+

பசுமைப் புரட்சியில் தாக்கம் ஏற்படுத்தும் தமிழகத்தின் 4 அசத்தல் ஸ்டார்ட்அப்’கள்!

இந்தப் புதிய நிறுவனங்கள், தமிழ்நாடு எவ்வாறு வளர்கிறது, உற்பத்தி செய்கிறது மற்றும் அதன் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதை மீண்டும் வரையறுப்பதில் தனித்து நிற்கின்றன.

தமிழ்நாடு தமது உற்பத்தி வலிமைக்காக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், இப்போது புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை கைகோர்த்துச் செல்லும் ஓர் அமைதியான அதேநேரம், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் புரட்சியில் முன்னணியில் இருக்கிறது.

விவசாயத்தில் ஸ்மார்ட் தொழில்நுட்பம் முதல் கழிவிலிருந்து எனர்ஜி கண்டுபிடிப்பது வரை, புதிய தலைமுறை தொழில் நிறுவனர்கள், பொருளாதார வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பொறுப்பும் ஒன்றாகச் சேர்ந்து செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர்.

‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-ல் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், GreenPod Labs, HVA Energy Solution, Fabrula, மற்றும் iYarKai Tech Lab போன்ற புதிய நிறுவனங்கள், தமிழ்நாடு எவ்வாறு வளர்கிறது, உற்பத்தி செய்கிறது, மற்றும் அதன் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதை மீண்டும் வரையறுப்பதில் தனித்து நிற்கின்றன.

green

கிரீன்பாட் லேப்ஸ் (GreenPod Labs):

நாட்டில், சுமார் 40% பழங்கள் மற்றும் காய்கறிகள் வாடிக்கையாளர்களை சென்றடையும் முன்பே வீணாகுகின்றன. இந்த நிலையில் தீபக் ராஜ்மோகன் என்பவரால் நிறுவப்பட்ட 'கிரீன்பாட் லேப்ஸ்' நிறுவனம், விவசாயத்தில் மிகவும் தீர்வுகாண முடியாத சவால்களில் ஒன்றான உணவுப் பொருள் வீணாவதை எதிர்கொண்டு போராடி வருகிறது.

உயிரி பொருள் எனப்படும் பயோ மெட்டீரியல் அடிப்படையிலான பேக்கேஜிங்கைப் பயன்படுத்தி சென்னையை தளமாக கொண்டு இயங்கும் இந்த கிரீன்பாட் லேப்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம், ரசாயனங்கள் அல்லது குளிர்பதன வசதி பயன்படுத்தாமல், விளைபொருட்களின் ஆயுளை நீட்டிக்கிறது. கிரீன்பாட் லேப்ஸ் கொண்டுவந்துள்ள புதுமை மாதந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வாழைப் பழப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்டு, மாதத்திற்கு 15,000 டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

உணவு பொருள் வீணாவது என்பது தவிர்க்க முடியாததல்ல என்பதை நம்பும் ராஜ்மோகன், அது வடிவமைப்பில் உள்ள ஒரு குறைபாடு, அதைத் தீர்க்க முடியும் என்று அதற்கு தீர்வு கூறுகிறார். தீபக் ராஜ்மோகனை பொறுத்தவரை,

“உணவுப் பொருள் வீணாவது என்பது தடுக்கக்கூடிய பிரச்சினைதான்; புதுமை தான் அதைத் தீர்ப்பதற்கான கருவி ஆகும்,” என்கிறார்.
deepak

அவரது இந்த அணுகுமுறை, விவசாய பொருட்களில் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மையை இந்தியா எப்படிப் பார்க்கிறது என்பதை மாற்றி வருகிறது. இதை வெறும் சேதத்தைக் கட்டுப்படுத்தும் செயல் எனக் கருதாமல், அது ஒரு காலநிலை நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.

ஹெச்விஏ எரிசக்தி தீர்வு (HVA Energy Solution):

அன்பரசன் மற்றும் ஹேமலா ஆகியோரால் தொடங்கப்பட்ட HVA Energy Solution நிறுவனம், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் கழிவை ஒரு வருத்தப்படக்கூடிய பிரச்சினையாகப் பார்க்காமல், புதுமைக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது. ராமநாதபுரத்தை அடிப்படையாகக் கொண்ட இயங்கும் இந்த நிறுவனம், பிளாஸ்டிக் மற்றும் துணிக் கழிவுகளை GX பாலி திட எரிபொருளாக மாற்றுகிறது. இந்த தூய ஆற்றல் மாற்றம் நிலக்கரியை விட 90% குறைவான கார்பன்-டை-ஆக்சைடை வெளியிட்டு, அதிக வெப்ப ஆற்றல் மதிப்பையும் வழங்குகிறது.

சென்னையில் உள்ள ராணுவ கண்டோமென்ட் போர்டு முதல் கிராமப்புற நகராட்சிகள் வரை உள்ள அரசு அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து, HVA நிறுவனம் கழிவு அகற்றுதலுக்கான ஒரு மாடலை உருவாக்கியுள்ளது. அதைவிட முக்கியமாக, இந்நிறுவனம் கழிவு சேகரிப்பை வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக மாற்றி, சமூகத்தில் பசுமை வேலைகளை உருவாக்கி வருகிறது.

இப்படி, கழிவு மேலாண்மையை எனெர்ஜியை பெறுவதற்கான வாய்ப்பாக மறுவரையறை செய்வதன் மூலம், HVA நிறுவனம் நிலைத்தன்மை பெரிதாக்கக்கூடியதாகவும் மற்றும் தன்னிறைவு கொண்டதாகவும் இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

ஃபேப்ருலா (Fabrula):

ஈரோட்டைச் சேர்ந்த சண்முகவடிவேல் மற்றும் விக்ரம் கண்ணன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஃபேப்ருலா நிறுவனம், துணிக் கழிவுகள் மற்றும் விவசாயக் குப்பைகளை மறுசுழற்சி செய்து, அவற்றை பேக்கேஜிங், அலங்காரம், பொம்மைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளின் இன்டீரியர் பொருட்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் கூட்டுப் பொருட்களாக மாற்றுகிறது.

தொழில்நுட்ப ஆராய்ச்சியை கைவினை முறைகளுடன் இணைத்து, இந்தக் குழுவினர் சுழற்சி வடிவமைப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளனர்.

“உண்மையான முன்னேற்றம் என்பது நாம் இயற்கையிடமிருந்து எடுப்பதைக் கொண்டு அளவிடப்படுவதில்லை; மாறாக, நாம் எவ்வளவு பொறுப்புடன் திருப்பிக் கொடுக்கிறோம், மீட்டெடுக்கிறோம் மற்றும் புதுப்பிக்கிறோம் என்பதைக் கொண்டே அளவிடப்படுகிறது,” என்று ஃபேப்ருலா நிறுவனத்தின் தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறுகிறார் அதன் நிறுவனர் சண்முகவடிவேல்.

தமிழக அரசின் திட்டமான TANSEED 6.0 நிதி உதவி உடன் ஃபேப்ருலா நிறுவனம் அதன் உற்பத்தியைப் பெரிதாக்கி, சுழற்சி முறையில் புதுமையை கொண்டு வருகிறது. நிலைத்தன்மை நன்றாக இருக்கும், மேலும் சிறந்த முறையில் விற்கவும் முடியும் என்பதற்கு இதுவே நிரூபணம் ஆகும்.

இயற்கை லேப் (iYarKai Tech Lab):

செந்தில் குமார் பாபு என்பவரால் நிறுவப்பட்ட 'இயற்கை லேப்' நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான SILIR, காளான் வளர்ப்பைத் தானியங்குபடுத்தவும், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும், குறைந்த கழிவுடன் அதிக விளைச்சலைத் தருவதற்காகவும் ஏஐ மற்றும் இணையப் பொருட்களின் இணைப்பை (IoT) பயன்படுத்துகிறது.

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் 2,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை, சொந்தமாக காளான் சார்ந்த தொழில்களைத் தொடங்க உதவியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஒரு வாழ்வாதாரச் சூழலை உருவாக்கியுள்ளது.

"தொழில்நுட்பம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் போதுதான், அது உண்மையாகவே சக்தி வாய்ந்ததாகிறது. புதுமையை, அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதே எங்கள் நோக்கம்," என்கிறார் இயற்கை லெப் ஸ்டார்ட்அப் நிறுவனர் பாபு.

MushroomShop.in மற்றும் ChennaiSandai.com போன்ற டிஜிட்டல் தளங்களின் மூலம், இயற்கை ஸ்டார்ட்அப் நிறுவனம், விவசாயிகள் ஸ்மார்ட்டாக விவசாயம் செய்வது மட்டுமல்லாமல், ஸ்மார்ட்டாக சம்பாதிக்கவும் செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

StartupTN:

மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மாறுபட்ட வெற்றிக் கதைகளை இணைக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால், தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு'-இன் (StartupTN) 'டான்சீட்' (TANSEED) திட்டம்தான். டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.

StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.

புதிய பசுமைப் பொருளாதாரம்:

தமிழ்நாட்டின் கண்டுபிடிப்பாளர்கள், நிலைத்தன்மை என்பது ஒரு தனிப்பட்ட குறிக்கோள் அல்ல; அதுவே நவீன தொழில்முனைவின் அடிப்படை என்பதை நிரூபித்து வருகின்றனர். அவர்களின் ஐடியாக்கள் சுழற்சிகளை நிறைவு செய்கின்றன, பொருட்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கின்றன மேலும் சவால்களை மனிதர்களுக்கும் பூமிக்கும் நன்மை பயக்கும் வாய்ப்புகளாக மாற்றுகின்றன. ஒவ்வொரு தீர்வும், எதிர்கால வளர்ச்சி என்பதை உற்பத்தியைக் கொண்டு அளவிடப்படாமல், அதன் தாக்கத்தைக் கொண்டே அளவிடப்படும் என்பதை நினைவூட்டுகிறது.

தமிழ்நாடு அதன் டிரில்லியன் டாலர் லட்சியத்தை நெருங்கி வருகையில், இந்த முயற்சிகள் அடுத்த கட்டத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கின்றன: புதுப்பித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒரு குறிக்கோளுடன் கூடிய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு செழித்து வளரும் தொழில்கள் ஆகும்.


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter