'நீது முதல் அஜைதா வரை' - பாரத வளர்ச்சிக்கு துணைபுரியும் பெண் தொழில்முனைவோர்கள்!

06:00 PM May 06, 2026 | YS TEAM TAMIL

இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோர், வெற்றியை வெறும் லாபக் கணக்காகவோ அல்லது நிறுவனத்தின் வளர்ச்சியாகவோ மட்டும் பார்க்காமல், சமூகப் பங்களிப்பு மற்றும் சமூகத் தாக்கத்தை முன்னிறுத்தி அதன் இலக்கணத்தையே மாற்றி அமைத்து வருகின்றனர்.

குறிப்பாக கடன் வசதி, சந்தை இணைப்பு, சமூகப் பங்களிப்பை உறுதி செய்தல் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் என பல அடிப்படைச் சிக்கல்களுக்கு இவர்களது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தீர்வுகளைக் காண்கின்றன.

அனிமால்: நீது யாதவ் மற்றும் கீர்த்தி ஜாங்க்ரா

இந்தியாவின் ஊரகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய உத்வேகமாக இருப்பது பால் பண்ணைச் சூழல் அமைப்பு. ஆனால், இது நீண்ட காலமாகச் சிதறியும் முறைப்படுத்தப்படாமலும் இருந்து வந்தது. இடைத்தரகர்களையும் முறைசாரா வலைப்பின்னல்களையும் மட்டுமே நம்பியிருந்த இந்தத் துறையை முறைப்படுத்தும் நோக்கில் நீது யாதவ் மற்றும் கீர்த்தி ஜாங்க்ரா இணைந்து ‘அனிமால்’ (Animall) நிறுவனத்தைத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் ஒரு ஹேக்கத்தான் திட்டமாக உருவான இது, பின்னர் 2019-ஆம் ஆண்டில் பெங்களூருவில் ஒரு சிறிய அறையிலிருந்து வார இறுதித் திட்டமாகத் தொடரப்பட்டது. யாதவ் மற்றும் ஜாங்க்ராவின் சீரிய தலைமையின் கீழ், முதன்முறையாகத் திறன் பேசிகளைப் பயன்படுத்துபவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட எளிய வட்டார மொழி இன்டர்ஃபேஸ் மூலம், விவசாயிகள் கால்நடைகளை இணையவழியில் வாங்கவும் விற்கவும் இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது.

இன்று பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளைச் சென்றடைந்துள்ள ‘அனிமால்’, கால்நடை வணிகத்தைத் தாண்டி காப்பீடு, நிதியுதவி மற்றும் கால்நடைகளின் தரம் பிரித்தல் போன்ற கூடுதல் சேவைகளையும் வழங்குகிறது. இது விவசாயிகள் சரியான முடிவுகளை எடுக்க உதவுவதோடு, ஒட்டுமொத்தச் சூழல் அமைப்பிலும் நம்பிக்கையை வளர்த்துள்ளது.

ஃபார்ம் திதி: மஞ்சரி சர்மா

பிஹாரில் ஒரு திட்டத்திற்காகப் பணியாற்றியபோது மஞ்சரி சர்மா ஒரு சுவாரசியமான கேள்வியை எதிர்கொண்டார். அங்குள்ள சுய உதவிக்குழுப் பெண்கள் அவரிடம் கேட்ட எளிய கேள்வி இது:

“திதி, எங்களால் வேறு என்ன செய்ய முடியும்?”

அந்தப் பெண்கள் ஏற்கெனவே விவசாயத்திலும் வீட்டு வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த நுண்ணறிவுதான் 2021-இல் மஞ்சரியை 'ஃபார்ம் திதி' (Farm Didi) நிறுவனத்தைத் தொடங்கத் தூண்டியது.

பெண்கள் பின்தங்கியிருக்கும் சந்தை இணைப்பு மற்றும் வணிகத் திறன் ஆகியவற்றில் மஞ்சரி கவனம் செலுத்துகிறார். பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பெண்களுடன் இணைந்து, அந்தத் தயாரிப்புகளுக்கான பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் விநியோகம் ஆகியவற்றை இவரே கையாள்கிறார்.

வீட்டுத் திறன்களை வெற்றிகரமான வணிகமாக மாற்றிய ‘ஃபார்ம் திதி’, இன்று 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,800-க்கும் அதிகமான பெண்களுடன் இணைந்து ஒரு பரவலாக்கப்பட்ட உற்பத்தி வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது.

வருமானத்தைத் தாண்டி, பெண்கள் தரம் மற்றும் வணிகச் செயல்முறைகளைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியும் தன்னம்பிக்கையும் அளிக்கப்படுகிறது. 10 லட்சம் கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே மஞ்சரியின் இறுதி இலக்காகும்.

ஃபிரன்டியர் மார்க்கெட்ஸ்: அஜைதா ஷா

நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த அஜைதா ஷா, டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் பள்ளியில் சர்வதேச உறவுகள் குறித்துப் பயின்றவர். தனது கவனத்தை ஊரக இந்தியாவின் பக்கம் திருப்பிய அவர், 2011-இல் 'ஃபிரன்டியர் மார்க்கெட்ஸ்' (Frontier Markets) நிறுவனத்தைத் தொடங்கினார். இது கிராமப்புறங்களில் உள்ள இடைவெளியை தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்தத் தளம் ‘சரல் ஜீவன் சஹேலிகள்’ என்று அழைக்கப்படும் கிராமப்புறப் பெண் தொழில்முனைவோர் மூலம் தயாரிப்புகளையும் சேவைகளையும் நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சேர்க்கிறது. 35,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ‘மேரி சஹேலி’ (Meri Saheli) எனும் செயலியைத் தங்களது டிஜிட்டல் விற்பனை நிலையங்களாகப் பயன்படுத்தி நிதி, தூய்மையான எரிசக்தி, விவசாயம் மற்றும் சுகாதாரம் சார்ந்த சேவைகளை வழங்குகிறார்கள்.

5,000 கிராமங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி, 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை இந்தப் பெண்கள் ஈட்டியுள்ளனர். 2030-க்குள் 10 லட்சம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் உலகளாவிய கூட்டாளர்களின் ஆதரவுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எஸ்4எஸ் டெக்னாலஜிஸ்: நிதி பந்த்

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும்போது, விற்கப்படாத மிச்சப் பொருட்கள் அன்றைய தினத்தின் முடிவில் வீணாவதை நிதி பந்த் கவனித்தார். இந்தக் கழிவுச் சுழற்சி சிறு விவசாயிகளின் வருமானத்தைக் கடுமையாகப் பாதித்தது. உண்மையான சிக்கல் உற்பத்தியில் இல்லை, அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பில்தான் உள்ளது என்பதை உணர்ந்த அவர் எஸ்4எஸ் டெக்னாலஜிஸ் (S4S Technologies) நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்நிறுவனம் ‘பண்ணைகளிலேயே தொழிற்சாலைகள்’ என்ற மாதிரியை வழங்குகிறது. சூரிய சக்தியால் இயங்கும் நீர்நீக்கக் கருவிகள் மூலம் விவசாயிகள் உபரி விளைபொருட்களை நீண்ட நாள் சேமிக்கக்கூடிய பொருட்களாக மாற்றுகின்றனர். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உள்ளூர் செயலாக்கத்துடன் இணைக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் நிலையற்ற சந்தை விலைகளை நம்பியிருக்காமல், மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் பங்கேற்க முடிகிறது.

நூற்றுக்கணக்கான பெண் தொழில்முனைவோருக்குப் பயிற்சியளித்துள்ள இந்நிறுவனம், வீணாகப் போகும் விளைபொருட்களிலிருந்து கூடுதல் வருமானம் ஈட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழிவகை செய்துள்ளது.


Edited by Induja Raghunathan