உலகளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், உலகளவில் 3,428 பேர் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டைவிட சுமார் 400 பேர் இந்தாண்டு புதிய கோடீஸ்வரர்களாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்தப் புதிய கோடீஸ்வரர்கள் சுமார் 20.1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வத்தைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்தாண்டைவிட சுமார் 4 டிரில்லியன் டாலர் அதிகமாகும்.
இந்தக் கோடீஸ்வரர்களில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 989 பேர் உள்ளனர். அதாவது, உலகின் பெரும் பணக்காரர்களில் 20ல் 15 பேர் அமெரிக்காவில்தான் வசித்து வருகின்றனர். இரண்டாம் இடத்தில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 610 கோடீஸ்வரகள் உள்ளனர். இந்தப் பட்டியலில் 229 கோடீஸ்வரர்களுடன் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
உலகிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருந்தாலும், அதில் இந்திய அமெரிக்கர்களின் பங்கும் மிக அதிகம். தொழில்நுட்பம், நிதி மற்றும் சுகாதாரம் என அங்கு பல்வேறு துறைகளில், பில்லியன் டாலர் வணிகங்களைக் கட்டியெழுப்பி, செல்வாக்கு மிக்க பணக்காரர்களாக இந்திய-அமெரிக்கர்கள் திகழ்ந்து வருகின்றனர்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2025-26ம் ஆண்டிற்கான அமெரிக்க பில்லியனர்கள் பட்டியல் மூலம் இது தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்பத் தலைவர்களின் ஆதிக்கம்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ள பல இந்திய-அமெரிக்க கோடீஸ்வரர்கள் தொழில்நுட்பத் துறையின் மூலம் செல்வம் ஈட்டி கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் ஆவர். அவர்களில்,
254-வது இடத்தில் உள்ள வினோத் கோஸ்லா, சுமார் 12.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்தக் குழுவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
71 வயதான இவர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் OpenAI மற்றும் DoorDash போன்ற நிறுவனங்களின் ஆரம்ப முதலீட்டாளராவர். கோஸ்லா வென்ச்சர்ஸ் நிறுவனம் மூலம் ஒரு முக்கிய முதலீட்டாளராகவும் இவர் திகழ்கிறார்.
இந்தப் பட்டியலில் 422வது இடத்தில் இருக்கும் ஜெய சௌத்ரியின், நிகர சொத்து மதிப்பு சுமார் 8.4 பில்லியன் டாலர்கள் ஆகும். 66 வயதான இந்தத் தொழில்முனைவோர், Zscaler என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவியவர். சமீபகாலமாக வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை இணையத்திற்கு மாற்றி வருவதன் மூலம், சௌத்ரியின் நிறுவனம் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 730வது இடத்தில் உள்ள ஜெயஸ்ரீ உல்லால், சுமார் 5.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் விளங்கும் மற்றொரு முக்கிய தொழில்நுட்பத் தலைவர் ஆவார். 64 வயதான இவர், அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தொழில்நுட்பத் துறையில் மிகவும் வெற்றிகரமான பெண் நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார்.
வினோத் கோஸ்லா
மற்ற தொழில்துறைகளில் உள்ள தொழில்முனைவோர்
தொழில்நுட்பத்தைத் தாண்டி, இந்திய-அமெரிக்க கோடீஸ்வரர்கள் வேறு பல தொழில்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். 749-வது இடத்தில் உள்ள ராகேஷ் கங்வால், விமானப் போக்குவரத்துத் துறையில் தனது செல்வத்தை ஈட்டியதோடு, இண்டிகோ விமான நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் நன்கு அறியப்படுகிறார்.
762-வது இடத்தில் உள்ள தொழில்நுட்ப முதலீட்டாளரும் தொழில்முனைவோருமான ரோமேஷ் டி. வத்வானி, பல பெருநிறுவன மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியதற்காகவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பெருமளவில் முதலீடு செய்ததற்காகவும் அறியப்படுகிறார்.
புதிய தலைமுறை தொழில்முனைவோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி,
இந்தப் பட்டியலில் 954-வது இடத்தில் உள்ள பைஜு பட், ராபின்ஹுட் என்ற பங்கு வர்த்தகத் தளத்தை இணைந்து நிறுவியவர் ஆவார். இது அமெரிக்காவில் சில்லறை முதலீட்டாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பட்டியலில், பிரபல முதலீட்டு மேலாளரான ராஜீவ் ஜெயினும் உள்ளார்.
சிலிக்கான் வேலியின் செல்வாக்கு
பல இந்திய-அமெரிக்க கோடீஸ்வரர்கள் சிலிக்கான் வேலியோடும், துணிகர மூலதனச் சூழலுடனும் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். இதற்கு நல்லதொரு உதாரணமாக, இந்தப் பட்டியலில் 1137-வது இடத்தில் உள்ள கவிதர்க் ராம் ஸ்ரீராம், கூகிளின் ஆரம்பகால முதலீட்டாளராக இருந்து, பின்னர் நன்கு அறியப்பட்ட துணிகர மூலதன முதலீட்டாளராக உயர்ந்தவர்.
இதேபோல், இந்தப் பட்டியலில், 1189-வது இடத்தில் உள்ள ஹேமந்த் தனேஜா, பல தொழில்நுட்ப மற்றும் சுகாதாரத் தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவளித்த மற்றொரு துணிகர முதலீட்டாளர் ஆவார். மேலும், 1251-வது இடத்தில் உள்ள, பிளிட்ஸ் ரிவார்ட்ஸின் நிறுவனரான அன்குர் ஜெயின், தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சேவைகளில் நிறுவனங்களை உருவாக்கியுள்ள இளம் தலைமுறை தொழில்முனைவோர்.
1755-வது இடத்தில் உள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த விவேக் ராமஸ்வாமி, அரசியல் மற்றும் பொது வாழ்வில் நுழைவதற்கு முன்பு, தனது ரோய்வன்ட் சயின்சஸ் என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் புகழ் பெற்றவர்.
இந்தப் பட்டியலில் பல தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவியதற்காக அறியப்பட்ட மென்பொருள் தொழில்முனைவரான ஜோதி பன்சால் 1834-வது இடத்தையும், முதலீடுகள் மூலம் தனது செல்வத்தை உருவாக்கிய சூர்யா மிதா 1913-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
தொழில்நுட்பச் சேவைகளின் முன்னோடியான பாரத் தேசாய், இந்தப் பட்டியலில் 2481-வது இடத்திலுள்ளார். இவர் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் ஒரு முக்கிய அவுட்சோர்சிங் நிறுவனமாக வளர்ந்த ஐடி ஆலோசனை நிறுவனமான சிண்டெலின் இணை நிறுவனர் ஆவார்.
இந்தப் பட்டியலில் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும், 2600-வது இடத்தில் உள்ளார். தொழில்முனைவோராக இல்லாவிட்டாலும், பங்கு ஊதியம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவரது நீண்டகாலத் தலைமைத்துவம் ஆகியவற்றால் பெற்றுள்ள செல்வத்தின் மூலம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.