சென்னை மக்கள் 'காலை சீக்கிரம் எழும் பழக்கம் நல்லது' என்று சொல்வது வெறும் பழமொழி அல்ல — அது உண்மையாகி விட்டது!
2026 ஆம் ஆண்டுக்கான Wakefit நிறுவனத்தின் 'Great Indian Sleep Scorecard' ஆய்வில், சென்னை இந்தியாவின் சிறந்த தூக்க ஒழுக்கம் கொண்ட நகரமாக முதலிடம் பிடித்துள்ளது.
ஆனால், இதே நேரத்தில், மும்பை மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மும்பை தூங்கா நகரமாக உள்ளது என்பதும் இந்த ஆய்வின் கவலைக்கிடமான உண்மை.
படம்: மெட்டா ஏஐ
தூக்கத்தின் தலைநகர் சென்னை!
சென்னை மக்கள் மற்ற நகரங்களை விட தூக்கத்தில் மிகவும் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்கிறது சர்வே.
சென்னையில் தாமதமாக படுக்கச் செல்வோர் 48.8%. இது மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் குறைவான அளவே. அதே போல், காலையில் தாமதமாக கண்விழிப்போர் எண்ணிக்கையும் 23.8%. இதுவும் குறைவாக தான் உள்ளது. சென்னைவாசிகளிடையே தூக்கமின்மையும் (Insomnia) குறைவான விகிதத்தில் 32.1% ஆக உள்ளது.
இந்தத் தரவுகளிலும் சிறிய சிக்கல் உள்ளது. 61.9% பேர் நன்றாகத் தூங்கினாலும் காலையில் புத்துணர்ச்சி இருப்பதில்லை, என்று கூறியுள்ளனர்.
மற்ற நகரங்கள் தூக்கத்தில் எப்படி?
ஹைதராபாத் – தூக்கத்தில் சமவிகிதம், இரண்டாம் இடம். இந்நகரத்தில் 42% பேர் இரவு லேட்டாக தூங்கச் செல்கின்றனர். 31% தூக்கமின்மை பிரச்சனை உள்ளதாகக் கூறியுள்ளனர்.
குருக்ராம் – இளம் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நகரம், வேலை நேரம் தாறுமாறாக இருந்தாலும் தூக்கத்தில் சமநிலை வகிக்கின்றனர். மூன்றாம் இடம்
பெங்களூரு – வேலை அழுத்தம், தூக்கத்தில் தாமதம். 36.3% பேர் நள்ளிரவு கழித்தே தூங்கச் செல்கின்றனர். 54% பேர் தூக்கத்திற்குப் பின்பும் கூட நல்ல ஓய்வு எடுத்ததாக உணரமுடியவில்லை என்கின்றனர். பெங்களூரு 4ம் இடத்தில் உள்ளது.
டெல்லி – காலையில் தாமதமாக கண் விழிப்பதில் டெல்லிவாசிகளுக்கு நிகரில்லை என்கிறது இந்த ஆய்வு, அதாவது, 45% தாமதமாக கண்விழிக்கின்றனர். தூக்கமின்மை உளைச்சல் உள்ளவர்கள் 32%- 5ம் இடம்.
கொல்கத்தா – இரவு நேர வாழ்க்கை அதிகம். 75% மக்கள் இரவு வெகுதாமதமாகப் படுக்கைக்குச் செல்கின்றனர். இரவு ஊர்சுற்றல் அதிகமுள்ள நகரமாக உள்ளது கொல்கத்தா. - 6ம் இடம்.
கடைசி இடத்தில் மும்பை தூங்கா நகரமாக உள்ளது. சுமார் 77% மக்கள் தாமதமாக பின்னிரவில் படுக்கைக்குச் செல்கின்றனர். 42.5% தாமதமாகக் கண்விழிக்கின்றனர். விழித்த பிறகும் சோர்வாக இருப்பவர்கள் 62% . வேலை நேரத்தில் தூங்கி வழிபவர்களாக 60% பேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்தியர்களின் தூக்கத்தை கெடுக்கும் முக்கியக் காரணம் என்ன?
மொபைல் போன்!
- 87.6% பேர் படுக்கும் முன் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்
- Social media, தொடர்ந்து OTT-யில் படங்கள் சிரீஸ் பார்ப்பது – முக்கியக் காரணங்கள்
- 33.4% பேர் “எனக்கு insomnia இருக்குமோ?” என்று பயப்படுகிறார்கள்.
வேலைக்கும் பாதிப்பு!
தூக்கமின்மை வேலை திறனை நேரடியாக பாதிக்கிறது.
- 57.8% பேர் வேலை நேரத்தில் தூக்கமாக இருக்கிறார்கள்
- டெல்லி (64.4%), பெங்களூரு (61.7%), மும்பை (59.2%) – அதிக பாதிப்பு
இந்தியர்கள் – தாமதமாக தூங்கும் பழக்கம் அதிகரிப்பு
- 12% பேர் மட்டுமே இரவு 10 மணிக்குள் படுக்கிறார்கள்
- 60% பேர் 11 மணிக்குப் பிறகு தான் தூங்குகிறார்கள்
- 29.1% பேர் “Late sleep + Early wake” – 5–6 மணி நேரம் மட்டுமே தூக்கம்.
சிறந்த தூக்கத்திற்கு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
- 35.8% – நல்ல mattress இருந்தால் தூக்கம் மேம்படும்
- 34.8% – மொபைல் போனை தவிர்த்தால் நல்லது
- 29.5% – ஒழுங்கான நேரம் பின்பற்ற வேண்டும்.
இந்த ஆய்வு கூற வருவது என்னவெனில், இந்தியா முழுவதும் ’தூக்க நெருக்கடி’ அதிகரித்து வருகிறது.
சென்னை ஆரோக்கியமான உறக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும், முழுமையான ஓய்வு இன்னும் சவாலாகவே உள்ளது.
“நல்ல தூக்கம் என்பது சுகாதாரத்தின் அடித்தளம்” — ஆனால் இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை அதை மெதுவாக பறித்து கொண்டிருக்கிறது.
சரி... இன்று நீங்கள் எத்தனை மணிக்குத் தூங்கச் செல்வீர்கள்?