வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியில் கழித்துவரும் மாற்றுதிறனாளிகளுக்கு அவர்களது அடிப்படைத் தேவைகளை பெறுவதே ஒரு பெரும் போராட்டம். அதிலும், சமூகத்தின் பெரும்பாலான கட்டுமான அமைப்புகள் அவர்களுக்கு பொருந்துவதில்லை. அப்படியாக, கண்டுக்கொள்ளப்படாமலும், அலட்சியமாக கடக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஜிம், சென்னையில் முதன்முறையாக அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. பாரா-ஒலிம்பிக்கில் பதக்கங்களை மட்டுமே எதிர்நோக்கினால் போததல்லவா?!
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னோடி மறுவாழ்வு மையமான "பெட்டர் வேர்ல்ட் ஷெல்டர்" (Better World Shelter) எனும் இடத்தை நடத்திவரும் ஐஸ்வர்யா ராவ்வின் முயற்சியால், அவர்களது மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது மாற்றுதிறனாளிகளுக்கான ஜிம்.
பட உதவி: தி இந்து
2016ம் ஆண்டு குழந்தை மருத்துவரும், மாற்றுத்திறனாளிகளின் உரிமை ஆர்வலருமான டாக்டர் ஐஸ்வர்யா ராவ்வால் நிறுவப்பட்ட இந்த மையமானது, டோர்காஸ் கல்வி, கலை மற்றும் கலாச்சார ஆராய்ச்சி மையத்தின் கீழ், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நுங்கம்பாக்கத்தில் இயங்கும் இந்த மையம், ஐஸ்வர்யாவின் தீவிர முயற்சியால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கான உடற்பயிற்சி மையத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற உபகரணங்களை வழங்கியுள்ளது.
இத்திட்டமானது, பெண்களது வலிமையை வளர்க்கவும், இயக்கத்தை மேம்படுத்தவும், அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம், அவர்களுக்கு உடற்பயிற்சி, மன மற்றும் உடல் நல்வாழ்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் பெறமுடியும். ஏனெனில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளம் பெண்களுக்கு, விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த திருப்புமுனையாக அமையக்கூடும். உடல் வலிமையை மட்டுமல்ல, தனிமை, ஆரம்பகால திருமணம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இன்னொருவரை சார்ந்திருப்பதிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கான பாதையையும் வழங்குகிறது.
விருதுநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நதியா, அவரது வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பாக விளையாட்டைப் பார்த்தார். பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அவர், ஸ்போர்ட்ஸ் கேரியரை வளமாக்கிக் கொள்ளும் நோக்கில் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
ஒரு பாரா-தடகள வீரராகப் பயிற்சி பெறத் தொடங்கினார். ஈட்டி எறிதல் மற்றும் ஷாட் புட்டிலிருந்து தொடங்கி, பின்னர், பவர் லிஃப்டிங்கில் இறங்கினார்.
கடந்த சில ஆண்டுகளில், 38 தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, விளையாட்டில் அவருக்கான ஒரு வாழ்க்கையை சீராக உருவாக்கியுள்ளார். பெட்டர் வேர்ல்ட் ஷெல்டரில் வசிக்கும் பல பெண் விளையாட்டு வீரர்களில் நதியாவும் ஒருவர்.
"எங்கெளுக்கென ஒரு ஜிம் இருப்பது எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும், எங்களுக்கென்று எப்போதும் விதிக்கப்பட்டுள்ள வரம்புகள் மற்றும் விரக்தி நிறைந்த நான்கு சுவரை தாண்டி வெளி உலகைக் காண உதவுகிறது," என்று புதுநம்பிக்கையுடன் பகிர்ந்தார் நதியா.
இந்த முயற்சி மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஒரு கேம் சேஞ்சராகியுள்ளது. ஏனெனில், அவர்கள் விளையாட்டை ஒரு தனிப்பட்ட இலக்காக மட்டும் பார்க்காமல், தங்களை ஓரங்கட்டி வைக்கும் உலகில் அதிக சுதந்திரம், இயக்கம் மற்றும் தெரிவுநிலைக்கான பாதையாக பார்க்கிறார்கள். ஜிம்மில், மார்பு தசைகளை வலுப்படுத்தும் ஜெஸ்ட் ப்ரஸ்ஸஸ், லெக் கர்ல்ஸ் மற்றும் லேட் புல்டவுன்கள் போன்ற பல்வேறு பயிற்சிகளுக்கான இயந்திரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலிகளிலிருந்து உபகரணங்களில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளுக்கு எளிதாகவும் சுதந்திரமாகவும் நகர அனுமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து உபகரணங்களின் கைப்பிடிகளும் தடிமனாகவும், விளிம்பு பிடிகளைக் கொண்டதாகவும், மென்மையான, வழுக்காத மேற்பரப்புகளைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதன் உயரம் மற்றும் எந்ததிசையில் வேண்டுமா அதற்கு ஏற்ப அட்ஜெட்ஸ் செய்ய முடியும்.
41 வயதான சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனையான கே மேரி கூறுகையில், "இந்த புதிய ஜிம் ஆனது, வழக்கமான ஜிம்மில் டம்பல்ஸை மட்டுமே நம்பியிருந்த என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வலிமைப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது."
"அப்பர் பாடியை வலுப்படுத்த வழக்கமான ஜிம்மில் வெயிட் பயிற்சி மட்டுமே செய்யமுடியும். ஏன், பல நேரங்களில் அந்த ஜிம்களையும் எங்களால் அணுக முடியாது. ஏனெனில், அவை லிஃப்ட் வசதியின்றி மேல்தளங்களில் அமைந்திருக்கும். மிக முக்கியமாக, ஜிம்முக்குள் நுழைவது தொடங்கி, உபகரணங்களை கையாளவும், ஜிம்முக்குள் வலம்வரவும் வேறொருவரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இப்போது நாங்களே இதையெல்லாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்" என்று உற்சாகத்துடன் பகிர்ந்தார்.
பட உதவி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
38 வயதான ஜே பெனிடா மற்றும் 50 வயதான மாடில்டா ஃபோன்செகா போன்ற சக்கர நாற்காலி பயனர்களையும் உள்ளடக்கிய மேரி மற்றும் அவரது குழு, சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்று கோப்பையுடன் திரும்பியது.
"வழக்கமான ஜிம்களில் வெறும் வெயிட் பயிற்சிகள் மட்டும் செய்வதை காட்டிலும், தொடர்ந்து இங்கு எல்லாவித பயிற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம், வேகமாக உடல் வலிமையையும், தசைகளை பில்ட் செய்கிறது. மாற்றுத்திறனாளியாக இருப்பினும், எனது இயக்கமும், நெகிழ்வுத்தன்மையும் அதிகரித்து வருவதை காண்கிறேன். இது, என்னை மிகவும் சுதந்திரமாக உணர வைக்கிறது," என்று நெகிழ்வுடன் பகிர்ந்தார் பெனிடா.
தமிழில்: ஜெயஸ்ரீ
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா!