+

'இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட GCC-க்கள் தேக்கநிலையை எட்டியுள்ளன' - ஆய்வில் தகவல்

இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCCs) தொடர்ந்து வேகமாக வளர்ச்சி பெற்று வந்தாலும், அவற்றில் சுமார் 500 மையங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்ட முடியாமல் தேக்கநிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. UnearthIQ மற்றும் Embark இணைந்து வெளியிட்டுள்

இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCCs) தொடர்ந்து வேகமாக வளர்ச்சி பெற்று வந்தாலும், அவற்றில் சுமார் 500 மையங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்ட முடியாமல் தேக்கநிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள சுமார் 25 சதவீத ஜிசிசி-க்கள் (GCCs) வளர்ச்சி தேக்க நிலையை எட்டி ஒரு முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன; இதற்கு முக்கியக் காரணம் சில கட்டமைப்பு ரீதியான திறமையின்மையே என்று UnearthIQ மற்றும் Embark ஆகியவற்றின் அறிக்கை தெரிவிக்கிறது.

UnearthIQ மற்றும் Embark இணைந்து வெளியிட்டுள்ள "The Great Plateau: Why GCCs are Unable to Reach their Full Potential" என்ற ஆய்வறிக்கையில், இந்தியாவில் தற்போது சுமார் 2,000 ஜிசிசிக்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் கணிசமான பகுதி செலவைக் குறைக்கும் மையங்களாகவே செயல்பட்டு, நிறுவனத்திற்கு அதிக மதிப்பை உருவாக்கும் நிலைக்கு முன்னேற முடியாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

GCC

ஆய்வின்படி, 2020-க்குப் பிறகு தொடங்கப்பட்ட ஜிசிசிக்களில் சுமார் 30 சதவீதம், அதாவது, 140 முதல் 150 வரை மையங்கள் ஏற்கனவே வளர்ச்சி தேக்கநிலையை அடைந்துள்ளன. இதனுடன், 2020-க்கு முன்பு தொடங்கப்பட்ட 360 முதல் 370 ஜிசிசிக்களும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்வதால், இந்தியாவில் தேக்கநிலையை எட்டியுள்ள ஜிசிசிக்களின் மொத்த எண்ணிக்கை 500 முதல் 520 வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து UnearthIQ நிறுவனத்தின் இணை நிறுவுநர்களான கவுரவ் வாசு மற்றும் ஷைல் மணியார் கூறுகையில்,

"இந்த தேக்கநிலை என்பது தோல்வியின் அறிகுறி அல்ல. மாறாக, இந்தியாவில் ஜிசிசி முறை ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியிருப்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான ஜிசிசி-க்கள் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நீண்டகால முக்கியத்துவத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் மிகச் சில மையங்களே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வேறுபாட்டை தீர்மானிப்பது வலுவான வடிவமைப்பும், ஒழுங்குமுறையான செயல்படுத்தலும்தான்," என்று தெரிவித்தனர்.

மேலும், இதுவரை ஜிசிசிக்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், அவற்றின் முழுத் திறனை வெளிக்கொணரும் கட்டமைப்புகள் மற்றும் செயல்திட்டங்களில் போதிய முதலீடு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆய்வறிக்கையில், வளர்ச்சி தேக்கநிலைக்கான முக்கிய அறிகுறிகளாக, ஜிசிசிக்கள் செலவைக் குறைக்கும் கருவிகளாக மட்டுமே பார்க்கப்படுவது, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் நிறுவனத்தின் வணிக தாக்கம் நிலைத்திருப்பது, கூடுதல் நிர்வாக அடுக்குகளால் முடிவெடுக்கும் வேகம் குறைவது, திறமையான ஊழியர்கள் விலகுவது, பழைய தொழில்நுட்ப அமைப்புகளை பராமரிப்பதிலேயே அதிக நேரம் செலவாகி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதிய தள மேம்பாட்டு திட்டங்கள் சோதனை நிலையிலேயே நின்றுவிடுவது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

வளர்ச்சி தேக்கநிலை என்பது செயல்பாட்டு குறைபாடுகளால் மட்டுமல்லாமல், நிறுவன கட்டமைப்பில் உள்ள அடிப்படை சிக்கல்களாலும் ஏற்படுவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. செயல்படுத்துதலுக்கே முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்புகள், தலைமைக்கு போதிய சுயாதீனம் இல்லாமை, நிறுவனத்தின் மாறிவரும் முன்னுரிமைகளுடன் போதிய ஒத்திசைவு இல்லாதது, AI மற்றும் தள திறன்களில் குறைந்த முதலீடு, சிதறிய தொழில்நுட்ப மற்றும் தரவு அடித்தளங்கள் போன்றவை, ஜிசிசிக்கள் நிறுவனங்களில் அதிக மதிப்பு உருவாக்கும் பொறுப்புகளை ஏற்கத் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் தற்போது செலவுக் குறைப்பிலிருந்து வணிக தாக்கம், பொறுப்பேற்பு மற்றும் புதுமை நோக்கி மாறிவரும் நிலையில், அனைத்து ஜிசிசிக்களும் ஒரே வேகத்தில் வளர்ச்சி அடைந்து முதிர்ச்சியடைவதில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

Embark நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை செயல் அதிகாரியுமான அரவிந்த் மையா கூறுகையில்,

"நிர்வாக அமைப்பு, திறமையான மனிதவளத் திட்டம் மற்றும் வலுவான தொழில்நுட்ப அடித்தளம் ஆகிய அடிப்படை அம்சங்களை ஆரம்பத்திலேயே சரியாக தேர்வு செய்யும் ஜிசிசிக்கள்தான் நீண்டகால வளர்ச்சியை வெற்றிகரமாக அடைய முடியும்," என்று தெரிவித்தார்.
facebook twitter