இந்திய ஸ்டார்ட்அப்'களுக்கு ஆதரவளிக்க 5 நிறுவனங்களுடன் DPIIT ஒப்பந்தம்!

06:00 PM Aug 10, 2026 | YS TEAM TAMIL

ஸ்டார்ட்அப் எனப்படும் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஐந்து முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ் (Cashfree Payments), டார்வின் டைனமிக்ஸ் (Darwin Dynamics), வல்ட்ர் இந்தியா (Vultr India), கார்ஸ்24 (Cars24) மற்றும் கவுன்சில் ஃபார் ஸ்டார்ட்அப் இந்தியா ஆகிய 5 நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டார்வின் டைனமிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தமானது, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிப்பதையும்; மாசற்ற ஆற்றல் (clean energy), பசுமை ஹைட்ரஜன், செயற்கை நுண்ணறிவு (AI), காலநிலைத் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Vultr India நிறுவனத்துடனான கூட்டணி, ஸ்டார்ட்அப்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் வளங்கள், தொழில்நுட்பத் திறன் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை எளிதாக பெறுவதற்கு உதவும், என DPIIT கூறியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்களை திறமையாக கட்டமைக்கவும், தொழில் விரிவாக்கம் செய்யவும், புதுமைகளை உருவாக்கவும் முடியும்.

மறுபுறம், கார்ஸ்24 நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்குவதற்கும், வாகன மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், AI சார்ந்த தொழில்நுட்பங்களை எளிதாக்குவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன், புதிய தீர்வுகளை ஊக்குவிக்க 'ஹேக்கத்தான்' போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

"DPIIT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவை வலுப்படுத்தும் விதமாக, கவுன்சில் ஃபார் ஸ்டார்ட்அப் இந்தியா (CSI) அமைப்புடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது புதிய நிறுவனங்கள் முதலீடுகளைப் பெறுதல், உத்திசார் கூட்டாண்மைகள், வழிகாட்டுதல், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் உலகளாவிய சந்தைகளை அணுகுதல் போன்றவற்றை எளிதாக்கும்," என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.