+

சவாலான மலைப் பாதை பயணம்; தினம் 200 உணவு ஆர்டர்கள் டெலிவரி - இணையத்தைக் கலக்கும் சீன டெலிவரிமேன்!

சீனாவில் சாலை வசதியில் அதிகமில்லாத மெடோக் கவுண்டி என்ற சிறிய மாவட்டம் ஒன்றில், தினமும் 200க்கும் மேற்பட்ட உணவு ஆர்டர்களை டெலிவரி செய்யும் 24 வயதான இளைஞர் ஒருவர் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறார்.

வீட்டில் சமைப்பதை குறைந்து ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதிலும் வீட்டில் இருந்தபடியே, பகல், இரவு என பாராமல் எந்த நேரத்திலும் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி வந்த பிறகு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கும், உணவகங்களுக்கும் இடையே துல்லியமான நேரத்தில் உணவுப் பதார்த்தங்களைக் கொண்டு சேர்ப்பதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் பங்கும் முக்கியமானது. பெருநகரங்களில் வாகனப் போக்குவரத்துகளுக்கு மத்தியில் அவர்கள் ஓடி, ஓடி உணவுகளை உரிய நேரத்தில் சேர்ப்பது மிகப்பெரிய சவால் என்றால், சாலை வசதிகள்கூட இல்லாத மலைப்பாங்கான இடங்களில் உணவு டெலிவரி செய்பவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

ஆனால், அப்படியான சவாலான சூழ்நிலையிலும் நாளொன்றிற்கு 200க்கும் மேற்பட்ட உணவு டெலிவரிகளைச் செய்து, இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஹுவாங் கைஹோங் என்ற 24 வயது இளைஞர் ஒருவர்.

delivery man

தினமும் 200 ஆர்டர்கள் டெலிவரி

தென்மேற்கு சீனாவின் திபெத் பகுதியில், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நியிஞ்சியில் உள்ளது மெடோக் கவுண்டி. 15 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்த மாவட்டம், சீனாவின் சாலைப் போக்குவரத்தைக் கொண்ட கடைசி மாவட்டம் என்கிறது சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகம்.

சீனாவின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான இங்கு, டெலிவரிமேனாக வேலை பார்த்து வருகிறார் ஹுவாங் கைஹோங். அப்பகுதியில் முழுநேர டெலிவரிமேனாக உள்ள இவர், வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்பட்டு வருகிறார். நாளொன்றுக்கு இவர் சுமார் 200 ஆர்டர்களை டெலிவரி செய்கிறார் என்றால், அவர் எப்படி சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார் என நாம் தெரிந்து கொள்ள இயலும்.

’சீனாவின் தனிமையான ரைடர்’ (China’s loneliest rider) என ஹூவாங்கை, அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

delivery man

திபெத்தின் அழகால் ஈர்ப்பு

அலிபாபாவின் உணவு விநியோக தளமான ’தாவோபாவோ ஷாங்கோ’ (Taobao Shangou), கடந்த 2024ம் ஆண்டுதான் மெடோக்கில் தனது சேவையைத் தொடங்கியது. அப்போது, தனது நண்பர் ஒருவர் மூலம் அதில் டெலிவரிமேனாகச் சேர்ந்துள்ளார் ஹூவாங். காலப்போக்கில் அப்பகுதி மக்களின் பிரியமான டெலிவரிமேனாக மாறிய அவர், உணவுகளை டெலிவரி செய்வதை தனது முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார்.

