ரூ.3 லட்சம் மானியத்துடன் 'முதல்வர் மருந்தகம்' தொடங்குவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

03:05 PM Feb 25, 2025 | Chitra Ramaraj

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகம்' என்ற பெயரில் நேற்று (பிப்ரவரி 24ம் தேதி) மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில், கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11க்கே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு மட்டுமல்ல, புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் மருந்தாளுனர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், ரூ. 3 லட்சம் மானியத்துடன் சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், இந்த முதல்வர் மருந்தகங்களை ஆரம்பிப்பதன் மூலம், தாங்களும் தொழில் வாய்ப்பு பெற்று, மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்ய முடியும்.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதியானவர்கள் யார் யார்? தேவையான ஆவணங்கள் மற்றும் சிறப்புச் சலுகைகள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்...

Image courtesy : Mudhalvar marundhagam website

முதல்வர் மருந்தகம் திறக்க எப்படி விண்ணப்பிக்கலாம்?

முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், கல்வித் தகுதி, கட்டிட விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் முக்கியமாகக் கருதப்படும். எனவே, விண்ணப்பதாரர் மிகுந்த கவனத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு என்ன தகுதிகள் தேவை?

  • D.Pharm / B.Pharm கல்வித்தகுதி உடைய தொழில்முனைவோர் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் போர்டல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • தொழில்முனைவோர் சான்றிதழ் வைத்திருப்பவராக இல்லாவிட்டால், D.Pharm / B.Pharm சான்றிதழை வைத்திருக்கும் தனிநபரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

  • மருந்து உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவை.

  • ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்க சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கட்டாய தேவை ஆகும். விண்ணப்பதாரருக்கு அனைத்து தகவல் தொடர்புகளும் செய்திகளும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

i) மருந்தாளுநர் படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்.

ii) மருந்தக கவுன்சில் பதிவு சான்றிதழ்.

iii) மருந்தக கவுன்சில் ஐடி மற்றும் பிற சான்றிதழ்கள்.

iv) சொந்த கட்டிடம் என்றால் அதற்கான சொத்துவரி ரசீது நகல், மின் கட்டண ரசீது நகல், கட்டிட உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்று (NOC).

v) வாடகை கட்டிடம் என்றால் அதற்கான வாடகை ஒப்பந்தம்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள்

  • தொழில்முனைவோர் மருந்தக உரிமம் பெற்ற உரிமையாளரிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்று தங்கள் சொந்த கட்டிடத்தில் / வாடகை கட்டடத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ தொடங்கலாம்.

  • மின்சாரம் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது), தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்.

  • 110 சதுர அடி கார்பெட் ஏரியா உள்ள கடை, குளிர்சாதன பெட்டி, ஏர் கண்டிஷனர், இணைய இணைப்பு உடன் கணினி, மருந்தக SOP இன் படி, அகரவரிசை பெட்டிகளுடன் இருக்கும் அமைப்பு.

  • மருந்தகத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

மானியம்

  • பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான கள அதிகாரிக்கு அனுப்பப்படும். கள அதிகாரியின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும்.

  • ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) உடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாதிரி ஒப்பந்த படிவம் முதல்வர் மருந்தகம் இணையதளத்தில் உள்ளது.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். இதில், 50% உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரொக்கமாகவும், 50% மருந்துகளாக விற்பனைக்கு வழங்கப்படும்.

  • ஒப்பந்தம் ஏற்படுத்திய பிறகு, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் மானியத்தின் முதல் தவணையாக ரூ.1.5 லட்சம் தொகை விடுவிக்கப்படும்.

  • உட்கட்டமைப்புத் தயார்நிலையில் உள்ளதை இரண்டாவது களச் சரிபார்ப்புக்குப் பிறகு, மானியத்தின் இறுதித் தவணை ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஜெனரிக் மருந்துகளாக அளிக்கப்படும்.

  • கடன் பெற விரும்பும் தொழில்முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

  • தேவைப்படும் மூலக்கூறு மருந்துகளை Tamilnadu Consumer Cooperative Federation (TNCCF) மற்றும் மாவட்ட கிடங்குகள் மூலம் மட்டுமே வாங்கப்பட வேண்டும்.

  • மருந்தகம் நிலையான இயக்கமுறை வழிகாட்டுதல்களை (SOP) பின்பற்றி நடத்திட வேண்டும்.

  • TNCCF உடனான ஒப்பந்த நிபந்தனைகளை வழுவாது பின்பற்ற வேண்டும்.

  • ‘முதல்வர் மருந்தகம்‘ எனும் பதாகையின்கீழ் மருந்தகம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் நடத்தப்படும் எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மானிய தொகை வழங்கப்படுகிறது. எனவே, முதல்வர் மருந்தகம் செயல்படும் கட்டிடம் செயல்படும் காலம் வரை வேறு எந்த ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது

கள அலுவலரின் ஆய்வுக்கு தேவையான ஆவணங்களின் பட்டியல்கள்

 

1) B.Pharm/D.Pharm மருந்தகம் உரிமம் வைத்திருப்பவரின் ஒப்புதல் கடிதம்.

2) கவுன்சில் பதிவு

3) மருந்தகம் கவுன்சில்

4) மருந்து விற்பனை உரிமம்

5) சில்லறை விற்பனை உரிமம்

6) FSSAI சான்றிதழ்

7) உரிமை / வாடகை ஒப்பந்த ஆவணங்கள்

8) சொத்து வரி / தண்ணீர் வரி / EB பில்

9) ஜிஎஸ்டி

10) பான் கார்டு

11) ஆதார் அட்டை

12) வங்கி பாஸ்புக்

13) கட்டிட வாடகைக்கான உரிமையாளரின் ஒப்புதல் கடிதம்

14) விண்ணப்பதாரர்கள் ஆதரவற்ற விதவை /எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்கள்.

15) மருந்து உரிம சான்றிதழ்.

16) தமிழ்நாடு மருந்து உரிமம் பெற, விண்ணப்பமாக படிவம் 19, 20, 21.

17) சம்மந்தப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனருக்கான முகப்பு கடிதம்.

18) அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரால் கையொப்பமிடப்பட்ட (Attested) அங்கீகார ஆவணம்.

19) விண்ணப்பதாரர், மருந்தாளுநர் அல்லது தகுதியுடைய நபரால் நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட உறுதி ஆவண (Declaration) படிவம்.

இதர ஆவணங்கள்:

  • மருந்தக அனுமதி படிவங்கள் (படிவம் 20, 21, 19)
  • அனுபவ சான்றிதழ்
  • விரிவான திட்ட அறிக்கை (DPR)
  • ஜிஎஸ்டி சான்றிதழ், PANCARD
  • ஏற்கனவே உள்ள கடன் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை (வங்கி NOC)

முன்னுரிமை காரணிகள்

ஒரே இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படின் கீழ்க்கண்ட முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்கள்

1. D.Pharm Or B. Pharm படிப்பினை முடித்த தொழில் முனைவோர்கள்

2. பெண்கள் / ஆதரவற்ற விதவைகள்/ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

3. பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடம்

மேலும், இது தொடர்பான விபரங்களை தமிழ்நாடு அரசின் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம்.