கனரக உற்பத்தியில் பாலினச் சேர்க்கையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக, மங்களூரில் உள்ள பிரஜ் இண்டஸ்ட்ரீஸின் ஜென்எக்ஸ் நிறுவனம், 50 இளம் பெண்களை வெல்டர்களாகப் பயிற்றுவித்து பணியில் அமர்த்தி உள்ளது. ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்துப் போராடிய கர்நாடகாவின் ஒரு சமஸ்தானமான கிட்டூரின் 19 ஆம் நூற்றாண்டின் ராணி சென்னம்மாவின் பெயரால் அழைக்கப்படும் இந்தப் பெண்கள், இப்போது அழுத்தக் கப்பல்கள், வடிகட்டுதல் நெடுவரிசைகள் மற்றும் ஹைட்ரோகார்பன் துறைக்கான சேமிப்பு அமைப்புகள் போன்ற முக்கியமான உபகரணங்களை வெல்டிங் செய்கிறார்கள்.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் தொழிலில் அடியெடுத்து வைப்பது என்றால் என்ன? உயர் திறன் கொண்ட வர்த்தகத்தில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர், மற்றும் உற்பத்தித் தளத்தில் ஒவ்வொரு நாளும் ஸ்டீரியோடைப்களை சவால் செய்ய அவர்களைத் தூண்டுவது எது? என்பதைப் புரிந்துகொள்ள ஹெர்ஸ்டோரி ஐந்து பெண் வெல்டர்களிடம் பேசியதில் அவர்கள் பகிர்ந்தவை...
சுசிதா
கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகிலுள்ள உச்சிலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான சுசிதா. அவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, அவரது இரு குழந்தைகளுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். பி.காம் பட்டதாரியான அவருக்கு படிப்புக்கேற்ற கணக்காளர் பணி எங்கும் அமையவில்லை. கிடைத்த அக்கவுண்ட்ஸ் பணிகளும், தொலைத் துாரத்திற்கு செல்லவேண்டியதாகவோ அல்லது சம்பளம் குறைவாக இருந்துள்ளது. அதனால், கிடைத்த பணிகளில் செய்து வந்தார். ஒரு சிறிய பிரிண்டிங் பிரஸ்ஸில், சிலிண்டர்களுக்கு ஸ்டிக்கர்கள் தயாரிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தான், மங்களூருவில் உள்ள பிரஜ் தொழிற்சாலை பெண்களுக்கு வெல்டர்களாக பயிற்சி அளிக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டார். அதற்கு விண்ணப்பித்தார்.
"இன்டர்வியூக்கு வந்து செலக்ட் ஆகினேன். மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு, டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்ற பிறகு, முழுமையாக வேலையில் சேர்ந்தேன். ஒன்பது மாதங்களுக்கு முன்பிருந்து பணிபுரிந்து வருகிறேன்," எனும் அவர், தொடக்கத்தில் தயக்கம் காட்டியுள்ளார்.
ஆண்களுக்கே உரித்தானது என்று வெல்டிங் பணி சமூகத்தில் வரையறுக்கப்பட்டிருப்பதால், ஆரம்பத்தில் அவர் தயங்கியுள்ளார். பின், யூடியூப்பில் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பெண் வெல்டர்களில் வீடியோக்களை பார்த்தபிறகு, சுசிதாவும் மற்ற பெண்களும் தாங்கள் வித்தியாசமான ஒன்றைச் செய்கிறோம் என்பதையும், ஸ்டீரியோடைப்களை உடைக்கிறார்கள் என்பதையும் அறிந்தனர்.
குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவில் வெல்டராக பணிபுரிந்து வரும் சுசிதா, எட்டு மணி நேர பொது வேலையில் பணியாற்றுகிறார். மேலும், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அனைத்து சலுகைகளையும் பெறுகிறார்.
"ஆரம்பத்தில், இரண்டு-மூன்று நாட்களுக்கு, வேலை சௌகரியமாக இல்லை. தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்று தோன்றியது. வேலையைக் கற்றுக்கொண்ட பிறகு, தன்னம்பிக்கையும் உந்துதலும் ஏற்பட்டது. என் குடும்பம் என்னைப் பற்றி பெருமைப்படுகிறது. என் வாழ்க்கையில் வளர்ந்து 6G வெல்டராக மாற விரும்புகிறேன் (6G வெல்டிங் என்பது 45 டிகிரி கோணத்தில் குழாயை பொருத்தும் வெல்டிங் நிலையைக் குறிக்கிறது) எதிர்காலத்தில், வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகிறேன்," என்று பெருமையாக கூறினார் சுசிதா.
அனிஷா
உடுப்பியிலுள்ள படுபித்ரி நகரத்தை சேர்ந்த அனிஷாவிற்கு வயது 26. பி.காம் பட்டதாரி. படிப்பு முடித்த பிறகு, போட்டோகிராபி துறையில் ஒரு வருடம் பணியாற்றினார். பின், உள்ளூரில் உள்ள ஃபேக்டரி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது சகோதரனின் நண்பர் மூலம், பிரஜ்ஜின் வெல்டிங் வேலைவாய்ப்பு பற்றி அறிந்துள்ளார். வேலையை பற்றிய மேற்கொண்ட தகவல்களை பெறுவதற்காக, நேரடியாக நிறுவனத்திற்கே சென்றுள்ளார்.
"ஆரம்பத்தில், பறக்கும் மின்சார தீப்பொறிகளை பார்த்து பயந்தேன். ஆனால், அதைப்பற்றி இன்னும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. என் சகோதரனும், அம்மாவும் இந்த வேலைக்கெல்லாம் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். இது, அக்சுவலி இரண்டவது பேட்ச். ஆல்ரெடி, 25 பெண்கள் வெல்டர்களாக பணிபுரிகிறார்கள். அந்த தைரியத்தில் வேலையில் சேர முடிவெடுத்தேன்," என்று கூறினார்.
கடந்த ஆறு மாதங்களாக கட்டிங் மற்றும் ட்ரில்லிங் மெஷினில் அவர் சிஎன்சி ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறார். கணினி கட்டுப்பாட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிஎன்சி வெல்டிங் வழக்கமான வெல்டிங் முறைகளை தானியக்கமாக்குகிறது, இது அதிக துல்லியத்தையும் செயல்திறனையும் உறுதி செய்கிறது.
"இந்த பணி சவாலானது என்பதால் நான் அதை ஏற்றுக்கொண்டேன். தொடக்கத்தில் நான் வெல்டிங் மெஷினை இயக்க வேண்டும் என்று யாராவது சொல்லியிருந்தால், அதைச் செய்திருக்க மாட்டேன். ஆனால், பயிற்சிக்குப் பிறகு, எனக்கு நம்பிக்கை வந்தது. பயிற்சியின் முதல் 15 நாட்கள் பயமாக இருந்தது. பின்னர், ஒரு CNC ஆபரேட்டராக பயிற்சி பெற்றேன். இப்போது வெட்டுதல் மற்றும் துளையிடுதலுக்கான கார்டெக்ஸ் மெஷினில் வேலை செய்கிறேன்," எனும் அவர், பல பெண்கள் செய்ய விரும்பாத வேலையைச் செய்வதில் பெருமைப்படுகிறார்.
"பெரும்பாலான மக்கள் செய்வதை விட நாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இயந்திரங்களை பழுதுபார்ப்பது பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகிறேன், என்றார் அவர்.
சின்சனா
பிரஜ்ஜின் இன்டர்வியூக்கான அழைப்பை சின்சனா பெற்ற போது அவர் வெல்டிங் பணி என்பது சாலையோரக் கடைகளில் ஜன்னல் பழுதுபார்த்தல் மற்றும் வெல்டிங் வேலை போன்ற வேலையென கற்பனை செய்தார். பெங்களூருவில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்த அவர், சொந்த ஊருக்கே திரும்பிட நினைத்தார். வெல்டிங் பணிகுறித்த சந்தேகம் இருப்பினும், இன்டர்வியூக்கு சென்றார். அங்கு, அவருடைய பணி என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் பெருக்கெடுக்க, வெல்டிங் வீடியோக்களை பார்த்தார்.
பிரஜ் நிறுவனத்தில் வேலை சவாலானது மற்றும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்ட பின், அவர் அதை ஏற்றுக்கொண்டார். தற்போது, ஒரு CNC ஆபரேட்டர் மற்றும் புரோகிராமராக, லேசர் கட்டிங் போன்ற பெரிய இயந்திரங்களில் பணிபுரிகிறார். மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு, அவர் 3G நிலையை முடித்து, பின்னர் டெக்னார் வெல்டிங் இயந்திரத்தில் பணிபுரிந்தார், அந்த நிலையையும் தாண்டி, இப்போது GMAW, SAW மற்றும் கோப்பிங் இயந்திரத்தில் பணியாற்றி வருகிறார்.
