+

Bharat Innovates 2026 - பிரான்சில் ஐஐடி மெட்ராஸின் 15 டீப்டெக் ஸ்டார்ட்-அப்கள் காட்சி!

இந்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் பிரான்சின் நைஸ் நகரில் ஜூன் 14 முதல் 16 வரை நடைபெறும் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மெட்ராஸ் தனது முன்னோடியான ஆழ்தொழில்நுட்ப (Deep-Tech) கண்டுபிடிப்புகள், புதுமை நிறுவனங்கள் மற்றும் மூலோபாய ஆராய்ச

இந்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் பிரான்சின் நைஸ் நகரில் ஜூன் 14 முதல் 16 வரை நடைபெறும் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ (Bharat Innovates 2026) சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில், இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸ் தனது முன்னோடியான ஆழ்தொழில்நுட்ப (Deep-Tech) கண்டுபிடிப்புகள், புதுமை நிறுவனங்கள் மற்றும் மூலோபாய ஆராய்ச்சி திட்டங்களை காட்சிப்படுத்துகிறது.

இந்த நிகழ்வு, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உருவாகும் சிறந்த தொழில்நுட்ப முயற்சிகளை அடையாளம் கண்டு, வழிகாட்டி, உலக அரங்கில் அறிமுகப்படுத்தும் தேசிய முயற்சியாகும். முதலீட்டாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில் துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டாளர்களுடன் இந்திய புதுமையாளர்களை இணைக்கும் மேடையாக இது அமையும்.

மொத்தம் 13 கருப்பொருள் பிரிவுகளில் இரண்டை ஐஐடி மெட்ராஸ் வழிநடத்துகிறது. மேலும், ஐஐடி மெட்ராஸ் இன்குபேட்டரில் உருவான 15 புதுமை நிறுவனங்கள் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றன.

ஐஐடி மெட்ராஸ் அரங்கில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள், 5ஜி மற்றும் 6ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள், துறைமுக தானியக்க முறைமை மற்றும் குறைந்த கணினி வளங்களை பயன்படுத்தும் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு சூழல் உள்ளிட்ட ஐந்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

Startups
இந்தியா–பிரான்ஸ் புதுமை ஆண்டு 2026 மற்றும் பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்வு மூலம் பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளுடன் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும், என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 6ஜி தொழில்நுட்பங்கள், கூட்டு ஆராய்ச்சிகள், தரநிலை உருவாக்கம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் பரிமாற்ற திட்டங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் கடல்சார் தொழில்நுட்ப ஆதாரங்களை வாழ்வாதாரங்களை மேம்படுத்த சூழலியல் பாதுகாப்பு நீடித்த வகையில் பயன்படுத்தும் ‘நீலப் பொருளாதாரம்’ மற்றும் ‘அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்’ என்ற இரு முக்கிய கருப்பொருள் பிரிவுகளை ஐஐடி மெட்ராஸ் முன்னெடுக்கிறது.

5ஜி தொழில்நுட்பத்திலிருந்து 6ஜி தொழில்நுட்பத்திற்கான மாற்றம் வெறும் அதிக வேக தகவல் தொடர்பை மட்டுமல்லாமல், மிகக் குறைந்த தாமதத்துடன் இயங்கும் அமைப்புகள், நுண்ணறிவு தானியக்கம், உணர்திறன் தொழில்நுட்பங்கள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்கும் அடுத்த கட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கும், என கூறப்படுகிறது.

இந்த பிரிவில், உள்நாட்டு மென்பொருள் அடிப்படையிலான ரேடியோ தளங்கள், அதிக திறன் கொண்ட வயர்லெஸ் தகவல் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் ஓபன்-ரேன் அடிப்படையிலான 5ஜி தீர்வுகளை உருவாக்கும் REIO Systems, Astrome Technologies மற்றும் WiSig Networks போன்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

நீலப் பொருளாதாரத் துறையில், கடல்சார் தொழில்நுட்பங்கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, கடல்சார் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை கொண்ட கடல் வள மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியாவின் திறன்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

ஐஐடி மெட்ராஸ் இன்குபேட்டரில் உருவான 'Planys Technologies' நிறுவனம், தொலைவிலிருந்து இயக்கப்படும் ரோபோ கருவிகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரித்த ஆய்வு முறைகள் மூலம் கடலடித் தள கட்டமைப்புகளை பரிசோதிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இது கடல்சார் கட்டமைப்புகளின் ஆயுளை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் பணியாளர் அபாயங்களையும் குறைக்க உதவுகிறது.

அதேபோல், கடற்பாசியிலிருந்து பெறப்படும் இயற்கை பாலிமர் பொருட்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொதியிடல் பொருட்களை உருவாக்கும் Zerocircle நிறுவனமும் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் PFAS போன்ற வேதிப்பொருட்கள் இல்லாதவையாகும்.

மூலோபாய தொழில்நுட்பங்களில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முக்கிய இடம் பெறுகிறது. இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான சிறப்புத் திறன் மையமாக ஐஐடி மெட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் செயல்படும் TuTr Hyperloop நிறுவனம், நேரியல் தூண்டல் மோட்டார் இயக்கம், மின்காந்த மிதப்பு மற்றும் வெற்றிடக் குழாய் இயக்கம் உள்ளிட்ட முக்கிய ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக உருவாக்கி சோதித்துள்ளது.

மேலும், இந்திய ஆய்வக வைர மையம் (InCent LGD) உருவாக்கியுள்ள மேம்பட்ட லேசர் தொழில்நுட்பங்கள் மூலம் வைரங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத QR குறியீடுகள், நிறுவன அடையாளங்கள் மற்றும் தனிப்பயன் குறியீடுகளை பதிக்க முடிகிறது. இந்த தொழில்நுட்பம் வைரங்களின் தரத்தையோ அமைப்பையோ பாதிக்காமல் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது.

இதனுடன், வைர அடிப்படையிலான அரைக்கடத்தி தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சு கண்டறிதல் கருவிகள் மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

5ஜி மற்றும் 6ஜி துறைகளில் தொலைத்தொடர்பு வன்பொருள், மென்பொருள், தரநிலைகள் மற்றும் சோதனை வசதிகள் உள்ளிட்ட முழுமையான உள்நாட்டு திறன்களை உருவாக்கியுள்ள ஐஐடி மெட்ராஸ், அந்த சாதனைகளையும் இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்துகிறது.

தேசிய தொழில்நுட்ப மையம் (NTCPWC) உருவாக்கிய துறைமுக தானியக்கப் பிரிவும் புத்திசாலித்தனமான சரக்கு கையாளுதல், முன்கூட்டிய பராமரிப்பு, இணைய இணைப்பு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைமுக நவீனமயமாக்கல் தீர்வுகளை காட்சிப்படுத்த உள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் இந்தியாவின் ஆழ்தொழில்நுட்ப திறன், புதுமை சார்ந்த தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் உலகளாவிய அளவில் போட்டியிடும் ஆராய்ச்சி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் சர்வதேச அரங்கில் மேலும் வலுவாக வெளிப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

facebook twitter