+

ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய ட்ரோன் டெலிவரி வலையமைப்பு அமைக்க Airbound திட்டம்!

ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி தலைநகர் பிராந்தியத்தில் (Amaravati Capital Region) மிகப்பெரிய அளவிலான ட்ரோன் டெலிவரி வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Airbound, ஆந்திரப் பிரதேச ட்ரோன் கார்ப்பரேஷனுடன் (Andhra Pradesh Drone Corporation) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU)

ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி தலைநகர் பிராந்தியத்தில் (Amaravati Capital Region) மிகப்பெரிய அளவிலான ட்ரோன் டெலிவரி வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Airbound, ஆந்திரப் பிரதேச ட்ரோன் கார்ப்பரேஷனுடன் (Andhra Pradesh Drone Corporation) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் சரக்கு போக்குவரத்தை நவீனப்படுத்தும் முயற்சிகள் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தத் திட்டம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராப்பு ராம் மோகன் நாயுடு கூறுகையில்,

"அடுத்த தலைமுறை விமானப் போக்குவரத்து துறையில் இந்தியா என்ன செய்ய முடியும் என்பதை Airbound நிறுவனத்தின் வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ட்ரோன் டெலிவரி வலையமைப்புகளில் ஒன்றை உருவாக்க உள்நாட்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதன் மூலம், அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கி, பெரிய அளவில் செயல்படுத்த முடியும் என்பதை ஆந்திரப் பிரதேசம் நிரூபித்துள்ளது. இது மக்களுக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பட்ட இணைப்பை வழங்கும்," என்றார்.

இந்தத் திட்டம் அடுத்த ஒரு ஆண்டில் தினமும் 10,000 ட்ரோன் பறத்தல்களை மேற்கொள்ளும் இலக்கை எட்டினால், உலகின் மிகப்பெரிய வர்த்தக ட்ரோன் டெலிவரி வலையமைப்புகளில் ஒன்றாக மாறும். மேலும், சுகாதாரம், இ-காமர்ஸ் மற்றும் வணிகத் தளவாட சேவைகளில் ட்ரோன்கள் பாரம்பரிய போக்குவரத்து முறைகளுக்கு துணையாக செயல்பட முடியுமா என்பதை சோதிக்கும் முக்கிய முயற்சியாகவும் இது அமையும்.

முதற்கட்டமாக குண்டூரில் சேவைகள் தொடங்கப்பட்டு, பின்னர் அமராவதி, விஜயவாடா மற்றும் குண்டூரை இணைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். சுகாதாரம், தளவாடம் மற்றும் இ-காமர்ஸ் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த வான்வழி டெலிவரி வலையமைப்பை உருவாக்க ஏர்பவுண்ட் நிறுவனம் செயல்படும். இதற்கான சூழல் அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பை ஆந்திரப் பிரதேச ட்ரோன் கார்ப்பரேஷன் மேற்கொள்ளும்.

Andra Drone Network

படிப்படியாக அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் சோதனை இயக்கங்கள், பாதை வரைபடம் தயாரித்தல் மற்றும் பிராந்தியத்தில் ட்ரோன் வழித்தடங்களை உருவாக்குதல் ஆகியவை இடம்பெறும்.

ஆந்திரப் பிரதேச ட்ரோன் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி கீதாஞ்சலி ஷர்மா கூறுகையில்,

"இந்த ஒப்பந்தத்தின் மூலம் Airbound ஒரு புதிய டெலிவரி முறையை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை; ஆந்திரப் பிரதேசத்திற்கான புதிய தளவாட கட்டமைப்பிற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது."

மேலும் அவர்,

"ஏர்பவுண்டு நிறுவனத்தின் தொழில்நுட்பமும், மேம்பட்ட உள்கட்டமைப்பில் எங்களது கவனமும் இணைந்து, அமராவதி, விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தொழில் நிறுவனங்களும் ட்ரோன் அடிப்படையிலான சேவைகளின் பலன்களை ஆரம்ப கட்டத்திலேயே அனுபவிக்க உதவும்," என்றார்.

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ட்ரோன் விதிகள் 2021, மற்றும் டிஜிட்டல் ஸ்கை தளத்தின் மூலம் வணிக ரீதியிலான ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளின் பின்னணியில் வந்துள்ளது. ட்ரோன் பதிவு, இயக்க அனுமதி, விமானப் பரப்பு வகைப்பாடு மற்றும் விமானி சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் இந்த ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ட்ரோன்கள் இயக்குநரின் நேரடி பார்வைக்கு அப்பால் பறக்க அனுமதிக்கும் (Beyond Visual Line of Sight-BVLOS) விதிமுறைகளுக்கான விரிவான கொள்கையை தொழில்துறை நிறுவனங்கள் எதிர்பார்த்து வருகின்றன. இது பெரிய அளவிலான ட்ரோன் தளவாட வலையமைப்புகளுக்கு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பவுண்ட் நிறுவனம், கார்பன் ஃபைபரில் தயாரிக்கப்பட்ட இலகுரக Blended-Wing-Body Tailsitter விமானத்தை அடிப்படையாகக் கொண்ட தளவாட தளத்தை உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் தகவல்படி, இந்த ட்ரோன் 1.5 கிலோ எடை கொண்டது. தனது எடையை விட 1.5 மடங்கு சுமையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகவும், வழக்கமான போக்குவரத்து முறைகளை விட டெலிவரி செலவை 20 மடங்கு வரை குறைக்க முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஏற்கனவே 10,000-க்கும் மேற்பட்ட ட்ரோன் பறப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், பெங்களூரில் உள்ள நாராயணா ஹெல்த் மருத்துவமனையுடன் இணைந்து 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பொருள் விநியோக சேவைகளை நிறைவேற்றியுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

ஏர்பவுண்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நமன் புஷ்ப் கூறுகையில்,

"தற்போது தளவாட அமைப்புகள் மனிதர்களும் வாகனங்களும் நகர்வதை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் எங்களது நோக்கம், 20 டன் லாரி செயல்திறனுக்கு இணையாக ஒற்றை பொதிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ட்ரோன்கள் கொண்டு செல்லும் வலையமைப்பை உருவாக்குவதாகும். அமராவதி, விஜயவாடா மற்றும் குண்டூரில் அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தால், இந்தியாவின் பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாக அமையும்," என்றார்.

இந்தத் திட்டம், இந்தியாவின் ட்ரோன் தளவாடத் துறையில் அதிகரித்து வரும் போட்டியையும் வெளிப்படுத்துகிறது. சுகாதாரம், விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காக பல நிறுவனங்கள் தற்போது ட்ரோன் சேவைகளை சோதனை மற்றும் வணிக ரீதியில் விரிவுபடுத்தி வருகின்றன.

facebook twitter