Milky Mist IPO - முதல் நாளில் 79% சந்தா; இந்திய பால் பொருட்கள் நிறுவனங்களில் மிகப்பெரிய ஐபிஒ இது!

10:36 AM Aug 12, 2026 | muthu kumar

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட்'டின் ஆகஸ்ட் 11ம் தேதி ஆரம்பப் பங்கு வெளியீடான ஐபிஓ-க்கு வந்தது. இது ஆகஸ்ட் 13ம் தேதி நிறைவைடையும், ஏலத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 79 சதவீதம் சந்தாவை பெற்றுள்ளது.

தேசிய பங்குச் சந்தையான என்எஸ்இ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தம் 6,47,53,190 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், ஐபிஓவில் 8,17,98,244 பங்குகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளில் 96 சதவீதம் சந்தா பெறப்பட்டுள்ளது. நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 92 சதவீதமும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான (QIB) பிரிவில் 39 சதவீதமும் சந்தா பெறப்பட்டுள்ளது.

ஐபிஓ தொடங்குவதற்கு முன்னதாக, மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனம் திங்கள்கிழமை ஆங்க்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.465.30 கோடியை திரட்டியது.

மொத்தம் ரூ.1,553 கோடி மதிப்பிலான மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஐபிஓவில் ஒரு பங்கின் விலை ரூ.133 முதல் ரூ.140 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்கு வெளியீட்டில் ரூ.1,428 கோடி வரை புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. இதனுடன், ரூ.125 கோடி வரையிலான பங்குகள் தற்போதைய பங்குதாரர்களால் விற்பனை செய்யப்படும் ஆஃபர் ஃபார் சேல் (OFS) முறையிலும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஐபிஓ, இந்தியாவில் உள்ள பால் பொருட்கள் நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாக அமைய உள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள பால் நிறுவனங்களில் பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட், ஹாட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் மற்றும் டோட்லா டெய்ரி லிமிடெட் ஆகியவை முக்கியமான நிறுவனங்களாக உள்ளன.

ஒரு பங்கின் அதிகபட்ச விலை ரூ.140 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஓ நிறைவடைந்த பிறகு மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.10,778 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் ஐபிஓ, அந்த நிறுவனம் கடந்த மே மாதம் மேற்கொண்ட ஐபிஓவுக்கு முந்தைய நிதி திரட்டலைத் தொடர்ந்து வருகிறது. அந்த நிதி திரட்டல் மூலம் நிறுவனம் சுமார் ரூ.482 கோடியை பெற்றிருந்தது. டெமாசெக் ஹோல்டிங்ஸின் மறைமுக முழு உரிமையுடைய துணை நிறுவனமான ஜாங்சாங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் இந்த முதலீட்டை மேற்கொண்டது.

இந்த ரூ.482 கோடி பரிவர்த்தனையில் ரூ.357 கோடி புதிய பங்குகளுக்கான மூலதன முதலீடாகவும், ரூ.125 கோடி இரண்டாம் நிலைப் பங்கு விற்பனையாகவும் இருந்தது.

தற்போதைய ஐபிஓவில் புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் அல்லது கடன்களை முன்கூட்டியே அடைப்பதற்கும் மில்கி மிஸ்ட் பயன்படுத்த உள்ளது. இதுதவிர, தமிழ்நாட்டின் பெருந்துறையில் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தி நவீனப்படுத்தவும், குளிர்சாதன விநியோகச் சங்கிலி கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

மோர் புரதச் செறிவு (Whey Protein Concentrate), யோகர்ட் மற்றும் கிரீம் சீஸ் உற்பத்திக்கான புதிய ஆலைகளை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஐஸ்கிரீம் ஃப்ரீசர்கள் மற்றும் சாக்லேட் குளிரூட்டிகளை நிறுவுவதற்கும் ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றுடன், திரட்டப்படும் நிதியில் ஒரு பகுதி நிறுவனத்தின் பொதுவான நிர்வாக மற்றும் நிறுவனச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் ஈரோட்டில் தொடங்கப்பட்ட மில்கி மிஸ்ட் நிறுவனம், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. பனீர், சீஸ், தயிர், யோகர்ட், வெண்ணெய், நெய் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்களை நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேநேரத்தில், திரவப் பால் விற்பனைப் பிரிவில் மில்கி மிஸ்ட் நிறுவனம் செயல்படவில்லை.

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

இந்த ஐபிஓவுக்கான புத்தகப் பதிவு முன்னணி மேலாளர்களாக ஜேஎம் ஃபைனான்ஷியல், ஆக்சிஸ் கேபிடல் மற்றும் ஐஐஎஃப்எல் கேபிடல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. கேஃபின் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த ஐபிஓவின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளது.