என்றும் தெரிகிறது. நிறுவனம் அதிகம் வளர்ச்சி அடைந்து பங்குகள் உயர்ந்தால், அவரது சம்பளமும் அதற்கேற்ப உயரும்.
ஆல்பபெட் கீழ் இயங்கும் இரண்டு துணை நிறுவனங்களான வெமோ மற்றும் விங்க் உள்ளிட்ட நிறுவனங்களில் சுந்தர் பிச்சனைக்கு பங்குகள் ஒதுக்கப்படும், என தெரிகிறது. இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் தலைமை அதிகாரி எனும் சிறப்பையும் சுந்தர் பிச்சை பெறுகிறார்.
ஒப்பீடு அளவில், சராசரி கூகுள் ஊழியரின் சம்பளத்தை விட சுந்தர் பிச்சைக்கு ஆண்டுக்கு 700 மடங்கு அதிக சம்பளம் என கருதப்படுகிறது. சுந்தர் பிச்சை கடந்த 2015ம் ஆண்டு கூகுள் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். பின்னர், 2019ல் அவர் கூகுள் தாய் நிறுவனம் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளிலும் விரிவடைந்துள்ளது. பிக்சல் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட வன்பொருள் பிரிவிலும் நுழைந்துள்ளது.
ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு முக்கிய தாக்கம் செலுத்தி வரும் நிலையில் இப்பிரிவிலும் கூகுள் சிறந்து விளங்குகிறது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் தொழில்நுட்ப உலகில் பரவலான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா, தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan