
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேனியில் உள்ள பகிங்காம் கால்வாய் பகுதியில், மிதக்கும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் கோடு கடலுக்கு செல்லும் தண்ணீரை மட்டுப்படுத்துகிறது.
இந்த 60 மீட்டர் கழிவு தடுப்பு பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தீர்வு நிறுவனம் என்விரோ கார்டால் உருவாக்கப்பட்டு சென்னையைச் சேர்ந்த கழிவு நிர்வாக நிறுவனம் கபடிவாலா கனெக்டால் இந்த ஆண்டு துவக்கத்தில் அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் எளிமையானது: மிதந்து வரும் பிளாஸ்டிக்கை கடலில் கலப்பதற்கு முன் தடுப்பது தான் அது.
ஆனால், இந்த எளிமையான வசதிக்கு பின், சென்னையைச் சேர்ந்த கழிவுகளை சேகரிக்கும் கூலித்தொழிலாளர்கள் கொண்டு ஐரோப்பிய சந்தைக்கான மறுசுழற்சி பிளாஸ்டிக்கை இணைக்கும் சிக்கலான சோதனை அமைந்துள்ளது.

இந்த திட்டம் “ கடலில் இருந்து குப்பை பைக்கு - எனும் பெயரிலானது, டேனிஷ் கிரீன் பிஸ்னஸ் பாட்னர்ஷிப் (‘From Beach to Bin Bags’) கீழ், டென்மார்க் வளர்ச்சி நிதி அமைப்பான டேனிடா ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தை வழிநடத்தும் 'கபடிவாலா கனெக்ட்' (Kabadiwalla Connect) ஓஷன் பிளாஸ்டிக் பாரம் (OPF) அமைப்புடன் இணைந்து, குப்பைகளை சேகரிப்பவர்கள், குப்பைகளை வாங்குபவர்களுடன் செயல்படுகிறது. கோபன்ஹேகனைச் சேர்ந்த இந்த தொண்டு நிறுவனம் பிளாஸ்டிக் மாசை குறைப்பதற்காக நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
பெரிய அளவிலான தொழில் பைகளை தயார் செய்யும் GLECO எனும் ஐரோப்பிய நிறுவனமும் இதில் இணைந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் தொழில் பைகளை தயாரிக்க இந்தியாவின் மறுசுழற்சி பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது குறித்து சோதித்து வருகிறது.
“இந்த தடுப்பு சில விதங்களில் அடையாளம் போன்றது,” என்கிறார் கபடிவாலா கனெக்ட் நிறுவனர் சித்தார்த் ஜண்டே. “எனினும் உண்மையான வர்த்தக இலக்கு என்னவெனில், இந்தியாவின் நுகர்வுக்கு பிந்தைய 20 டன் பிளாஸ்டிக்கை, இந்தியாவின் அமைப்பு சாரா துறையில் இருந்து, ஐரோப்பிய உற்பத்தி சங்கிலிக்கு கொண்டு செல்ல முடிகிறதா என்பது தான்,” என்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கழிவுகள் பேக்கேஜிங் மற்றும் பேக்கேஜிங் கட்டுப்பாடுகள் (PPWR), சட்டம், அதற்கு முந்தைய பேக்கேஜிங் விதிமுறைகளுக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் பிளாஸ்டிக் பேகேஜிங்கில் பயன்படுத்த வேண்டிய மறுசுழற்சி பிளாஸ்டிக் அளவிற்கான சட்டப்பூர்வ இலக்குகளை இது முன் வைக்கிறது. இதன் கீழ், 2030 வாக்கில் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில், மறுசுழற்சி பிளாஸ்டிக் 30 சதவீதம் இருக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகள் 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் பெரும்பாலான ஷரத்துகள், 2030 க்குள் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த விதிகள் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்கள் 30 சதவீத மறுசுழற்சி பிளாஸ்டிக் கொண்டிருக்க வேண்டும், என வலியுறுத்துகின்றன. இதன் காரணமாக, கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படக்கூடிய மறு சுழற்சி பிளாஸ்டிக்கிற்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த பின்னணியில், பிளாஸ்டிக் தடுப்பிற்கான முன்னோட்ட திட்டம், இம்முறையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் செயல்முறைக்கு உள்ளாகப்பட்டு, ஐரோப்பாவில் தொழில் பைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.
இந்த தடுப்பு ரூ.8 முதல் 10 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க உதவுகிறது. ஆனால் இது தண்ணீரை சுத்திகரிப்பதில்லை. தண்ணிருக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக்கை சேகரிப்பது இல்லை.
“இது உண்மையில் கழிவு சேகரிப்பு என்கிறார் ஹண்டே. இது மேல் பரப்பில் மிதப்பவற்றை தடுத்து சேகரிக்கிறது,” என்கிறார்.
முதல் வார செயல்பாட்டிலேயே, இந்த தடுப்பு ஐந்து முதல் ஆறு டன் கழிவுகளை சேகரித்தது. இவற்றில் பெரும்பாலும் நீரில் மிதக்கும் ஊடுருவும் தன்மை கொண்ட தாவர வகை. இது கால்வாய் எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்சனையை உணர்த்துவதோடு, இத்தகைய தீர்வுகளின் வரம்புகளையும் உணர்த்துகிறது.
“இந்த தடுப்பு; கழிவுகளை அகற்ற உதவவில்லை. கழிவுகள் கொட்டப்படுவதற்கு தீர்வாகவும் அமைவதில்லை. மேலே மிதக்கும் கழிவை மட்டும் கட்டுப்படுத்துகிறது,” என்கிறார் ஹண்டே.
நீர் நிலைகளில் பிளாஸ்டிக் நுழைந்த பிறகே பிரச்சனையை எதிர்கொள்ள இந்த முறை உதவுகிறது என்கிறார், ’இகோ கனெக்டர்ஸ் டிரஸ்ட்’ இணை நிறுவனர் மற்றும் மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்போர் நல வாழ்வு சங்க இணை நிறுவனர் கங்கா ஸ்ரீதர் கூறுகிறார்.
“நாங்கள் கழிவு தோன்றும் இடத்திலேயே அவற்றை கட்டுப்படுத்தி பிளாஸ்டிக் நீர் நிலைக்கு வராமல் தடுக்க முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறுகிறார். இந்த தடுப்பு பிளாஸ்டிக் வந்த பிறகு அதை தடுகிறது என்கிறார்.
அருகாமையில் உள்ள மந்தைவெளியில் வசிக்கும் கங்கா ஸ்ரீதர் பத்தாண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் தரம் பிரிப்பு மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பு தொடர்பான திட்டங்களில் கபடிவாலாக கனெக்டுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். இந்த பிரச்சனைக்கும் சென்னை வெள்ளத்தின் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார்.
“2015ல் சென்னை வெள்ளத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பிளாஸ்டிக். மழை நீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக்கொள்கின்றன. இதனால் மழை காலத்தில் வெள்ள நீர் இவற்றினுல் சீராக செல்ல முடிவதில்லை,” என்கிறார்.

கழிவு நிர்வாகத்தில், நகரில், குறிப்பாக நடுத்தர மக்கள் பகுதியில் விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும், பகிங்காம் கால்வாய் பகுதிவாசிகள் மத்தியில் குறைவாக இருக்கிறது என்கிறார்.
“வீடுகளுக்கு சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது பற்றி பேசும் நிலைக்கு வந்துள்ளோம். ஆனால், கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. ஒரு பக்கம் குடிசை பகுதியும், இரு பக்கமும் குப்பை மேடுகளும் உள்ளன,” என்கிறார்.
எனினும், இந்த தடுப்பு முறை பயனுள்ளது என்கிறார். குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் சிறு துகள்களாகி கடல்வாழ் உயிரினங்களை பாதிப்பை குறைக்கிறது என்கிறார். “இந்த பிளாஸ்டிக் அனைத்தும் நுண் பிளாஸ்டிக்காக மாறி, மீன்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மூலம் நம்மிடம் திரும்பி வருகின்றன,” என்கிறார்.
இந்த திட்டம், குப்பை சேகரிப்பவர்கள், குப்பை வாங்குபவர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
“நான் சென்று பார்த்த போது, உள்ளூர் மீனவர்கள் மற்றும் குப்பை சேகரிப்பவர்கள், முறையான பாதுகாப்பு கவசம் அணிந்து குப்பைகளை சேகரித்துக்கொண்டிருந்தனர். உள்ளூர் நபர் ஒருவர் பிளாஸ்டிக்கை பிரித்து, மறுசுழற்சிக்காக அனுப்பிக்கொண்டிருந்தார். இது வேலைவாய்ப்புக்கு உதவுகிறது, உள்ளூர் மக்கள் ஈடுபாடு காட்டுகின்றனர்.”
