+

‘விவசாயி மகன் டு பில்லியனர்’ - கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த Groww லலித் கேஷ்ரே!

பிரபல முதலீட்டுத் தளமான Groww-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லலித் கேஷ்ரே, அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை மூலதன உயர்வால், சொத்து மதிப்பு உயர்ந்து இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராகியுள்ளார்.

இந்தியாவில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவர்களின் முதலீட்டை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது Groww நிறுவனம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு லலித் கேஷ்ரே மற்றும் அவரது மூன்று நண்பர்கள் இணைந்து உருவாக்கிய இந்நிறுவனம், 1.5 கோடிக்கும் அதிகமான பயனர்களுடன் இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் தனிபுரட்சி செய்து வருகிறது.

கடந்த மாதம் Groww நிறுவனம் பங்குச்சந்தையில் அதன் IPO-வை (ஆரம்ப பொதுப் பங்களிப்பு) வெற்றிகரமாகத் தொடங்கியது. அறிமுக நாளிலேயே, அதன் பங்கு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. ஒரு பங்கு ₹100 க்கு பட்டியலிடப்பட்டு, நான்கு அமர்வுகளில் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ₹169 ஐ எட்டியது. இந்த ஏற்றம் ஃபின்டெக் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை ₹1 லட்சம் கோடியைத் தாண்ட வைத்தது.

Groww நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லலித் கேஷ்ரே, இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 55.91 கோடி பங்குகளை வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில், கடந்த 17ம் தேதி, தேசிய பங்குச் சந்தையில் (NSE) திங்கட்கிழமை இறுதி விலையான ₹178.23ஐ எட்டியதைத் தொடர்ந்து, லலித்தின் சொத்து மதிப்பு ₹9,960 கோடிக்கும் அதிகமாகியது. இது டாலர் மதிப்பில், அவரது பங்கு மதிப்பு $1.12 பில்லியன் ஆகும்.

இதன்மூலம், ஒரு விவசாயியின் மகனாக பிறந்த லலித் கேஷ்ரே, பங்குச்சந்தை மூலம் குறுகிய காலத்தில் பில்லியனராக உயர்ந்துள்ளார். Groww நிறுவனத்தின் பங்குச்சந்தை மூலதன உயர்வால், அவரது சொத்து மதிப்பு உயர்ந்து, தனது 44வது வயதில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராகியுள்ளார் லலித், என மணிகண்ட்ரோல் அறிக்கை கூறுகின்றது.

எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த போதும், தனது தெளிவான திட்டமிடல்களாலும், எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வைகளாலும், Groww நிறுவனத்தை ஆரம்பித்து, ஏழே ஆண்டுகளில் இந்த அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளார் லலித்.

Groww CEO

யார் இந்த லலித் கேஷ்ரே?

மத்திய பிரதேசத்தில் உள்ள லெபா என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் லலித் கேஷ்ரே. தன்னைப் போல் தன் மகனின் வாழ்க்கையும் இந்தக் கிராமத்திலேயே முடிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த லலித்தின் தந்தை, அவரை நன்றாக படிக்க வைக்க விரும்பினார். லெபாவில் ஆங்கில வழிப் பள்ளிகள் எதுவும் இல்லாததால், லலித்தை படிப்பதற்காக தனது பெற்றோரின் ஊரான கார்கோனுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

தனது தாத்தா பாட்டி ஊரில் பள்ளிக் கல்வியை முடித்த லலித், தனது கல்வித் திறமையாலும், சிறப்பான எதிர்காலத் திட்டமிடலாலும், ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார். அங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்த அவர், ஸ்டார்ட் அப்'களின் தாக்கங்களால் ஈர்க்கப்பட்டு தானும் சில ஸ்டார்ட் அப்களை ஆரம்பித்தார்.

ஆனால், அவற்றில் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் சாதிக்க முடியவில்லை. எனவே, ஃபிளிப்கார்ட்டில் தயாரிப்பு மேலாளராக பணிக்கு சேர்ந்தார். அங்குதான், ’க்ரோவ்’ ஆரம்பிப்பதற்கான விதை அவருக்குள் விழுந்தது.

groww

நண்பர்களால் உருவான Groww

ஃபிளிப்கார்ட்டில் தனது வேலையை சிறப்பாகச் செய்து கொண்டிருந்த லலித்திற்கு, உடன் வேலை பார்த்த ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சல் மற்றும் நீரஜ் சிங் ஆகியோருடன் நல்ல நட்பு உண்டானது. இந்த நான்கு நண்பர்களும் சேர்ந்து புதிதாக ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க முடிவு செய்தனர்.

