
யுபிஎஸ்சி தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற அருப்புக்கோட்டையை சேர்ந்த இளைஞர், அவர் படித்த அரசுப் பள்ளியில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கவுரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு என்பது இந்தியாவில் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி போன்ற பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வாகும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை கனவாகக் கொண்டுள்ளனர் லட்சகணக்கான மாணவர்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்வில், முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களை கொண்டுள்ளது. கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வை தமிழில் எழுதிய, அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கர் பாண்டியராஜ், அகில இந்திய அளவில் 807வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்ல உதவி 'நான் முதல்வன்' திட்டம்
விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாண்டியராஜ். அப்பா தையல்காரர். அருப்புக்கோட்டையை அடுத்த தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர், பள்ளிப்படிப்பு முழுவதையும் அரசுப்பள்ளியிலே படித்தார். தொலைத்துார கல்வியின் மூலம் பிபிஏ பட்டப்படிப்பை முடித்தார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு கடுமையாக படித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது UPSC பயணத்தைத் தொடங்க சென்னைக்கு குடிபெயர்ந்தார். தேர்வுகளுக்குத் தயாராகும் போது பிழைப்பிற்காக கேட்டரிங் வேலைகள் உட்பட பல பணிகளை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 7 முறை முயற்சித்து தோல்வியுற்றார். மீண்டும் மீண்டும் தோல்விகள் இருந்தபோதிலும், சங்கர் ஒருபோதும் துவண்டுவிடவில்லை. விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகைகளிலோ வீட்டிற்கு வருவதை தவிர்த்து, முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினார்.
யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொள்வதற்கான, தமிழக அரசின் இலவச பயிற்சியான `நான் முதல்வன்` திட்டத்தின் கீழ், சங்கர் பயின்று வந்துள்ளார். அரசு தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்காக தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச உண்டு, உறைவிட பயிற்சி வழங்கி வருகிறது. கடந்த வருடம் இந்த திட்டத்தினால், எண்ணற்ற மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றனர். அவர்களில் ஒருவர் தான் சங்கர் பாண்டியராஜ்.
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாய், கடந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 807வது இடத்தை பிடித்து வெற்றியடைந்தார். தமிழ் வழியில் தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் வழிகாட்டுதல் இல்லாமல், மொழித் தடைகளை எதிர்கொண்டு, பாதையை இன்னும் கடினமாக்குகிறது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அவர் அளித்த பேட்டியில்,
"என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். யுபிஎஸ்சி தேர்வை 7 முறை எழுதினேன். ஆண்டில் 8 மாதங்களுக்கு வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மீதமுள்ள 4 மாதங்களில் படிப்பேன். எனது வெற்றிக்கு நான் முதல்வன் திட்டம் உறுதுணையாக இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் ரூ7,500 ஊக்கத்தொகையாக கிடைத்ததால், வேலைக்கு செல்வதை நிறுத்தி படித்தேன். இந்த வெற்றியை நான் முதல்வன் திட்டத்திற்கு சமர்பிக்கிறேன்," என்று பகிர்ந்துள்ளார்.
படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்ற சங்கர்
இந்நிலையிலே, கடந்த செவ்வாய்கிழமை காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றதில், மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளார். பள்ளி விழாவில் பங்கேற்ற அவர், நான் முதல்வன் திட்டத்தை பற்றி பள்ளி மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
"நான் படித்த பள்ளியிலே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். அரசின் நான் முதல்வன் திட்டம் மிகவும் பயனுள்ளது. கிராமப்புறத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், நான் முதல்வன் திட்டத்தால் பயன்பெற வேண்டும். அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் அரசு வழங்குகிறது. இத்திட்டத்தினை பற்றி கிராமத்தில் மற்ற அரசு பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு பகிர்ந்து வருகிறேன். இன்றைய நவீன உலகில், சோஷியல் மீடியா தளங்களில் மாணவர்கள் மூழ்கி போகாமல், அதனை தவிர்த்து மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறினார்.
இச்சம்பவத்தை பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் அவரது எக்ஸ் தளத்தில் பெருமையுடன் பகிர்ந்திருந்தார். அப்பதிவில்,
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கல்வி வளர்ச்சித் திட்டங்களின் பயனாளர்களான மாணவர்கள்தான் அந்தந்த திட்டத்தின் தூதுவர்கள் என்பதை பல இடங்களில் வலியுறுத்தி வருகிறோம். அதை மெய்ப்பிக்கும் விதமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, UPSC தேர்வில் தேர்வாகியுள்ள சகோதரர் திரு.சு.சங்கர் பாண்டியராஜ் அவர்கள் பேசியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது."
தான் பயின்ற அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் கலந்துகொண்டு “நான் முதல்வன்” திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்து மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார். தமிழ் வழியில் பயின்று தேர்வாகியுள்ள சகோதரர் எங்களின் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றியவர் என்பதில் பெருமை அடைகிறோம். கல்வியால் தனக்கு கிடைக்கப்போகும் அதிகாரத்தை மக்கள் பணிக்கு பயன்படுத்த காத்திருக்கும் திரு.சு.சங்கர் பாண்டியராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டிருந்தார்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: சன் நியூஸ்