
ஐடி துறை ஊழியர்களின் எதிர்காலம் தொடர்பாக, குறிப்பாக கோடிங்கில் ஈடுபடுபடுவர்கள் எதிர்காலம் தொடர்பாக கருத்து தெரிவித்து, இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.
ஏஐ மாதிரிகள் புதிய எல்லைகளை கடந்து கொண்டிருக்கும் நிலையில், கோடிங் செய்பவர்கள் மாற்று வேலைவாய்ப்பை நாட வேண்டும் என்கிறார் ஸ்ரீதர் வேம்பு.
ஒரு வரி கூட கோடிங் எழுத தெரியாதவர் ஏஐ உதவியுடன் பகவத் கீதை செயலியை உருவாக்கியது தொடர்பான எக்ஸ் தள பதிவிற்கு பதில் அளிக்கும்போது அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
“மேற்கோள் காட்டப்படும் பதிவு பகவத் கீதை செயலிக்கானது. கிளாடு ஏஐ கொண்டு ஆந்த்ரோபிக் நிறுவனம் முழு சி கம்பலரை உருவாக்கியுள்ளது. இது சாதாரணமான பொறியியல் செயல்பாடு அல்ல” என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
“இந்த கட்டத்தில், கோடிங் எழுதுவதை வேலையாக கொண்டவர்கள் மாற்று வாழ்வாதாரத்தை தேடத் துவங்குவது நல்லது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இதை பீதியில் சொல்லவில்லை. அமைதியாக ஏற்றுக்கொண்டே சொல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், ஏஐ புரட்சியை வழிநடத்த உலக பொருளாதாரம் எப்படி செயல்படும் என கூகுள் ஜெமினியுடன் உரையாடல் நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த உரையாடல் விவரங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார். தொழிலாளர்கள் இல்லாத பொருளாதாரத்தில் எந்த வகை சமூகம் இருக்கும் என்று விவாதித்தவர், ஏஐ மாதிரிகள் தங்கள் பணிகளை தாங்களே விமரிக்கவும் செய்திருந்தார்.
“ஓர் அனுபவம் வாய்ந்த பொருளாதார தத்துவ மேதை விவாதிப்பது போல இருந்தது. அதன் சொந்த செயல்பாட்டை விமர்சிக்க கேட்டதையும் சிறப்பாக செய்தது.”
இந்த உரையாடலின் அடிப்படையில், இந்த தொழில்நுட்பத்தின் மீது யார் கட்டணம் வசூலிக்கிறார்கள், இந்த நுட்பத்தை யார் உரிமையாக கொண்டுள்ளார்கள் என்பதை சார்ந்து இரண்டு விதமாக எதிர்காலம் அமையும் என அவர் கூறியிருந்தார்.
நேர்மறையான நோக்கில், இந்த நுட்பம் மனித வாழ்க்கையின் மையமாகி, மக்கள் வாழ்க்கை, குடும்பம், இசை, மண், நீர், கலை போன்றவற்றில் கவனம் செலுத்த உதவும். எதிர்மறையான நோக்கில் இது மையமாக்கப்பட்ட கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
விவாதம்:
ஸ்ரீதர் வேம்பின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது கருத்தை ஆமோதித்துள்ள நிலையில், இன்னொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
“கோடிங் ஏஜெண்ட்கள் மனித புரோகிராமரை விட திறன் பெற்றுள்ளன. ஆனால், அவை உருவாக்குவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள எப்போது நாம் தயாராக இருப்போம்” என்று ஒருவர் கூறியுள்ளார்.
“உண்மை தான். இது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வாய்ப்பாக அமைகிறது. என்னைப் போன்றவர்களின் நீண்ட கால கனவுகளை பரிசீலிக்கவும் உதவுகிறது” என இன்னொருவர் கூறியுள்ளார்.
“பிரபஞ்சத்தில் இன்னும் நிறைய அறிய இருக்கிறது. இன்னும் நிறைய உருவாக்க வேண்டும். சாஸ் பணிகள் முடிவது மனித குலத்தின் முடிவல்ல” என்று ஒருவர் கூறியுள்ளார்.
“தரவுகள் மற்றும் கம்ப்யூட்டிங் திறன் புதிய வாடகை என்பதால் மையமாக்கப்பட்ட கட்டுப்பாடு தான் நிதர்சனம். இந்த மாதிரிகளின் உரிமையை மையம் இல்லாமல் செய்யாவிட்டால், எதிர்காலம் மோசமாகவே இருக்கும்” என இன்னொருவர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan