‘அன்று நக்சலைட்; இன்று தெலங்கானா அமைச்சர்’ - SheSparks-இல் உரையாற்றிய சரித்திரம் படைத்த சீதக்கா!

11:10 AM Mar 16, 2026 | Jai s

தெலங்கானா மாநில அமைச்சர் தனசாரி அனசூயா சீதக்கா, பெண்கள் தங்களுக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து சரித்திரம் படைக்க வேண்டும், என்று அறிவுறுத்துகிறார்.

பெண் தலைவர்களைக் கொண்டாடும் வகையில் யுவர் ஸ்டோரி டெல்லியில் நடத்திய SheSparks 2026 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய தெலங்கானா பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சீதக்கா, ஒரு நக்சலைட்டாக இருந்து அமைச்சராக மாறிய தனது பயணத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

‘தெலங்கானாவின் இரும்புப் பெண்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் சீதக்கா கூறுகையில்,

“நான் நக்சலைட்டாக இருந்தபோது, ஒருபோதும் டிகிரி முடிப்பேன் என்று நினைக்கவில்லை, டிகிரி முடித்தபோது வழக்கறிஞர் ஆவேன் என்று நினைக்கவில்லை. வழக்கறிஞராக இருந்தபோது, நான் எம்.எல்.ஏ ஆவேன் என்று நினைக்கவில்லை. எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, நான் பிஎச்டி படிப்பை முடித்து, இந்த அமைச்சர் பதவியில் அமர்வேன், என்று கனவிலும் நினைக்கவில்லை,” என்றார்.

யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா சர்மாவுடனான கலந்துரையாடலில், சமூகத்தில் நிலவும் அநீதிக்கு எதிராகத் தான் போராடியது பற்றி சீதக்கா விவரித்தார். மேலும், ஆணாதிக்க அமைப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பெண்கள் பொருளாதார வலிமையைப் பெறும்போது, குடும்பங்கள் வலுவடைகின்றன, சமூகங்கள் அதிக மீள்திறன் பெறுகின்றன, மேலும் ஒட்டுமொத்த மாநிலமும் முன்னேறுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

நக்சலைட்டாக இருந்த காலத்தில் சீதக்கா தனது வாழ்க்கையில் மிகக் கடினமான சவால்களை எதிர்கொண்டார்; அந்தப் போராட்டக் காலத்தில் அவர் தனது கணவர் மற்றும் சகோதரரை இழந்தார். பின்னர் சமூகத்தின் மைய நீரோட்டத்திற்குத் திரும்பிய பிறகு, அவர் தனது கல்வியின் மூலம் பல சாதனை படைத்தார்.

தனது தலைமைத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், அது மூன்று முக்கியத் தூண்களால் வழிநடத்தப்படுவதாகக் கூறினார்.

“உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம்... இவைதான் எனது மூன்று முக்கிய தூண்கள். இவைதான் எனது போராட்டம், எனது விழுமியங்களின் அடிப்படை. நான் எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கும்போது, எனது தொலைநோக்குப் பார்வை மற்றுமொரு மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவை: உள்ளடக்கம், நேர்மை மற்றும் தாக்கம்,” என்று சீதக்கா விவரித்தார்.

ஒரு மெட்ரோ நகரத்தில் வசிப்பவராக இருந்தாலும் சரி அல்லது தொலைதூரக் கிராமத்தில் வசிப்பவராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பெண்ணுக்கும் வாய்ப்பு, கண்ணியம் மற்றும் தலைமைத்துவத்திற்கான வசதி கிடைக்கும் வரை ‘அதிகாரமளிக்கப்பட்ட இந்தியா’ என்ற இலக்கை அடைய முடியாது என்று அவர் கூறினார்.

தனக்கென்று ஒரு ‘காட்பாதர்’ அல்லது எந்தவொரு பெரிய சாதியின் ஆதரவும் தன்னிடம் இல்லை என்றும், சவால்களை நேரடியாக எதிர்கொள்ளும் உறுதி மற்றும் சமூகத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலுமே தான் வளர்ந்ததாக அவர் கூறினார்.

“ஒரு பெண் அடிமட்டத்திலிருந்து உயரும்போது, அவள் தன்னை மட்டும் உயர்த்திக் கொள்வதில்லை, அவள் தனது முழுச் சமூகத்தையும் தன்னுடன் சேர்த்து உயர்த்துகிறாள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

பாகுபாடு என்ற பிரச்சினை குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல; அது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் நிலவுகிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

லட்சக்கணக்கான பெண்கள், வீடாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, இப்போதும் அமைதியான முறையில் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள், என்று கூறிய அவர், அவர்கள் தங்கள் பிரச்சனைகளை மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் உதவும் தளங்கள் அவசியம் என்று அழைப்பு விடுத்தார். இத்தகைய தளங்கள் மற்ற பெண்களுக்கு ஊக்கமாகவும் ஆதரவாகவும் அமையும், என்று அவர் நம்புகிறார்.

தனது வாழ்க்கை சமூக சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறிய சீதக்கா, “நான் ஒருபோதும் பயப்படுவதில்லை, பின்வாங்குவதும் இல்லை... நாம் சவால்களை எதிர்த்துப் போராடி எதிர்கொள்ள வேண்டும், அப்போதுதான் நாம் சமூகத்தில் உயிருடன் இருக்கிறோம் என்று அர்த்தம்,” என்று உறுதிபட கூறினார்.

தனது அசாத்திய உறுதியின் மூலம் பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் சீதக்கா, புதுடெல்லியில் ஒரு பொது மேடையில் உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Induja Raghunathan