அப்பா செங்கல்சூளை கூலி; அம்மா தையல் தொழிலாளி - ஐஏஎஸ் ஆகப்போகும் 22 வயது நெல்லை இளைஞர்!

04:17 PM Mar 13, 2026 | Chitra Ramaraj

முயற்சி செய்தால் இந்த உலகத்தில் முடியாதது ஒன்றுமேயில்லை. வறுமையோ, குடும்ப சூழலோ எதுவுமே வெற்றிக்குத் தடையாகிட முடியாது என தங்கள் வாழ்க்கை மூலம் ஜெயித்துக் காட்டி நிரூபித்தவர்கள் ஏராளம். அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் நெல்லையைச் சேர்ந்த 22 வயதேயான சுப்பிரமணிய பாரதி.

அப்பா 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்த செங்கல் சூளை தினக்கூலி.. அம்மா 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வருபவர். எப்படிப் படிக்க வேண்டும் என வழிகாட்டவோ, தனியாக அமர்ந்து படிக்க வீட்டில் அறையோகூட இல்லாத வாழ்க்கைச் சூழல். ஆனால், இவை அனைத்தையும் தன்னை முன்னேற்றுவதற்கான உந்துசக்திகளாக மட்டுமே எடுத்துக் கொண்டு, தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, 778ம் இடம் பிடித்து ஐஏஎஸ் ஆகி இருக்கிறார் இந்த தன்னம்பிக்கை நாயகன்.

செங்கல்சூளை தொழிலாளியின் மகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம்தான் சுப்பிரமணிய பாரதியின் ஊர். செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தாலும், தங்களுக்கு மூத்ததாக மகன் பிறந்ததுமே அவருக்கு சுப்பிரமணிய பாரதி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் அவரது பெற்றோர். பெயர் வைத்ததோடு அல்லாமல், அவருக்குள் சிறு வயதில் இருந்தே கனவுகளையும் ஊட்டி வளர்த்து, அந்த கனவு மெய்ப்பட எப்படி உழைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவராக இருந்த சுப்பிரமணிய பாரதி, கல்லூரிக் கல்வியும் பாபநாசத்திலேயே முடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே கலெக்டராக வேண்டும் என கனவு இருந்ததால், அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்ளத் தொடங்கினார். கல்லூரியில் பாட புத்தகங்களைப் படித்ததைவிட, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புத்தகங்களையே அதிகம் படித்துள்ளார்.

“ஒரு அறை மட்டுமே கொண்ட சிறிய வீடு எங்களுடையது. வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, சமையல் அறையில் அமர்ந்துதான் படிப்பேன். கல்லூரியில் வேறு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதும், நான் யுபிஎஸ்சி தேர்வுப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பேன். எனது முயற்சிக்கு கல்லூரி நிர்வாகமும் பெரிதும் உதவி செய்தது. எங்கள் கல்லூரியில் இருந்து இதுவரை ஐஏஎஸ் ஆனவர்கள் யாருமில்லை என்பதால், எனக்கு பெரிதும் சப்போர்ட்டாக அவர்கள் இருந்தார்கள்.

கல்லூரி முடிந்தவுடன் நான் முதல்வன் திட்டத்தில் சேர்வதற்கான தேர்வை எழுதினேன். அதில் வெற்றியும் பெற்றேன். படிப்பதற்கு சரியான வசதிகளே இல்லாத வீட்டில் இருந்து வந்த எனக்கு, ஏசி ரூம் தந்து படிக்க வைத்தது தமிழக அரசு. மாதந்தோறும் அவர்கள் தந்த உதவித்தொகை எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

"அப்பா செங்கல்சூளை தொழிலாளி என்பதால் மாதத்தில் பல நாட்கள் வேலை இருக்காது. அவர் மாதந்தோறும் உழைத்து தருவதைவிட எனக்கு உதவித்தொகை அதிகமாக கொடுத்தது தமிழக அரசு. நான் முதல்வன் திட்டத்தின் வழிகாட்டுதலோடு, முதல் முயற்சியிலேயே, 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறேன். எனது வெற்றிக்கு உதவிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றிகள். என்னை ஊக்கப்படுத்திய என் பெற்றோருக்கும் என் நன்றிகள்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சுப்பிரமணிய பாரதி.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி சுப்பிரமணிய பாரதியை பாராட்டிய தருணம்

2 ஆண்டு தவத்தின் பலன்

10ம் வகுப்பு முடித்தவுடனேயே சுப்பிரமணிய பாரதியை வேலைக்கு அனுப்பச் சொல்லி, அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர் உறவினர்களும், அக்கம்பக்கத்தாரும். ஆனால், அவற்றை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், தன் மகனை ஐஏஎஸ் ஆக்குவதே தங்களது ஒரே இலக்கு என கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தோடு கூட்டாக உழைத்துள்ளனர் சுப்பிரமணிய பாரதியின் பெற்றோர்.

“நான் 8வது வரைதான் படித்துள்ளேன். என் கணவர் 5ம் வகுப்புதான் படித்துள்ளார். சிறுவயதில் இருந்தே என் மகனுக்கு பாரதியார் கவிதைகளைச் சொல்லி சொல்லித்தான் வளர்த்தேன். மகனை ஐஏஎஸ் படிக்க வைக்க பகல் கனவு காண்கிறேன் என என்னை கேலி செய்தவர்கள் ஏராளம். ஆனால் அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவேயில்லை."

கடந்த இரண்டு வருடங்களாக எனது உறவினர்கள் தொலைபேசி எண்களைக்கூட ப்ளாக்கில் போட்டு விட்டோம். அவர்களது வார்த்தை எனது மகனின் கவனத்தை சிதறடித்துவிடக் கூடாது என்பதற்காக, கிட்டத்தட்ட தவம் போல வாழ்க்கை வாழ்ந்தோம்.

மகன்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வெளியில்கூட வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தையல் தொழில் செய்து வருகிறேன். இரவு 12மணி வரை மட்டுமே படிக்க வேண்டும் என அவனது உடல் ஆரோக்கியத்திலும் அக்கறையாக இருப்பேன். சமயங்களில் 12 மணியைத் தாண்டி 1 மணி வரை படித்ததற்காக என்னிடம் அடி கூட வாங்கி இருக்கிறான்.

"எனது மகனின் ஐஏஎஸ் கனவிற்கு பெரும் துணையாக இருந்தது நான் முதல்வன் திட்டம்தான். ‘காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பார்கள். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த உதவி, ஏழு உலகங்களைவிடப் பெரியது,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சுப்பிரமணியப் பாரதியின் அம்மா.

குடும்பத்தினருடன் சுப்பிரமணிய பாரதி Image courtesy :ANI

தான் கற்றக் கல்வி தனக்கு மட்டும் பயன்படக் கூடியதாக இல்லாமல், மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் படித்து, தன் உழைப்பின் பலனாக இன்று ஐஏஎஸ் ஆகி இருக்கிறார் சுப்பிரமணி பாரதி. அதோடு தன் தம்பியையும் தன்னைப் போலவே ஐஏஎஸ் ஆக்க வேண்டும், என அவருக்கும், தான் கற்றவைகளைக் கற்றுக் கொடுத்தும் வருகிறார்.