மைசூர் சில்க் சேலைக்காக காலை 4 மணிக்கே கூடிய கூட்டம் - பெங்களுருவில் குவிந்த பெண்களின் வீடியோ வைரல்!

05:12 PM Jan 21, 2026 | muthu kumar

பெங்களூரு அவ்வளவு விடியற்காலையில் கண்விழிக்கும் நகரமல்ல. ஆனால், நேற்று அதாவது செவ்வாய்க்கிழமை காலை கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் (KSIC) ஷோரூம் முன்பாக காலை 4 மணியிலிருந்தே மக்கள் அசல் பட்டுச்சேலைகளை வாங்க அமைதியாக வரிசையில் நிற்கத் தொடங்கினர். அந்த வரிசை நேரம் ஆக ஆக நீண்டு வளைந்து பெரிதானது.

அசல் மைசூர் சேலைக்காக கூடிய கூட்டம் குறித்த வீடியோ நேற்று வைரலானது. அழகிய நெசவு, செறிந்த பட்டு, ராஜகுடி பாரம்பரியம்—மைசூர் சில்க் சேலைகள் ரூ.23,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை விலை போகும். அந்த சேலைக்காக மக்கள் இவ்வளவு அதிகாலையில் வரிசையில் நின்ற காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி, வைரலானது.

தேவை அதிகரித்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த கர்நாடகா பட்டுத் தொழிற்துறை கடும் விதிகளை கொண்டு வந்துள்ளது. கன்னட பிரபா செய்தியின்படி, தற்போது டோக்கன் முறையில் மட்டும் விற்பனை நடைபெறுகிறது. டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே கடைக்குள் அனுமதி, மேலும் ஒருவர் ஒரு சேலை மட்டுமே வாங்க முடியும்.

புடவை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்

X தளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், சிலர் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தும், சிலர் மணிக் கணக்கில் நின்றும் காத்திருந்தனர். அந்த பதிவில்,

“GI டேக் பெற்ற அசல் மைசூர் சில்க் சேலைகளை தயாரிக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனம் KSIC மட்டுமே. அதனால் உற்பத்தி குறைவும், வழங்கல் தட்டுப்பாடும் தொடர்கிறது."
"2025 முழுவதும் இந்த பிரச்சனை தொடர்ந்துள்ளது. 2026-ல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தெளிவாக இல்லை. திறமையான நெசவாளர்கள் ஒரு புடவையை உருவாக்கவே 6–7 மாதங்கள் ஆகும். திருமண காலம், வரலக்ஷ்மி விரதம், கவுரி கணேஷா, தீபாவளி போன்ற பருவங்களில் சேலைகள் சீக்கிரமே தீர்ந்து விடுகின்றன,” என்றும் அந்த பதிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவிட்ட சிலமணி நேரங்களில் அதிகப் பார்வையாளர்களை ஈர்த்தது. இணையத்தில் சூடான விவாதங்களைக் கிளப்பியது.

”ஐபோன் வாங்க ஆண்கள் 12 மணி நேரம் வரிசையில் நிற்பது சரி; பெண்கள் சேலைக்காக நின்றால் ஏன் இவ்வளவு பேச்சு?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“மைக்கேல் கோர்ஸ், குச்சி போன்ற பிராண்டுகள் KSIC-யிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று இன்னொருவர் பாராட்டினார்.

“60–70–80களின் நினைவுகள் வந்துவிட்டன. அப்போது ரேஷன், புத்தகம் வாங்க வரிசை; இப்போது சேலைக்காக வரிசை!” என்ற நகைச்சுவை கலந்த கருத்துகளும் வந்தன.

“ப்ளேஸ்டேஷன், ஐபோன், பிரபல ஹோட்டல்கள் என்றெல்லாம் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். பட்டு சேலைக்காக நின்றால் என்ன பிரச்சனை?” என்ற கேள்வியுடன், இந்த ‘பட்டு பேரணி’க்கு ஆதரவான குரலும் வலுத்தது.

பெங்களூரு தெருவில் அந்த அதிகாலை வரிசை, இன்று ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கிறது— என்னதான் நவீனமும், ஃபாஷனும் கண்களைப் பறித்தாலும் பழமையும் பாரம்பரியமும் இன்னும் மக்களின் மனதில் ஆட்சி செய்கிறது என்பதே!