‘விவசாயி மகன் டு கலெக்டர்’ - செயலற்ற 1,200 கிணறுகளுக்கு புத்துயிர் தந்த கின்னஸ் நாயகன் பிரதாப் முருகன் ஐஏஎஸ்!

06:50 PM Jun 08, 2026 | Chitra Ramaraj

சமூகத்திற்கு தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பெரும்பாலானோர் ஐஏஎஸ்-க்கு படிக்க விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலைமையில் இருந்து வருபவர்கள், தாங்கள் சிறுவயதில் அனுபவித்த, தற்போது தன்னைச் சார்ந்தவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே இத்தகைய உயரிய பதவிகளில் அமர விரும்புகின்றனர்.

அப்படிப்பட்ட உயரிய லட்சியத்தோடு மாவட்ட ஆட்சியர் பதவியில் அமர்ந்து, தனது அதிரடி நடவடிக்கைகளால் கின்னஸ் சாதனை என்ற உயரம் வரை தொட்டவர்தான் பிரதாப் முருகன் ஐஏஎஸ். தற்போது கன்னியாகுமரி கலெக்டராக பதவி வகித்து வரும் இவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, ஒரே மாதத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட தூர்ந்து போன ஆழ்துளைக் கிணறுகளுக்கு (போர்வெல் கிணறுகள்) புத்துயிர் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒரே பருவமழையில் சுமார் 5 அடியில் இருந்து 10 அடி வரை உயர்ந்துள்ளது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரதாப்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பிரதாப். அவரது குடும்பத்திலேயே முதல் பட்டதாரி இவர்தான். அதோடு, அரசு ஊழியராக பதவியில் அமர்ந்தவரும் இவர் மட்டுமே.

சிறுவயதில் இருந்தே கலெக்டராக வேண்டும் என்பதுதான் பிரதாப்பின் கனவாக இருந்துள்ளது. தினமும் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தனது பள்ளிப் படிப்பை முடித்த பிரதாப், அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைகழகத்தில் பி.டெக் கெமிக்கல் படித்து முடித்தார். தனது கல்லூரி காலகட்டத்தில்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் அவர் தொடங்கினார். தன்னம்பிக்கையோடும், தெளிவான திட்டமிடலோடும் படித்ததால், 2017ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தினார்.

தமிழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற அவர், 2017-18 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பயிற்சி அதிகாரியாக பணியில் அமர்ந்தார். அதன் தொடர்ச்சியாக, 2018-19ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்றார். பின்னர் 3 மாதங்கள் மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை துணைச்செயலாளராக பணியாற்றிய பிரதாப்பிற்கு, 2019ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் துணை ஆட்சியர் பதவி கிடைத்தது.

துணை ஆட்சியர் பதவி மூலம் சாமானிய மக்களுடன் அதிகம் பழகும் அவருக்கு கிடைத்தது. அப்போது கிராம மக்கள் பலர் பட்டா கிடைக்காமல் அல்லாடுவதை அவர் தெரிந்து கொண்டார். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து, சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்கச் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, அரூர் அருகே இருந்த மின்சாரம் இல்லாத மலை கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கி, மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் ஆட்சியராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில்தான் ஒரே மாதத்தில் சுமார் 1100 குளங்களை வெட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் இறங்கினார். முறைப்படி அதற்கான அனுமதியைப் பெற்று, சொன்னபடியே ஒரே மாதத்தில் அதைச் செய்தும் காட்டினார். இதன் மூலம் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரதாப்பின் இந்த அதிரடி நடவடிக்கை, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. கின்னஸ் சாதனை படைத்த பிரதாப்பை மேலும் கௌரவிக்கும் வகையில் அன்றைய தமிழ்நாடு அரசு முதலமைச்சர் விருது வழங்கி, பாராட்டியது.

கோவை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

2022ம் ஆண்டு கோவை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற பிரதாப், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட மேலாளராகவும் பதவி வகித்தார். எந்தப் பதவி வகித்தாலும், அதில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு வேலை செய்யும் பிரதாப், கோவையிலும் வார்டு வார்டாக சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணமுயற்சித்தார். புதிய திட்டங்களை விரைவாக செயல்படுத்த அவர் காட்டிய ஆர்வம், மாநகராட்சி பணிகளை விரைந்து செயல்படுத்தியது, என குறுகிய காலத்திலேயே கோவை மக்களின் பிரியமான அதிகாரியானார்.

குறிப்பாக கோவை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டது, மக்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுகளைக் குவிய வைத்தது.

2023ம் ஆண்டு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பிரதாப், 2024-25ம் ஆண்டுகளில் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநராகவும் பதவி வகித்தார்.

ஒரே மாதத்தில் 1200 ஆழ்துளைக் கிணறுகளுக்கு புத்துயிர்

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திருவள்ளூர் கலெக்டராக பொறுப்பேற்றார் பிரதாப். அப்போதுதான் அங்கு நிறைய ஆழ்துளைக் கிணறுகள் செயலற்று வற்றிய நிலையில் இருப்பது அவரது கவனத்திற்கு வந்தது. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், மழை நீரின் அருமையையும், விவசாயத்திற்கு நீர் எவ்வளவு அவசியம் என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார் பிரதாப்.

மாநிலமே வடகிழக்கு பருவமழைகளில் வெள்ளக்காடாக மாறும் போதும், அந்த மழைநீர் எல்லாம் பூமிக்குள் செல்லாமல், கடலில் கலந்து வீணாவதை அவர் உணர்ந்தார். இப்படி மழைநீர் பூமிக்குள் சென்று சேமிக்கப்படாததால், திருவள்ளூர் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதும், அதனால் அப்பகுதி விவசாயிகள் படும் பாடும் அவரை உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது.

உடனடியாக நிலத்தடி நீர் பாதுகாப்பு முயற்சிகளை அவர் முன்னெடுக்கத் தொடங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயலற்று வறண்டு கிடந்த சுமார் 1200க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மீண்டும் செயல்பட வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கைவிடப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் இருந்த அந்த 1200 ஆழ்துளைக் கிணறுகளையும், மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் ஒரு புதுமையான திட்டத்தை உருவாக்கி அதற்கு அவரே தலைமையும் தாங்கினார். அவரது முயற்சியின் பலனாக அந்த 1200 ஆழ்துளைக் கிணறுகளும் மீண்டும் புத்துயிர் பெற்றன. அதனைத் தொடர்ந்து வந்த பருவமழையில், மழைநீர் வீணாகாமல், அனைத்தும் பூமிக்குள் சென்று நிலத்தடி நீர்நிலைகளை நிரப்பின.

“வறண்ட ஆழ்துளைக் கிணறு வளம் குன்றுதலின் சின்னமாக விளங்கலாம் அல்லது அது மழைநீர் மீண்டும் நிலத்தடிக்குத் திரும்புவதற்கான ஒரு நுழைவாயிலாகவும் மாறலாம்,” என இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதாப்.

பிரதாப் கூறியது போலவே, ஒரே பருவமழையில் திருவள்ளூர் மாவட்ட நிலத்தடி நீர்மட்டம் சுமார் 5 அடியில் இருந்து 10 அடி வரை உயர்ந்தது.

கின்னஸ் சாதனையும், முதலமைச்சர் விருதும்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதாப் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளில், மேற்கூறிய ஆழ்துளைக் கிணறுகளுக்கு புத்துயிர், நிலத்தடி நீர்மட்ட உயர்வு என்பதெல்லாம், ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி தான். இதுதவிரவும்,

சுமார் 2000 குளங்களை வெட்டியும், சீர்படுத்தியும் மக்களின் குடிநீர் தேவைக்கான வசதிகளைச் செய்துள்ளார். அதேபோல் பழங்குடியின மக்களுக்கு சாலை வசதியோடு வீடுகள், பெண்களுக்கான விடியல் திட்டம், அங்கன்வாடி மையங்கள், என சொல்லிக் கொண்டே போகலாம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து, இந்தாண்டு மே மாதம் 30ம் தேதியோடு விடைபெற்ற பிரதாப், தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார்.

குறுகிய காலமே ஒவ்வொரு ஊரிலும் பொறுப்பில் இருந்தபோதும், அந்த காலகட்டத்திற்குள்ளேயே தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வரும் பிரதாப், கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்ல.. அங்குள்ள மக்களுக்கு நன்மையும்கூட’ என்பதை நிரூபித்து வருகிறார்.