ஹீரோ எண்டர்பிரைஸ் தலைமையில் 5.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை ஸ்டார்ட்-அப் Solinas Integrity

06:48 PM Aug 06, 2026 | cyber simman

மெட்ராஸ் ஐஐடியில் உருவாகி, ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் செயல்பட்டு வரும் ஆழ்நுட்ப மற்றும் ரோபோடிக்ஸ் நிறுவனம் 'சொலினாஸ் இண்டெக்ரிட்டி' (Solinas Integrity), ஏ 1 சுற்று நிதியாக 5.5 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஹீரோ எண்டர்பிரைஸ் பார்ட்னர் வென்சர்ஸ் தலைமையில், மேளா வென்சர்ஸ் இணை தலைமையிலான இந்த சுற்றில் லூத்ரா குழுமம் பங்கேற்றது.

ஏற்கனவே உள்ள முதலீட்டாளர் எஸ்பிஐ வென்சர்ஸ், தனது எஸ்விஎல்-எஸ்.எம்.இ நிதி மூலம் தனது நிலையை இரட்டிப்பாக்கியது. ரெயின்மேட்டர் மற்றும் 8X Ventures Fund I ஆதரவு தொடர்கிறது.

2024 மே மாதம் எஸ்பிஐ வென்சர்ஸ் SVL-SME Fund (Neev II) தலைமையிலான ஏ சுற்றை தொடர்ந்து இந்த சுற்று அமைகிறது.

திவான்ஷு குமார், மோனைக் பானர்ஜி இணைந்து உருவாக்கிய சோலினாஸ் நீருக்கடியில் உள்ள அமைப்பு மற்றும் கழிவு நீர் அமைப்புகளை சோதனை செய்து, சுத்தமாக்கி, டிஜிட்டல்மயமாக்கும் ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ அமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மனிதர்கள் கழிவுகளை கையாள்வதை தவிர்க்க வழி செய்கிறது. இதன் தொழில்நுட்பம் இந்தியாவில் 15 மாநிலங்களில் 35 நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்கிலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

“ஒவ்வொரு நகரமாக, ஒவ்வொரு ஒப்பந்தமாக இந்த தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை செயல்படுகிறது என்பதை நிருபித்து, சொலினாஸ் இந்த நிலைக்கு வந்துள்ளது. அடுத்த கட்ட வளர்ச்சியை எதிர்நோக்கும் நிலையில், தேவையான நிறுவன முதலீடு ஆதரவும் கிடைத்துள்ளது. எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று சொலினாஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ,ஓ.திவான்ஷு குமார் கூறியுள்ளார்.

இந்த நிதியை நிறுவனம் வளர்ச்சிக்காக தீவிரமாக பயன்படுத்திக்கொள்ளும். புதிய மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளில் விரிவாக்கம் செய்ய உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கவனம் செலுத்த உள்ளது.

தண்ணீர் மற்றும் கழிவுநீர் நிர்வாக வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகள் மூலம், 2028 நிதியாண்டில் ரூ.100 கோடி வருவாயை நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது.

“ஹீரோ எண்டர்பிரைசில் உள்கட்டமைப்பு சவால்களை துணிச்சலான தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணலாம், என நம்புகிறோம். இந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் சொலினாஸ் அமைகிறது,” என நிறுவன தலைவர் சுனில் காந்த் முஞ்சால் கூறியுள்ளார்.

“இந்தியாவின் தற்போதைய தண்ணீர் உள்கட்டமைப்பு நிர்வாகம் சிக்கலானதாக, ஆபத்தானதாக இருக்கிறது. சோலினாஸ் தனது ரோரொபோடிக்ஸ் சேவைகள் மூலம் இதை மாற்றி வருகிறது,” என மேளா வென்சர்ஸ் நிர்வாக பார்ட்னர் கிருஷ்ணகுமார் நடராஜன் கூறியுள்ளார்.

“வெகுசில ஆழ் நுட்ப நிறுவனங்களுக்கு மட்டும் சாத்தியமானதை சொலினாஸ் அடைந்துள்ளது. பொறியியல் புதுமையாக்கத்தை வர்த்தக நோக்கில் நீர் உள்கட்டமைப்பிற்கு கொண்டு வந்துள்ளது.” என எஸ்பிஐ வென்சர்ஸ் சி.இ.ஓ.அக்‌ஷய் பந்த் கூறியுள்ளார். கும்பத் அட்வைசர்ஸ் இதற்கான நிதி ஆலோசனை வழங்கியது.

Edited by Induja Raghunathan