+

'ஐடி-யில் புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, முதலீடு முழுக்கவும் ஏஐ பக்கம் திரும்புகிறது' - ஸ்ரீதர் வேம்பு

தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகம் குறைந்துள்ளதாகவும், புதிய பணியாளர்களை நியமிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவு மைய (டேட்டா சென்டர்) கட்டமைப்புச் செலவுகளுக்கே அதிகமாகத் திருப்பி விடப்படுவதாகவும் ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நி

தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகம் குறைந்துள்ளதாகவும், புதிய பணியாளர்களை நியமிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவு மைய (டேட்டா சென்டர்) கட்டமைப்புச் செலவுகளுக்கே அதிகமாகத் திருப்பி விடப்படுவதாகவும் ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அறிவியலாளர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ பதிவில் அவர் கூறியதாவது,

“ஜோஹோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவிலான பணிநீக்கங்களைத் தவிர்த்துள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியவில்லை,” என்றார்.

மேலும், “புதிய ஊழியர்களை நியமிக்கச் செலவிடப்பட்டிருக்கும் பணம் தற்போது ஏஐ தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களின் செலவுகளுக்குச் செல்கிறது. குறிப்பாக, சர்வர்கள் மற்றும் நினைவக (மெமரி) சாதனங்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் தரவு மையங்களின் செலவு பெரிதும் அதிகரித்துள்ளது. இந்தச் செலவுகளை எங்களால் முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால், பல காரணிகள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை,” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் மேலும் அதிக அளவில் மென்பொருட்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்றும் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பினார்.

“ஏஐ தொழில்நுட்பம் மென்பொருட்களை மிக வேகமாக உருவாக்க உதவுகிறது. ஆனால் ஏற்கெனவே நிறைவடைந்துள்ள உலகளாவிய மென்பொருள் சந்தைக்கு இன்னும் அதிகமான மென்பொருட்கள் உண்மையில் தேவையா?” என்று அவர் வினவினார்.

அவர் மேலும் கூறுகையில், “மற்ற பொருள் சார்ந்த தொழில்களைப் போலவே, மென்பொருள் துறையிலும் இனி தரம், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் விளைவாக இந்தத் துறையின் வளர்ச்சி இனி மிகவும் மெதுவாக இருக்கும்,” என்றார்.

ai in indian startup

நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப செலவினங்களும் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை நோக்கித் திருப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“ஏஐ நிறுவனங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் கடன் பெற்று மூலதன முதலீடுகளை (கேபெக்ஸ்) செய்து வருகின்றன. ஆனால் அந்த முதலீடுகளை நியாயப்படுத்தும் அளவுக்கு மிகப்பெரிய லாபத்தை அவை ஈட்டுமா என்பது தெளிவாக இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டார். “உற்பத்தித் துறை இந்த வேலைவாய்ப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்று கூறப்படுகிறதே, அதிலும் எனக்கு சந்தேகம் உள்ளது. காரணம், அதிகளவிலான தானியக்கமயமாக்கல் (ஆட்டோமேஷன்) காரணமாக மிகப்பெரிய உற்பத்தித் தொழிற்சாலைகள்கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகின்றன,” என்றார்.

மேலும், “மேம்பட்ட தொழில்நுட்பம் உற்பத்திச் செலவைக் குறைத்து பொருட்களை மலிவாக்குகிறது. ஆனால், அவற்றை வாங்குவதற்குத் தேவையான வருமானம் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதே பொருளாதாரத்தின் மிகப் பெரிய கட்டமைப்புச் சவாலாக மாறியுள்ளது. கோட்பாட்டில் இந்தக் கேள்வி எளிதாகத் தோன்றினாலும், நடைமுறையில் அதற்கு தீர்வு காண்பது மிகவும் கடினம்,” என்று அவர் கூறினார்.

இறுதியாக, “அனைவருக்கும் அடிப்படை வருமானம் (யுனிவர்சல் பேசிக் இன்கம் - யுபிஐ) வழங்குவதே இதற்கான தீர்வு என்று சிலர் கருதுகின்றனர். இந்தியாவில் இலவச நலத்திட்டங்கள் மூலம் அதன் சில அம்சங்களை ஏற்கெனவே காண முடிகிறது. உலகளாவிய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்ந்து சவாலாக இருக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும்,” என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
facebook twitter