இந்த ஈடுபாடு ஒரு விதத்தில் விழிப்புணர்வாக மாறும் என்கிறார். “தினமும் எவ்வளவு பிளாஸ்டிக் எடுக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது இவை கால்வாய்க்கு வந்தது எப்படி எனும் கேள்வி எழும். அப்போது உரையாடல் இவற்றை துவக்கத்திலேயே தடுப்பு தொடர்பாக மாறும்” என்கிறார்.
இந்த தடுப்பு நிரந்தரமான உள்கட்டமைப்பு அல்ல. மாறாக எளிய கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அளவுக்கு ஏற்ப இது மேலெழுந்து, கீழே வருகிறது. தேவை எனில் எடுத்து விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். இந்த தடுப்பு அமைக்க நீர் வளத்துறையின் அனுமதியை குழு பெற்றுள்ளது. அனுமதியின் போது இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் செயல்முறை சோதிக்கப்பட்டது.
நகராட்சி ஒப்பந்ததாரர்கள் அல்லது நிறுவனங்களை சார்ந்திருக்காமல், கபடிவாலா கனெக்ட், அமைப்பு சாரா துறை சார்ந்த மையமில்லா முறையை நாடுகிறது.
“இது போன்ற தடுப்புகளில் குப்பைகளை சேகரிப்பதில் தான் பிரச்சனை உண்டாகிறது. குப்பைகளை அகற்ற யாரும் பொறுப்பேற்காமல் இருப்பதால் தடுப்புகள் அப்படியே விடப்படுவதும் உண்டு,” என்கிறார் ஹண்டே.
இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் கபடிவாலா கனெக்ட் தடுப்பில் இருந்து குப்பைகளை அகற்ற, உள்ளூர் குப்பை வாங்குபவர்கள் மற்றும் குப்பை சேகரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த தடுப்பை பராமரிக்க தற்போது மாத சம்பள அடிப்படையில் இரண்டு குப்பை சேகரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்த எண்ணிக்கையை 4 அல்லது 5 ஆக உயர்த்த உள்ளனர். மேலும், 50 குப்பை சேகரிப்பாளர்கள் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத்தவிர, ஐந்து குப்பை சேகரிப்பு கடைகள், பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டு, முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டம், பயிற்சி, முறையான தரவுகள் சேகரிப்பு மற்றும் திடமான பாலி புரோபலினை தரம் பிரித்து எடுப்பதற்கான அமைப்பு சார முறை வசதியையும் கொண்டுள்ளது.
இந்த மையமில்லா அணுகுமுறை செலவு குறைந்தது மற்றும் இந்திய நகரங்களில் வளர்த்தெடுக்க கூடிய என்கிறார் ஹண்டே.
“பெரிய ஒப்பந்ததாரர்களுடன் செயல்படுவதை விட – இது செலவு மிக்கது, மெதுவானது- அருகாமையில் உள்ள குப்பை சேகரிப்பாளர்கள், குப்பை வாங்குபவர்களுடன் இணைந்து செயல்படலாம்,” என உணர்த்திக் கொண்டிருக்கிறோம் என்கிறார்.
இந்த திட்டம், கழிவு நிர்வாகத்தில் பொறுப்பான கவனம் கொண்டிருப்பது, அதிலும் குறிப்பாக முந்தைய தடுப்பு சார்ந்த திட்டம் மோசமான பராமரிப்பால் தோல்வி அடைந்ததை அடுத்து, அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சரியான பார்ட்னர்கள் கிடைத்த பிறகு இந்த திட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல இருப்பதாக ஹண்டே கூறுகிறார்.
தற்போதைய நிலையில் பக்கிங்காம் கால்வாய், மிதக்கும் கழிவுகளை தடுப்பதற்கான கருவியாகவும், சோதனை ஓட்டமாகவும் அமைகிறது. ஆழமான பிரச்சனைகள் இருந்தாலும், குறைந்த பட்சம் குறுகிய கால அளவிலேனும், குறைந்த செலவிலான உள்கட்டமைப்பு, உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச சந்தையின் தேவை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் மாசு ஏற்படுவதை மந்தமாக்க உதவும் என உணர்த்துகிறது.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan