
சவால்களை எதிர்கொண்டு, அதனை வீழ்த்தி அடையும் வெற்றிக்கனி எப்போதுமே தனிச்சுவையைக் கொண்டிருக்கும். வென்றவர்களுக்கு அது கடந்து வந்த பாதை என்றால், அவர்களது கதையைப் படிப்பவர்களுக்கு, இன்னும் முன்னோக்கிச் செல்ல அந்தப் போராட்டங்கள் உந்து சக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சஞ்சய் தஹாரியாவின் வாழ்க்கையும் அப்படியான போராட்டங்கள் நிறைந்த வெற்றிக் கதைதான். 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 946 இடம் பிடித்தவரான சஞ்சய் தஹாரியா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையை இழந்தவர். 6 ஆண்டுகள் புற்றுநோயின் பிடியில் சிக்கித் தவித்த அவர், சிகிச்சை மூலம் அதில் இருந்து மீண்டு, தனது வங்கிப் பணியை ராஜினாமா செய்து விட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி, வெற்றி கண்டுள்ளார்.
அவரது இந்த வாழ்க்கைக் கதை, வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையில் எவ்வளவு காலம் போராடினாலும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை நமக்குத் தருவதாக உள்ளது.

புற்றுநோயால் மாறிய வாழ்க்கை
சத்தீஸ்கர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பெல்டுக்ரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சஞ்சய். ராய்ப்பூரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், மானுடவியலில் பட்டப்படிப்பை முடித்தார். சிறுவயதில் இருந்தே சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத வேண்டும் என்பது கனவாக இருந்தபோதும், படித்து முடித்தவுடன் மேற்கு வங்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க்கில் வேலை கிடைத்ததால், 2009ம் ஆண்டு அந்த வங்கிப் பணியில் சேர்ந்தார் சஞ்சய்.
வேலை பார்த்துக் கொண்டே தனது தேர்வுகளுக்கு அவர் தயாரானார். ஆனால், பணிச் சுமையின் காரணமாக அது அவ்வளவு எளிதாக அவருக்கு அமையவில்லை. எனவே, 2011ம் ஆண்டு தனது வங்கிப் பணியை அவர் ராஜினாமா செய்தார்.
அரசு வேலை, கை நிறைய சம்பளம் என எல்லாவற்றையும் விட்டு விட்டு, தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த அவரது வாழ்க்கையில், 2012ம் ஆண்டு புற்றுநோய் குறுக்கிட்டது. அவரது 23 வயதில் உமிழ்நீர்ச் சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு என்பது மனதளவில் அவரை மிகவும் பாதித்தது. ஆனாலும், நம்பிக்கையுடன் மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைகளை மேற்கொண்டார்.

மீண்டும் துளிர்விட்ட ஐஏஎஸ் கனவு
கடினமான அறுவைச் சிகிச்சைகள், கதிர்வீச்சு சிகிச்சைகள் என கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சஞ்சய் மருத்துவமனைகளிலேயே தன் வாழ்க்கையைக் கழித்தார். தொடர் சிகிச்சைகள் காரணமாக அவரது முகத்தில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டது. கூடவே பார்வைக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டார்.
வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்த சஞ்சய்க்கு, மருத்துவமனையில் சந்தித்த நபர்கள் ஆறுதலாக இருந்தனர். அந்த காலகட்டத்தில்தான் அவருக்குள் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. தன்னலமின்றி தனக்கு உதவியர்களை மனதில் நிறுத்தி, தானும் அதுபோல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என ஆசைப்பட்ட சஞ்சய்க்கு, ஐஏஎஸ் பணி அதற்கு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. எனவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே மீண்டும் அவர் யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார்.
தொடர் சிகிச்சையின் பலனாக குணமடைந்த சஞ்சய், ஐடிபிஐ வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை பார்த்துக் கொண்டே மீண்டும் தனது யுபிஎஸ்சி தேர்வுக்கான படிப்பை அவர் தொடர்ந்தார். 2013ம் ஆண்டு முதல் 2017 வரை ஐடிபிஐ-ல் வேலை பார்த்த அவர், பின்னர், ஒராண்டு மகாசமுத்திரத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்த்தார். ஒருபுறம் தனது உடல்நலத்தையும் பார்த்துக் கொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காகவும் படித்து வந்தார்.
முதல் இரண்டு முயற்சிகளில் அவருக்கு தோல்வியே கிடைத்த போதும், அவர் மனம் தளரவில்லை. நோயுடன் போராடி வெற்றிக் கண்டதுபோல், தேர்வோடும் போராடி வெற்றி பெறுவது என வைராக்கியத்துடம் அவர் படித்தார்.

3வது முயற்சியில் வெற்றி
தொடர் முயற்சிகளின் பலனாக 2025ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் 38 வயதான சஞ்சய் வெற்றி கண்டார். இம்முறை அவருக்கு 946வது இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் தனது பலவீனங்களை கவனமாக ஆராய்ந்து, அதில் இருந்து மீண்டு தனது வெற்றியை அவர் உறுதிப் படுத்தியுள்ளார்.
மருத்துவமனை படுக்கையில் நோயுடன் போராடிய போதும், அவர் தனது இலக்கை மறக்கவில்லை. பிரச்சினைகள் வெவ்வேறு வடிவம் கொண்டு துரத்திய போதும், நம்பிக்கையையே மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, விடாமுயற்சியை அதற்கு உரமாகப் போட்டு, இன்று வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார் சஞ்சய்.
நிச்சயம் அவரது வாழ்க்கைப் பயணம் யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகுபவர்களுக்கு மட்டுமின்றி, நோயுடன், பொருளாதாரத்துடன், சமூக ஏற்றத்தாழ்வுடன் என வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருப்பவர்களுக்கும் தன்னம்பிக்கை தரும் என்பதில் சந்தேகமேயில்லை.