ஆசியாவின் இரண்டாவது பெரிய அலுவலகத்தை பெங்களூருவில் திறந்தது அமேசான்!

02:00 PM Feb 24, 2026 | muthu kumar

அமேசான் நிறுவனம் ஆசியாவில் தனது இரண்டாவது பெரிய அலுவலகத்தை பெங்களூருவில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. 1.1 மில்லியன் சதுர அடி பரப்பளவில், 12 மாடிகளைக் கொண்ட இந்த புதிய வளாகம், இ-காமர்ஸ், செயல்பாடுகள், பணப்பரிவர்த்தனை, தொழில்நுட்பம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 7,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட அலுவலகமாகும்.

இந்தியச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்யும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் இதுவரை இந்தியாவில் 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 35 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.

அமேசான் இந்தியா தலைவர் சமீர் குமார் கூறுகையில்,

“அமேசானுக்கு நீண்டகால முன்னுரிமை வாய்ந்த சந்தையாக இந்தியா உள்ளது. பெங்களூரு எங்கள் பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆரம்ப கால தொழில்நுட்ப மற்றும் வணிகக் குழுக்கள் இந்நகரில் இருந்தே செயல்பட்டன. இன்று இது திறமையின், புதுமையின் முக்கிய மையமாகத் திகழ்கிறது,” என்றார்.

2040ஆம் ஆண்டுக்குள் நெட்-சீரோ கார்பன் இலக்கை எட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ‘தி கிளைமேட் பிளெட்ஜ்’ முயற்சிக்கு இணங்க, இந்த புதிய வளாகம் கார்பன் வெளியீட்டை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொறுப்பான கட்டுமானப் பொருட்கள் பயன்பாடு, அலுவலக உபகரணங்களின் மறுபயன்பாடு மற்றும் உயர் திறன் கொண்ட மின்சாதன அமைப்புகள் போன்ற நடைமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் தெரிவித்ததாவது,

“பெங்களூருவில் அமேசான் தொடர்ந்து முதலீடு செய்வது, இந்தியா உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புதுமை மையமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. இத்தகைய பெரிய வளாகங்கள் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன,” என்றார்.

பெங்களூருவில் அமேசானுக்கு ஏற்கனவே 10 கார்ப்பரேட் அலுவலகங்கள், 7 நிறைவேற்ற மையங்கள், 3 வரிசைப்படுத்தும் மையங்கள், 130-க்கும் மேற்பட்ட கடைசி கட்ட விநியோக நிலையங்கள் மற்றும் ‘அமேசான் நவ்’ சேவைக்கான மைக்ரோ நிறைவேற்ற மையங்கள் உள்ளன. மேலும், கர்நாடகத்தைச் சேர்ந்த 80,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் அமேசான் தளத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.