நான்கு நண்பர்களுக்கும் ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, ஃபின்டெக் நிறுவனம் ஒன்றை தொடங்குவது, என அவர்கள் முடிவு செய்தனர். அவர்களது திட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதுபோல், 2016ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமைந்தது.  

பணமதிப்பிழப்பிற்குப் பின் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு மாறத் தொடங்கினர். ஆனாலும் ஆரம்பத்தில் அவர்களுக்கு அது சிக்கலாகவே இருந்தது. முதலீடுகள் செய்வதிலும் இந்த சிக்கல் எதிரொலித்தது.

மக்களின் இந்தக் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது லலித் மற்றும் அவரது நண்பர்கள் குழு. இந்தியர்களின் முதலீட்டு செயல்முறை சிக்கல்களுக்கு தீர்வாக, 2016ம் ஆண்டு Groww-வை அவர்கள் ஆரம்பித்தனர். ஆன்லைன் முதலீட்டு தளமான க்ரோவ், 2016ல் தொடங்கப்பட்ட போதும், அதன் செயலி மற்றும் வலைதளப் பக்கம் 2017ம் ஆண்டு இறுதியில்தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

groww

Groww நிறுவனத்தை நிறுவிய நால்வர் படை!

முதலீட்டாளர்களைக் கவர்ந்த எளிமை

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான தளமாக தொடங்கப்பட்ட க்ரோவ், 3 ஆண்டுகளுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டாக், IPO, டிஜிட்டல் கோல்டு மற்றும் ETF என தனது தளங்களை விரிவு படுத்தியது. இணைய வளர்ச்சியால், பங்குசந்தை முதலீடுகளை நோக்கி இந்தியர்கள் தங்கள் கவனத்தை திருப்ப, அவர்களது தேவையை க்ரோவ் எளிமையாக்கியது. இதனால், க்ரோவ்வில் முதலீடுகள் குவியத் தொடங்கின.

லலித்தின் தலைமையின் கீழ், க்ரோவ் நிறுவனம் செக்கோயா கேப்பிடல் இந்தியா, Y காம்பினேட்டர், ரிப்பிட் கேப்பிட்டல், டைகர் குளோபல் மற்றும் ஐகானிக் க்ரோத் உள்ளிட்ட முன்னணி உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தது.

இதனால் இந்திய மதிப்பில் சுமார் 1,800 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதன்பின், விளம்பர உத்தி, புதுமையான வசதிகள் என அடுத்தடுத்து தனது தளத்தை 'க்ரோவ்' விரிவாக்கிக் கொண்டே செல்ல 2021-ல் $1 பில்லியன் மதிப்பீட்டைக் கடந்த பிறகு, Groww யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டில் $3 பில்லியன் மதிப்பீட்டைத் தாண்டியதைத் தொடர்ந்து, ‘க்ரோவ்’ நிறுவனத்தைத் தேடி, ஒரு கட்டத்தில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா போன்ற தொழில்துறை ஜாம்பவான்களும் வரத் தொடங்கினர்.

lalit keshre

பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான லலித்

Groww நிறுவனமானது, தனது வெற்றிப் பயணத்தின் அடுத்த கட்டமாக, கடந்த மாதம் பங்குச்சந்தையில் அதன் IPO-வை (ஆரம்ப பொதுப் பங்களிப்பு) தொடங்கியது. முதல் நாளிலேயே அதன் பங்கு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததோடு, ஒரு பங்கு ₹100க்கு பட்டியலிடப்பட்டு, நான்கு அமர்வுகளில் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ₹169 ஐ தொட்டது. இந்த ஏற்றம் ஃபின்டெக் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை ₹1 லட்சம் கோடியைத் தாண்ட வைத்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 17ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் (NSE) க்ரோவ்வின் பங்குகள் இறுதி விலையான ₹178.23ஐ எட்டியது.

இதன்மூலம், Groww நிறுவனத்தில் கிட்டத்தட்ட 55.91 கோடி பங்குகளை வைத்திருக்கும் லலித்தின் சொத்து மதிப்பும் உயர்ந்தது. அவரது சொத்து மதிப்பு₹9,960 கோடிக்கும் அதிகமானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் லலித்.

தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளிலேயே நாட்டின் மிகப் பெரிய பங்குத் தரகு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றதோடு, லலித் கேஷ்ரோவையும் பெரும் கோடீஸ்வரராக்கி இருக்கிறது க்ரோவ்.

More News :
facebook twitter