'நல்ல தூக்கம் நல்கும் மெத்தை நிறுவனம்’ - கோவை Peps Industries வெற்றிக் கதை!

06:00 PM Jan 14, 2026 | Jai s

2006-ல் ஜி.சங்கர் ராம் ‘பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (Peps Industries) நிறுவனத்தை தொடங்கியபோது, ​​இந்திய மெத்தை சந்தை பெரும்பாலும் தேங்காய் நார் மற்றும் ஃபோம் மெத்தைகளாலேயே ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது. தூக்கத்தின் தரம், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் அல்லது மெத்தையினால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நீண்டகால விளைவுகள் குறித்து அப்போது வெகு சிலரே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

சரியாக இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, இன்று ‘பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட இன்னர்ஸ்பிரிங் மெத்தைகளை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிறுவனத்தையே சேரும்.

லட்சியமே முதல் படி:

எங்களது நோக்கம் மிகவும் எளிமையானது. அது இந்தியர்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதே ஆகும், என்கிறார் பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மேலாண் இயக்குநர் ஜி.சங்கர் ராம்.

“மெத்தை என்பது ஒரு சாதாரண வீட்டு உபயோகப் பொருள் என்ற எண்ணத்தைத் தாண்டி, அது ஒரு மனிதரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும் ஒன்று என்பதை நாங்கள் மாற்ற விரும்பினோம்,” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் உருவாக்கிய மாற்றத்தை மக்கள் உணரத் தொடங்கினர். அதுதான் எங்களது உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், இந்தியா முழுவதும் ஒரு வலுவான டீலர் நெட்வொர்க்கை உருவாக்கவும் உதவியது. மேலும், மக்கள் எங்களது மெத்தைகளை நேரடியாக அனுபவித்து உணர ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்ஸ்’ என்ற பிரத்யேகக் கடைகளையும் தொடங்கினோம்” என்கிறார்.

தேங்காய் நாரில் இருந்து சுகமான அனுபவம் வரை…

இந்த வெற்றிக் கதை 2005-2006-ல் தொடங்குகிறது. அப்போது கோயம்புத்தூரில் ஸ்பிரிங் மெத்தைகளைத் தயாரிக்கும் வசதி கொண்ட ஒரு தொழிற்சாலை விற்பனைக்கு வந்தது. சங்கர் ராம் தனது சில கூட்டாளிகளுடன் இணைந்து அந்த யூனிட்டை வாங்கினார். அப்போது இந்திய சந்தைக்குப் புதியதாக இருந்த ஸ்பிரிங் மெத்தைகளைத் தயாரிக்கத் தொடங்கியதே பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் அஸ்திவாரம்.

2005-ல் அமெரிக்காவின் மிகப் பழமையான பெட்டிங் பிராண்டுகளில் ஒன்றான ரெஸ்டோனிக் (Restonic USA) உடன் ஏற்பட்ட நீண்டகாலக் கூட்டணி, பெப்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது. இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த இன்னர்ஸ்பிரிங் தொழில்நுட்பங்கள் மற்றும் முதுகுத்தண்டு சீரமைப்புக்கான சிறப்பு வசதிகள் இந்தியாவிற்கு வந்தன.

பெப்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி முறையில் ஒரு சிறப்பான உத்தியைக் கையாண்டது. தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு செயல்முறையையும் தங்களது சொந்தக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் வெர்டிகல் இன்டெக்ரேஷன் முறையை அவர்கள் உருவாக்கினர்.

“இது தரம் குறையாமல் பராமரிக்கவும், நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாகச் செயல்படவும் எங்களுக்கு உதவியது,” என்கிறார் சங்கர் ராம்.

இன்று, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்பிரிங் மெத்தை சந்தையில் 35-40% பங்கினை பெப்ஸ் தன்வசம் வைத்துள்ளது. ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மெத்தைகளைத் தயாரிக்கும் இந்நிறுவனம், 15,000 ரூபாய் முதல் 1.8 லட்சம் ரூபாய் வரை விலையுள்ள 13,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்நிறுவனம் 1,250-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. பெங்களூரு, கொச்சி, சென்னை, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் 4,000 பலதரப்பட்ட பிராண்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் 82 பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்ஸ்’ மூலம் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.

