இன்டோரில் காஷ்மீரி குங்குமப்பூ மகசூல்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஈட்டும் கேரள டெக் விவசாயி

12:31 PM Apr 28, 2025 | jayashree shree

வயநாட்டில் ஓர் இன்ஜீனியர் வீட்டுக்குள்ளே காஷ்மீர் க்ளைமேட்டை கொண்டு வந்தததுடன், காஷ்மீரி குங்குமப்பூ விவசாயத்தை மேற்கொண்டு அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.

ஆம், காஷ்மீரின் குளிர்ந்த காலநிலையில் வளர்க்கப்படும் குங்குமப்பூவை பயிரிட, டெக்னாலஜியின் உதவியுடன் 225 சதுர அடி பரப்பளவிலான ஒரு சாதாரண அறையை, காஷ்மீரின் தட்பவெப்ப நிலைகளைப் பிரதிபலிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலாக மாற்றி, ஏரோபோனிக்ஸ் முறையில் குங்குமப்பூ விவசாயத்தில் புரட்சியை செய்து ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கிறார் இந்த இளம் டெக் விவசாயி...

கேரளாவின் வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரி பகுதியை சேர்ந்த சேஷாத்ரி சிவக்குமார். புரபஷனலாக ஒரு சிவில் இன்ஜீனியர். சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றினார். இருப்பினும், விவசாயத்தின் மீதுள்ள ஆழ்ந்த ஆர்வமும், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பமும் அவரை வேலையை விட்டு விலகச் செய்தது.

இன்டோர் கல்டீவெஷன் குறித்த டெக்னிக்குகளை ஆழமாக ஆராய்ந்த பிறகு, ஏரோபோனிக்ஸ் முறையில் இன்டோர் விவசாயம் செய்து வருபவர்களிடம் இருந்து பிராக்டீக்லாக கண்டு கற்றுக்கொள்வதற்காக புனேவுக்கு சென்றுள்ளார்.

"இன்ஜீனியரிங் படிப்பில் கிடைத்த அறிவை நிலையான விவசாய நடைமுறைகளுடன் இணைக்க விரும்பினேன். குங்குமப்பூ சாகுபடி சவாலானதாக தெரியும் அதேவேளை, பலனளிக்கும் ஒன்றாகத் தோன்றியது. புனேவில் ஏரோபோனிக்ஸ் விவசாய முறையை பின்பற்றுபவர்களை நேரில் சந்தித்தேன். அங்கு சென்று, ஏரோபோனிக்ஸ் விவசாயம் மற்றும் குங்குமப்பூ விளைச்சல் குறித்த ஆழமான புரிதலைப் பெற்ற பிறகு, என் வீட்டின் மொட்டை மாடியில் ஏரோபோனிக்ஸ் பண்ணையை அமைக்க முடிவெடுத்தேன்" என்று சேஷாத்ரி டெக்கான் ஹெரால்டிடம் கூறினார்.


குங்குமப்பூ விவசாயத்தில் புரட்சி!

குங்குமப்பூ விவசாயம் குறித்து முழுமையான ஆராய்ச்சி மற்றும் காஷ்மீரில் பல பண்ணைகளுக்கு சென்று திரும்பிய பிறகு, விவசாயத்தில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், ரூ.10 லட்சம் ஆரம்ப முதலீட்டில் அவரது ஏரோபோனிக்ஸ் அமைப்பை அமைத்தார்.

225 சதுர அடி இடத்தில் குளிர்விப்பான்கள், ஈரப்பதமூட்டிகள், தானியாங்கி நீர்ப்பாசனம் மற்றும் பருவகால மாற்றங்களை பிரதிபலிக்கும் சிறப்பு வளர்ப்பு விளக்குகளைப் பயன்படுத்தி குங்குமப்பூ வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை கவனமாக உருவாக்கினார். அந்த அமைப்பு முழுமையாக தானியங்கி மற்றும் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது

"குங்குமப்பூவின் நாற்றுகளை வாங்குவது எளிதல்ல. குங்குமப்பூ சாகுபடிக்கு பெயர் பெற்ற காஷ்மீரின் பாம்பூரில் இருந்து 1000 கிலோ உயர்தர குங்குமப்பூ நாற்றுக்களை ரூ.4 லட்சத்துக்கு வாங்கினேன். ஏனெனில், குங்குமப்பூ வளர்ப்பில் குங்குமப்பூவின் தரம் மிக முக்கியமானது. நான் அமைத்த பண்ணை உகந்த வெப்பநிலையை பராமரிக்கிறது. இது குங்குமப்பூ குரோக்கஸ் செழித்து வளர மிகவும் முக்கியமானது. குங்குமப்பூ வளர்வதற்கு சிறந்த சூழ்நிலையை கண்டறிய பல மாதங்கள் சோதனை செய்ய வேண்டியிருந்தது. குங்குமப்பூ ஒரு மென்மையான பயிர் என்பதால், சிறிய ஏற்ற இறக்கங்கள் கூட விளைச்சலை பாதிக்கலாம்" என்று அவர் கூறினார்.

இன்டோர் குங்குமப்பூ விவசாயத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று அதன் குறிப்பிடத்தக்க இடத்திறன் ஆகும். பாரம்பரிய திறந்தவெளி அமைப்புகள் பொதுவாக ஒரு சதுர மீட்டருக்கு 20–30 அடர்த்தி கொண்ட குங்குமப்பூ தண்டுகள் அல்லது குமிழ்களை நடவு செய்கின்றன. இதற்கு நேர்மாறாக, ஏரோபோனிக் அமைப்புகள் ஒரு சதுர மீட்டருக்கு 200–300 தண்டுகளை நடவு செய்வதற்கான இடத்தை அளிக்கின்றன. இதன் மூலம் சாத்தியமான விளைச்சலை கணிசமாக அதிகரிக்கிறது.

இன்டோர் ஏரோபோனிக் அமைப்பின் மூலம் ஒரு சதுர மீட்டருக்கு 4–5 கிராம் உலர்ந்த குங்குமப்பூவை உற்பத்தி செய்ய முடியும். மாறாக, வழக்கமான வயல்களில் இருந்து வெறும் 0.5–2 கிராம் மட்டுமே ஒரு சதுரமீட்டருக்கு உற்பத்தி செய்ய முடியும். மேலும், செங்குத்து விவசாய நுட்பங்களின் ஒருங்கிணைப்பு பல அடுக்கு தண்டுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது. இட பயன்பாட்டை 3–5 மடங்கு பெருக்குகிறது.

"குங்குமப்பூ விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏரோபோனிக்ஸ் ஒரு நிலையான தீர்வை வழங்குகிறது. மண்ணின் தேவையை நீக்குவதன் மூலம் அதிக அடர்த்தி கொண்ட நடவுகளை எளிதாக்கவும், மகசூலை கணிசமாக அதிகரிக்கவும் முடியும். துல்லியமான வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவை பராமரிக்க ஒரு சிறப்பு குளிர் அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அறையில் வைக்கப்பட்டுள்ள வளரும் விளக்குகள் பூப்பதைத் தூண்டுகின்றன. குங்குமப்பூ வளர்ச்சிக்கு ஏற்ற நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் பல்வேறு புவியியல் பகுதிகளிலிலும் குங்குமப்பூ சாகுபடியை சாத்தியமாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது" என்று ‘தி இந்து’விடம் பகிர்ந்தார்.

இந்தியாவில் குங்குமப்பூவின் தேவை சீராக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வருடாந்திர குங்குமப்பூ தேவை 100–150 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி சுமார் 5–7 டன்களாக மட்டுமே உள்ளது. குங்குமப்பூ உற்பத்தியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதன்மையாக திகழ்கிறது. உள்நாட்டு உற்பத்தி வெகு குறைவாக இருப்பதன் விளைவாக, நாட்டின் மொத்த குங்குமப்பூ தேவையில் தோராயமாக 70–80% வெளிநாடுகளிலிருந்து பெரும்பாலும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

நாட்டில் நிலவும் குங்குமப்பூவின் தேவையின் காரணமாக சேஷாத்ரி அவரது விளைபொருட்களை உள்நாட்டில் பிராண்ட்டிங் செய்து சில்லறை சந்தையில் விற்கத் திட்டமிட்டுள்ளார்.

"குங்குமப் பூ விவசாயித்தினைத் தொடங்கி ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. ஆனால், இதுவரை ரிசெல்ட்கள் பாசிட்டீவ் ஆக உள்ளது. முதல் அறுவடையிலே உயர்தர குங்குமப்பூவை மகசூல் செய்தோம். தொடங்கிய ஓர் ஆண்டுக்குள் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. சந்தையில் உயர்தர குங்குமப்பூவிற்கு அதிக தேவை உள்ளது. குங்குமப்பூ ஒரு கிலோவிற்கு ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 வரை சந்தையில் விற்பனை செய்யபடுவதால், உலகளவில் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்றாக உள்ளது" என்று கூறி முடித்தார் இளம் டெக் விவசாயி.

Edited by Induja Raghunathan