"பிளாஸ்மா கட்டிங் கொஞ்சம் கடினமானது. நாங்கள் கனமான பொருட்களையும் தூக்க வேண்டும், ஆனால் அதற்கு, எங்களது ஆண் சக ஊழியர்கள் உதவுகின்றனர். இந்த வேலை என்னை இன்டிபென்டன்ட்டாகவும், நிதி ரீதியாக பாதுகாப்பாகவும் இருக்க உதவுகிறது. கம்பியூட்டர் சைன்ஸில் டிப்ளோமா படித்திருந்ததாலும், புரோகிராமிங் பற்றி ஓரளவு தெரிந்திருந்ததாலும், புரோகிராமிங் யுனிட்டில் பணிக்கு சேர்த்தனர். ஆரம்பத்தில், பாதுகாப்பிற்கான உடையையும், தலைக்கவசத்தையும் அணிவது எரிச்சலாக இருந்தது. காலப்போக்கில், பழகிவிட்டது. தொடர்ந்து இங்கு பணியாற்ற விரும்புகிறேன்," என்று பகிர்ந்தார் சின்சனா.
பிரஜ்னா
பிரஜ் வெல்டிங் குழுவின் யங்கஸ்ட் வெல்டர்களில் ஒருவர் பிரஜ்னா. உடுப்பியைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தார். மங்களூரில் உள்ள ஒரு பொறியியல் தளத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது அவரது சகோதரி பிரஜ் நிறுவனத்தில் "வெல்டர்" வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். வெல்டிங் குறித்த அடிப்படை அறிவு அவருக்கு இருந்தது. ஏனெனில், வெல்டிங் பற்றிய ஒரு அத்தியாயத்தை அவர் படித்திருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த அவர், CNC ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.
"நான் சேம்ஃபரிங் இயந்திரத்தில் வேலை செய்கிறேன் (இது பொருட்களிலிருந்து கூர்மையான விளிம்புகளை அகற்றவும், வளைந்த அல்லது சாய்வான மேற்பரப்பை உருவாக்கவும் பயன்படுகிறது). ஆரம்பத்தில், கனமான பொருட்களை துாக்குவது சவாலாக இருந்தது. அதற்காக, மற்றவர்களின் உதவியை குறிப்பாக ஆண்களின் உதவியைப் பெற்றேன். ஆனால், இப்போது என் வேலையை நானே செய்கிறேன். இங்கு அதிக அனுபவத்தையும் சான்றிதழ்களையும் பெற்ற பின்னர், வெளிநாட்டில் வாய்ப்புகளைத் தேட விரும்புகிறேன். அதற்கு முன், நிறைய படிக்க வேண்டும். அதன் பிறகே பறக்க விரும்புகிறேன்," என்று உற்சாகத்துடன் கூறினார் பிரஜ்னா.
செளமியா
முப்பத்தைந்து வயது வெல்டரான சௌமியா, ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் கால் சென்டரில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகப் பணியாற்றினார். பி.ஏ பட்டம் பெற்ற செளமியா, அவரது நண்பரின் வாயிலாக பிரஜைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார். தற்போது, வெல்டை உருவாக்க ஃப்ளக்ஸ்-பூசப்பட்ட மின்முனையைப் பயன்படுத்தும் ஆர்க் வெல்டிங் செயல்முறைகளான SMAW மற்றும் FCAW ஆகியவற்றில் அவர் வெல்டராகப் பணிபுரிகிறார்.
"வெல்டிங் எப்போதும் ஒரு ஆணின் வேலையாகக் கருதப்படுவதாலும், தீப்பொறிகளாலும் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், ஆல்ரெடி பணியாற்றிவரும் ஃபர்ஸ்ட் பேட்ச் பெண்களின் மீட்டிங்கில் கலந்துகொண்டபோது, எனது சந்தேகங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. பயிற்சிக்குப் பிறகு, தன்னம்பிக்கையைப் பெற்று உற்சாகத்துடன் வேலை செய்யத் தொடங்கினேன். மிகவும் சவாலான பகுதிகளில் ஒன்று புகை. ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அவற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. இங்கு பணிபுரிவதில் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்.
ஆரம்பத்தில், செளமியாவின் தாய் இந்த வேலைக்கு செல்வதைத் தடுத்துள்ளார். ஆனால் இப்போது அவரது மகள் "வித்தியாசமான ஒன்றை" செய்கிறார் என்பதில் பெருமையடைகிறார்.
வெல்டிங் துறையில் ஒரு புதிய புரட்சி..!
பிரஜ் ஜென்எக்ஸ் லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரியும், முழுநேர இயக்குநருமான அபிஜித் டானி, பிரஜ் ஜென்எக்ஸின் ராணி சென்னம்மா முன்முயற்சியை பற்றி எடுத்துரைக்கையில்,
"இம்முயற்சியை முன்னெடுக்குகையில், எங்களது உற்பத்தித் தளத்தில் அதிக திறன் கொண்ட வேலைகளைச் செய்ய பெண்களை அனுமதிக்கலாமா என்று யோசித்தோம். ஏனெனில், இது பாரம்பரியமற்றது, குறிப்பாக இந்த துறையில் வேலை கடினமானதாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில், பெண்களால் வெல்டிங் கற்றுக்கொள்ள முடியாது என்றனர், ஆனால் நாங்கள் அது சாத்தியம் என்று உறுதியாக நம்பினோம்."
மேலும், பெண்கள் இந்த வகையான வேலைக்கு ஏற்றவர்கள் அல்ல என்ற பாரம்பரிய மனநிலைகள் மற்றும் சார்புகளையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெல்டிங்கைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு பொறியாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை தத்துவார்த்த பயிற்சியுடன், வெல்டிங் என்றால் என்ன, என்ன வகையான பொருட்கள் இதில் அடங்கும் என்பதை நீங்கள் விளக்கலாம். வெப்பநிலை, அழுத்தம் மற்றும் மின்னோட்டம் போன்ற கருத்துக்களை அனைவராலும் புரிந்து கொள்ளமுடியும்.
மற்றொரு பயம் என்னவென்றால், பெரிய பெரிய மெஷின்கள் மற்றும் வேலையின் பளுவை காணும்போது அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், 50 பெண்கள் வெற்றிகரமான களமிறங்கியுள்ளனர். இந்த 50 பெண்கள் ரோபோ இயந்திரங்கள் மற்றும் வெல்டிங்கில் வேலை செய்கிறார்கள். 50 பேர் கொண்ட அடுத்த குழுவானது, மின்சாரம், கருவி மற்றும் காப்பு வேலைகளில் கவனம் செலுத்தவுள்ளது.
உற்பத்தித் தளமானது பெண்களுக்கு வசதியாக இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் தொடங்கி, கூடுதல் பாதுகாப்பு வரை மாற்றங்களை கொண்டு வந்தோம். மேலும் நடுநிலைக் கொள்கைகளைக் கொண்டு வந்தோம். POSH (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு) பற்றி பணியாளர்களிடையே விரிவான விழிப்புணர்வை உருவாக்கினோம். இதை இப்போது UCHIT (பாலின-நடுநிலைக் கொள்கை) என்று அழைக்கிறோம். வளாகத்தில் ஒரு குழந்தை காப்பகமும் உள்ளது.
பெண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இளஞ்சிவப்பு சீருடைகள் மற்றும் வெவ்வேறு தலைக்கவசங்களும் வழங்கப்படுகின்றன. பெண்கள் ஆண்களைப் போலவே சம்பளம் பெறுகிறார்கள், பயிற்சியின் போது உதவித்தொகை பெறுகிறார்கள், மேலும், தகுதி பெற்றவுடன், ஒரே மட்டத்தில் வைக்கப்படுகின்றனர். உடல்நலம் உட்பட பல்வேறு கோணங்களில் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் தொழில்நுட்ப வழிகாட்டிகளை நியமித்துள்ளோம்.
"நாங்கள் எப்போதும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? என்று கேட்கிறோம். விஷயங்கள் எப்படி நடக்கிறது? என்பதை சரிபார்க்க நான் அவர்களை அடிக்கடி உற்பத்தி தளத்தில் சந்திப்பேன். ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு என்ற கொள்கையையும் செயல்படுத்தியுள்ளோம்," எனும் அவர், பெண்கள் உற்பத்தித் தளத்தில் அவர்களுக்கென ஒரு இடமும் எதிர்காலமும் இருப்பதை நிரூபித்து வருகின்றனர் என்று பெருமையுடன் கூறி முடித்தார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெயஸ்ரீ