மத்திய பட்ஜெட் 2026–27 தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை குறிக்கும் பாரம்பரிய ‘அல்வா’ விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். ரைசினா ஹில்லில் அமைந்துள்ள வடக்கு மாளிகை (நார்த் ப்ளாக்) வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா, நிதியமைச்சகத்தின் பழமையான மரபாக தொடர்ந்து வருகிறது.
பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாரம்பரிய இனிப்பான ஹல்வா தயாரித்து வழங்கப்படும் இந்த விழா, பட்ஜெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ‘லாக்-இன்’ காலகட்டத்திற்குள் செல்லும் முன் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும், என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபைத் தொடரும் வகையில், நார்த் ப்ளாக்கின் அடித்தளப் பகுதியில் இந்த விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நிதியமைச்சருடன், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி, நிதியமைச்சகத்தின் பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவைத் தொடர்ந்து, நிதியமைச்சர் பட்ஜெட் செய்தியாளர் அறைகளை பார்வையிட்டு, ஏற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், பட்ஜெட் குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
உலகளாவிய புவியியல் அரசியல் சவால்களுக்கிடையிலும் நடப்பு நிதியாண்டில் 7.6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் சூழலில், நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக 2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
முந்தைய ஐந்து முழுமையான மத்திய பட்ஜெட்டுகள் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டைப் போலவே, இந்த முறையும் முழுமையாக காகிதமற்ற (பேப்பர்லெஸ்) வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆண்டு நிதி அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா உள்ளிட்ட அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் ‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்’ மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் வழங்கப்படும்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கும் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் பயன்பாட்டிற்கு இருக்கும் என்றும், நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு பிப்ரவரி 1 அன்று செயலியும் இணையதளமும் வழியாக அனைத்து ஆவணங்களும் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.