பெப்ஸ் இண்ட்ரீஸ் மேலாண் இயக்குநர் ஜி.சங்கர் ராம்

புதிய வரவுகள்

இந்திய மெத்தை சந்தை 2033-க்குள் 4 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும், என எதிர்பார்க்கப்படும் நிலையில், பெப்ஸ் நிறுவனம் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதுகெலும்புக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்பைன் கார்டு’ மற்றும் லேட்டக்ஸ், இதுதவிர ஆர்கானிக் பருத்தியால் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் 100% ஆர்கானிக் மெத்தையான ‘ஆர்கானிகா’ ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கது.

“எங்களது சமீபத்திய தயாரிப்பான ‘இத்தாலியானோ’, இத்தாலிய பாணி வசதியையும் வடிவமைப்பையும் எங்களது ஸ்டோர்களுக்குக் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு புதிய தயாரிப்பும் மக்களைப் புத்துணர்ச்சியுடன் எழச் செய்யும் எங்களது இலக்கை நோக்கியே பயணிக்கிறது,” என்கிறார் ராம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பெப்ஸ் கவனம் செலுத்துகிறது. “நீடித்து உழைப்பதே எங்களது முதல் இலக்கு. மெத்தைகள் நீண்ட காலம் உழைத்தால் கழிவுகள் குறையும்,” என விளக்குகிறார் ராம்.

மக்கும் தன்மை கொண்ட மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதிலும், எரிசக்தி சேமிப்பு முறைகளிலும் இந்நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

எதிர்காலத்தில் ஸ்மார்ட் மற்றும் ஐஓடி (IoT) சார்ந்த மெத்தைகளைத் தயாரிக்கும் திட்டம் இருந்தாலும், தற்போதைக்கு உடல் நலம் மற்றும் நீண்ட கால வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, கடினமான படுக்கையே ஆரோக்கியமானது என்று இந்தியர்கள் நம்பினர். பெப்ஸ் அந்தப் பார்வையை மாற்றியது.

“உண்மையான வசதியும் ஆரோக்கியமும் மெத்தையின் மென்மையிலோ கடினத்தன்மையிலோ இல்லை, அது உடல் சீரமைப்பிலும் காற்றோட்டத்திலுமே உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தினோம்.”

கொரோனா பேரிடருக்குப் பிறகு, இந்தியர்கள் தங்களது ஆரோக்கியம் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

“இன்றைய இளைஞர்கள் மெத்தையை ஓர் ஆரோக்கிய முதலீடாகப் பார்க்கிறார்கள். ஆன்லைனில் தேடி, ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் அவர்களின் பழக்கத்திற்கு ஏற்ப, நாங்கள் எங்களது ஆன்லைன் தளங்களையும் பலப்படுத்தியுள்ளோம்,” என்கிறார் சங்கர் ராம்.

ஆன்லைன் விற்பனையை 40% ஆக உயர்த்தவும் பெப்ஸ் திட்டமிட்டுள்ளது.

பாரதத்திற்காக ஒரு பயணம்

மெட்ரோ நகரங்கள் ஒருபுறம் இருந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களே பெப்ஸின் அடுத்த வளர்ச்சி மையங்களாக உள்ளன. அங்குள்ள மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பிரீமியம் மெத்தைகளுக்கான தேவையை அதிகரித்துள்ளன.

இதற்காகத் தாராளமான விலையிலும் அதேசமயம் உயர்தரத்திலும் பொருட்களை வழங்கி வருவதாக ராம் குறிப்பிடுகிறார். 2025 நிதியாண்டில் 25-33% வளர்ச்சியுடன் 500 கோடி ரூபாய் வருவாயைக் கடந்துள்ள பெப்ஸ் நிறுவனம், மெத்தைகள் மட்டுமின்றி தலையணைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சோபாக்களையும் விற்பனை செய்கிறது.

அடுத்த ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதே பெப்ஸின் இலக்கு.

“அடுத்த தசாப்தம் இந்தியா தூக்கத்தைப் பார்க்கும் விதத்தையே மாற்றியமைக்கும். அதில் நல்வாழ்வு, நிலைத்தன்மை ஆகியவை முன்னணியில் இருக்கும். பெப்ஸ் அந்த மாற்றத்தை வழிநடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சங்கர் ராம்.

- மூலம்: த்ரிஷா மேத்தி


Edited by Induja Raghunathan