தனது அனுபவங்கள் குறித்து தாவோபாவோ ஷாங்கோவுக்கு, ஹூவாங் அளித்துள்ள பேட்டியில், ‘தான் சிச்சுவான் மாகாணத்தில் பிறந்ததாகவும், திபெத்தின் நிலப்பரப்புகளால் ஈர்க்கப்பட்டு அங்கு வேலைக்குச் சென்றதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

ஆரஞ்சு நிற சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஆர்டர்களை டெலிவரி செய்யும் ஹூவாங், நாளொன்றுக்கு சுமார் 200 ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார். இது சீனாவின் முக்கிய நகரங்களில் டெலிவரி ரைடர்களாக இருப்பவர்களைவிட பன்மடங்கு அதிகம். அவர்கள் நாளொன்றுக்கு 40 முதல் 60 ஆர்டர்களையே டெலிவரி செய்வதாகவும், அதில் ஒரு ஆர்டருக்கு சுமார் நான்கு முதல் எட்டு யுவான் (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் (ரூ.50ல் இருந்து ரூ.100 வரை) சம்பாதிப்பதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

delivery man

சவால்களும், அபாயங்களும் அதிகம்

நியிஞ்சி நகரில் உள்ள டெலிவரி நிலைய மேலாளரின் ஆதரவுடன், மெடாக் முழுவதும் 300க்கும் மேற்பட்ட உள்ளூர் வியாபாரிகளை நேரில் சந்தித்து, அவர்களது உணவு மெனுக்களை தங்களது உணவு தளத்தில் பதிவேற்றவும் உதவியுள்ளார் ஹூவாங். தாவோபாவோ ஷாங்கோவின் வருகையால் மெடாக்கில் 30% உணவு வணிகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடிக்கடி மழை பொழியும் மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்டது மெடாக். அவற்றில் வாகனம் ஓட்டும் போது, வழுக்கி விழும் அபாயங்கள் அதிகம். ஆனாலும், தனது வேலையை சவாலாக எடுத்துக் கொண்டு, வழுக்கி விழுவதால் உடலில் அடிகள் பட்டாலும், தனது வாகனத்திற்கும் பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, இந்த வேலையை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வதாகக் கூறுகிறார் ஹூவாங்.

“சாலையில் எனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, என்னைக் கடந்து செல்லும் காற்றை நான் ரசிக்கிறேன். ஒவ்வொரு ஆர்டரில் இருந்தும் நான் சம்பாதிக்கும் பணம் என்னை தொடர்ந்து இந்த வேலையை செய்யச் சொல்கிறது,” என தனது வேலையில் தான் அடையும் திருப்தி குறித்து ஹூவாங் குறிப்பிடுகிறார்.
delivery man

ஹூவாங்கைப் பாராட்டும் நெட்டிசன்கள்

தினமும் 200 ஆர்டர்கள் என்பதால், ஹூவாங் 24 மணி நேரமும் டெலிவரி செய்து கொண்டே தான் இருப்பார் என நாம் நினைக்கக்கூடாது. ஏனென்றால், வேலை நேரத்திற்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசிப்பது, அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் பனி மூடிய சிகரங்களுக்கு சவாரி செய்வது என நேரத்தை சுவாரஸ்யமாக செலவு செய்வதாக கூறும் ஹூவாங், ‘தனிமையுடன் வாழக் கற்றுக் கொண்டதாகவும், தனிமை என்பது நான் பிறந்தபோதே நான் கொண்டு வந்த ஒன்று,’ என்றும் கூறுகிறார்.

ஹூவாங்கின் இந்த டெலிவரிமேன் வேலை மற்றும் வாழ்க்கைச் சூழல் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

“ஹுவாங் ஒரு கடின உழைப்பாளி மற்றும் திறமையான இளைஞன். அவரால் ஓய்வு எடுக்க முடியாது, இல்லையெனில் பலர் சாப்பிடாமல் இருப்பார்கள்,” எனப் பாராட்டி பயனர் ஒருவர் சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமும் 200க்கும் மேற்பட்ட ஆர்டர்களை டெலிவரி செய்தபோதும், அவரது வருமானம் பற்றி அவரோ, அவரது உணவு நிறுவனமோ வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், போதுமான பணத்தை சேமித்தவுடன் யுன்னான் மாகாணத்தில் உள்ள டாலிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் ஹூவாங்.

facebook twitter