‘ஆழ் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்’களை ஊக்குவிக்க ரூ.600 கோடி நிதியம்’ - ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், யூனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் கூட்டு அறிவிப்பு!

12:56 PM Feb 10, 2026 | cyber simman

ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் (IITMRP), யூனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் (UIV) நிறுவனத்துடன் இணைந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஐஐடி மெட்ராஸ் 'யூனிகார்ன் பிராண்டியர் ஃபண்டு-I' (Unicorn Frontier Fund) என்ற ஆழ் தொழில்நுட்ப நிதியத்தைத் தொடங்கியுள்ளது. இதில் ரூ.400 கோடி வரை கூடுதல் நிதியைத் திரட்டும் வசதியும் உள்ளது.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற ‘தொழில்முனைவோர் உச்சி மாநாடு 2026’ (E-Summit 2026) தொடக்க விழாவில் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார். ஐஐடி மெட்ராஸ் தொழில்முனைவோர் பிரிவு (E-Cell), தனது முதன்மையான வருடாந்திர நிகழ்வின் 11-வது பதிப்பை 2026 பிப்ரவரி 6 முதல் 8ந் தேதி வரை நடத்துகிறது.

ஒரு கருத்தாக்கம் உருவாவதில் இருந்து அதனை வணிகமாக மாற்றும் வரை ஸ்டார்ட்-அப்'களுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை E-Summit 2026 நடத்தும். இம்மாநாட்டில் நடைபெறும் 'பிட்ச்ஃபெஸ்ட்' (PitchFest), 'எலிவேட்' (Elevate) நிகழ்வுகளின் போது இதில் பங்கேற்கும் நிறுவனர்கள்/குழுக்களுக்கு ஆரம்பகட்ட ஸ்டார்ட்அப் நிதி முதல் சீரிஸ்-ஏ நிதி வரை உடனடி முதலீடுகள் வழங்கப்பட உள்ளன.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் கண்காட்சியான ஸ்டார்ட்-அப் எக்ஸ்போவில் (Startup Expo - பிப்ரவரி 7–8), 80-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் தங்களின் தயாரிப்புகளை மாணவர்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறை தலைவர்களுக்கு காட்சிப்படுத்தும். கூடுதலாக, இ-பிரிவின் 'ஐடியாஸ்பிரிண்ட்', 'பூட்கேம்ப்' போன்ற முயற்சிகள் மூலம் கருத்தாக்க நிலையிலிருந்து குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு (MVP) நிலைக்கு முன்னேறிய 50 நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இ-பிரிவின் 'E-21' திட்டத்தின் மூலம் ஆதரவு அளிக்கப்பட்ட 21 பள்ளி மாணவர்களின் ஸ்டார்ட்-அப்களும் காட்சிப்படுத்தப்படும். இதில் பங்கேற்கும் குழுக்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடிப்பவர்கள் 'ஐடியாபாஸ் சீசன் 2' நிகழ்விற்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்த மாநாட்டில், ரூ.600 கோடி மதிப்பிலான ஐஐடி மெட்ராஸ் யூனிகார்ன் பிராண்டியர் ஃபண்டு-I அறிவிப்பை வெளியிட்ட, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி,

"இந்தியாவின் வளர்ச்சிப் பாதையிலும், 2047-க்குள் 'விக்சித் பாரத்' இலக்கை எட்டுவதிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும். தொழில்நுட்ப இறக்குமதியைக் குறைத்து, ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் தொழில்முனைவுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐஐடி மெட்ராஸ் இந்த நடவடிக்கைகளில் முன்னிலை வகித்து வருகிறது. எங்களது ஸ்டார்ட்-அப்களுக்கு 'பொறுமையான முதலீடு' மூலம் ஆதரவளித்து அவற்றை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதில், இந்த நிதியம் எங்களின் மற்றொரு சரியான நகர்வாகும்," என்று குறிப்பிட்டார்.

"இன்றைய சூழலில் தொழில்முனைவு என்பது தொலைநோக்குப் பார்வையை சமூகத்திற்குத் தேவையான மற்றும் பயன்படத்தக்க வணிகமாக மாற்றுவதாகும். கருத்தாக்கம் உருவாவதிலிருந்து, அதன் முன்மாதிரி தயாரிப்பு (MVP), தொழில் ஊக்குவிப்பு, சந்தையில் நுழைவது வரையிலான முழுப் பயணத்தையும் வளர்த்தெடுப்பதில் ஐஐடி மெட்ராஸின் அர்ப்பணிப்பை இ-உச்சி மாநாடு 2026 பிரதிபலிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவின் ஆழ் தொழில்நுட்ப சூழலியல் தற்போது திருப்புமுனையில் உள்ளது. கோடிக்கணக்கான டாலர்களை உட்செலுத்தாமலேயே, குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்ட, உலகளவில் போட்டியிடக்கூடிய மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னிறுத்தும் ஸ்டார்ட்-அப்'களை இங்கிருந்தே உருவாக்க முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்,” என்று ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் (IITMRP) தலைமைச் செயல் அலுவலர் நடராஜன் 'நட்' மாலுப்பிள்ளை கூறினார்.

ஐஐடி மெட்ராஸ் யூனிகார்ன் ஃபிராண்டியர் ஃபண்டு-1ன் சிறப்பம்சங்கள்:

  • முதலீட்டுத் தொகை: ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படும் சராசரி முதல் முதலீட்டுத் தொகை (Average first cheque size) ரூ. 8-10 கோடி ஆகும்.
  •  முதலீட்டுத் தொகுப்பு: இந்த நிதியத்தின் பெரும்பகுதி, TRL 3 – 4 நிலையை (தொழில்நுட்பத் தயார்நிலை) எட்டிய ஆரம்பக்கட்ட ஆழ்ந்த தொழில்நுட்ப  நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தும்.
  •  நிதி ஒதுக்கீடு: நிதியத்தின் மொத்த இருப்பில் 60% புதிய நிறுவனங்களின் முதலீட்டுத் தொகுப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படும்; மீதமுள்ள 40% ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக (Follow-on rounds) ஒதுக்கப்படும்.
  •  நிதியத்தின் காலம்: இந்த நிதியம் "பொறுமையான முதலீட்டை" (Patient capital) பிரதிபலிக்கிறது; இதன் கால அளவு 10+2 ஆண்டுகள் ஆகும்.

Edited by Induja Raghunathan