'10 ஆண்டுகளில் அமெரிக்காவை விட இந்தியாவில் வேகமாக ஏஐ நுட்பம் ஏற்கப்படும்' - ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை

11:24 AM Feb 19, 2026 | cyber simman

இந்தியாவின் இளம் மற்றும் நம்பிக்கை கொண்ட மக்கள் தொகை புதிய அலை தொழில்நுட்பத்தை வேகமாக தழுவிக்கொள்ளும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவை விட இந்தியா ஏஐ நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் வேகமாக இருக்கும் என்று ஜோஹோ இணை நிறுவனர் மற்றும் அதன் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

எப்படி யூபிஐ இந்தியாவில் பெரிய அளவில் ஏற்கப்பட்டதோ அதே போல, ஏஐ நுட்பத்திலும் நிகழும் என்று 'ஏஐ இம்பேக்ட் 'மாநாட்டில் பேசியபோது கூறினார்.

இதற்கு உதாரணமாக கண்ணாடி இழை கேபிள்களை குறிப்பிட்டார். புத்தாயிரமாண்டு வாக்கில் பல அமெரிக்க வென்சர் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான டாலர்களை தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக கண்ணாடி இழைகளில் விற்பனை செய்தாலும் இப்போது அவை இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ளன ஆனால், அமெரிக்காவில் இல்லை என்றார்.

"10 ஆண்டுகளில் ஏஐ ஏற்பில் இந்தியா அமெரிக்காவை விட வேகமாக இருக்கும். இதற்கு காரணம், நம்மிடம் இளமையான நம்பிக்கை மிக்க மக்கள் தொகை உள்ளது," என்றார்.

நம்மிடம் அவநம்பிக்கை மிக்க மக்கள் தொகை இல்லை என்பது ஒரு வரம் என்றும் கூறினார்.

விருப்பமில்லாத மக்களை விட, இந்தியாவில் ஏஐ நுட்பத்தை ஏற்கும் திறந்த மனது உள்ளது என்றார்.

ஏஐ நுட்பத்தில் இந்தியா முன்னேற வேண்டும் எனில், தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்’கள் நம்பிக்கையோடு சோதனை செய்து, சவால்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்ரீதர் வேம்பு இந்தியாவில் ஆழ் நுட்ப திறன்களை உருவாக்குவதிலும், கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகளில் முதலீடு செய்வதையும் வலியுறுத்தி வருகிறார். ஜோஹோவின் பரந்த ஏஐ திட்டம், இந்திய சாஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர் உறவு, நிதி மற்றும் மனிதவள மேம்பாடு, கூட்டுறவு கருவிகளில் ஏஐ நுட்பம் மற்றும் ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைக்கும் பரந்த போக்கை பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை தன்மை வேகமாக ஏஐ பரவலாக்கத்தை ஊக்குவிக்கிறது. சராசரி வயது 30 ஆக உள்ள நிலையில், உலகின் பெரிய இணைய பயனாளி பரப்பை கொண்டுள்ள நாடு, பாரம்பரிய அமைப்புகளில் இருந்து வேகமாக முன்னேறும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

யூபிஐ கட்டமப்பின் வேகமான ஏற்பு, பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் போன் ஊடுருவல் மற்றும் குறைந்த செலவிலான டேட்டா திட்டங்கள் எப்படி குறைந்த காலத்தில் பரவலான ஏற்பிற்கு வழி வகுக்கும் என்பதற்கான உதாரணமாக அமைகிறது.

நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள், ஏஐ சார்ந்த தானியங்கிமயம், பிராந்திய மொழி மாதிரிகள், செலவு குறைந்த டெலிவரி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிலையில், மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் குறைந்த அளவிலான பாரம்பிய ஐடி சுமை, புதிய பணி பரப்பில் ஏஐ நுட்பம் வேகமாக ஒருங்கிணைக்க வழி செய்யும்.

யுவர்ஸ்டோரி குழு


Edited by Induja Raghunathan