இந்தியாவின் ‘மிஸைல் உமன்’ (ஏவுகணைப் பெண்) என்றும், ‘அக்னிபுத்திரி’ என்றும் அழைக்கப்படுபவர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ். நாட்டில் அக்னி-IV மற்றும் அக்னி-V போன்ற பிரம்மாண்டமான பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை வழிநடத்தி, ஒரு முக்கிய ஏவுகணை வளர்ச்சித் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவர்.
1988-ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்த இவர், 2009-ல் அக்னி-IV ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று, பல புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய அமைப்பை வெற்றிகரமாகச் சோதித்தார். தொடர்ந்து, நீண்டதூரம் செல்லக்கூடிய அக்னி-V ஏவுகணையின் திட்ட இயக்குநராகவும் , DRDO-வின் வான்வெளி அமைப்புகளின் டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றி, இந்தியாவின் தற்காப்புத் தொழில்நுட்பத்தில் தன்னாட்சியையும் சுயசார்பையும் வலுப்படுத்தியவர்.
இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தொழில்நுட்பப் பொறியியல் வளர்ந்து கொண்டிருந்த தொடக்கக் காலத்தில், தனது சிறுவயது முதல் அறிவியலும் கணிதமுமே தன்னை மிகவும் கவர்ந்த பாடங்களாக இருந்ததாக டாக்டர் டெஸ்ஸி தாமஸ் குறிப்பிடுகிறார்.
“அந்த பின்னணியில்தான் என்னால் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் குறித்த எம்.டெக் படிப்பில் சேர்ந்தபோதே ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் எனது பயணம் தொடங்கியது,” என்று அவர் விவரிக்கிறார்.
அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்தது, அறிவியலின் பல்வேறு துறைகளுக்குப் பின்னால் உள்ள பொறியியல் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது.
குறிப்பாக, தனது இறுதி ஆண்டில் ‘ராடார் சிஸ்டம்ஸ்’ பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்தது, பாதுகாப்புத் துறையில் ராடார் பயன்பாடுகள் பற்றிய ஆழமான அறிவை வழங்கியது.
ஆரம்பமும் மனநிறைவும்
“பள்ளிக்காலம் முதலே ஆசிரியர்கள் ஊட்டும் ஆர்வமும் அவர்கள் கற்பிக்கும் பாடங்களுமே நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன,” என்று நினைவுகூர்கிறார் டெஸ்ஸி தாமஸ்.
டெஸ்ஸி தாமஸ் 1988-இல் DRDO-வில் சேர்ந்தபோது, அது இந்திய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். நீண்டதூர ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு மறுக்கப்பட்ட ‘தொழில்நுட்பத் தடை’ நிலவிய அச்சமயத்தில், DRDO ஒரே நேரத்தில் ஐந்து ஏவுகணை திட்டங்களை உள்ளடக்கிய ‘ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை’ (IGMDP) தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கியது.
வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் கிடைக்காததால், அமைப்புகள் மற்றும் வழிமுறைகளை தாங்களே படித்து, வடிவமைத்து, உருவாக்கி சோதிக்கும் நிலைகளை படிப்படியாகக் கடந்தனர்.
“இது அமைப்புகளைப் புரிந்து கொள்வதில் தொடங்கி, வடிவமைப்பாளராகி, உற்பத்தியைப் புரிந்து கொண்டு, தொழில்நுட்ப அறிவைப் பெற்று, இறுதியாக நாட்டின் சொந்தத் திறனைக் கட்டியெழுப்பும் ஒரு கற்றல் பயணமாக இருந்தது."
"இஸ்ரோ போன்ற நாட்டின் பிற அறிவியல் அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றி, இந்த அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்று சொந்தத் திறனை உருவாக்கியதில் கிடைத்த மனநிறைவு என்றும் என்னுள்ளேயே நிலைத்திருக்கிறது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
தனது ஆரம்பக் காலத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்த அவர், கலாம் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று குறிப்பிடுகிறார்.
“நாட்டின் பாதுகாப்பு மற்றும் வியூகத் தேவைகளுக்கு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தையும் சுயசார்பையும் உருவாக்க வேண்டும் என்ற கலாமின் இலக்கே DRDO-வின் விண்வெளி மற்றும் ஏவுகணை மேம்பாட்டுப் பணிகள் அனைத்திற்கும் உந்துசக்தியாக இருந்தது."
ஓர் இளம் விஞ்ஞானியாக DRDO ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த கலாமின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஊக்கமளிப்பதாக இருந்தது,” என்கிறார்.
கலாமுக்கு புகழாரம்...
தொழில்நுட்பமே இல்லாத காலத்தில் நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான வழிகாட்டுதல் அமைப்பை வடிவமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான வழிமுறைகளை விஞ்ஞானிகளே உருவாக்க வேண்டியிருந்தது. இலக்கை அடையும் வரை கலாம் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளித்துக்கொண்டே இருந்தார்.
“விஞ்ஞானி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கலாம் அனைவருக்கும் சம வாய்ப்பளித்தார். உடனடி எதிர்காலத்திற்கு மட்டுமல்லாமல், அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்று திட்டமிடும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார். தலைமைத்துவம் என்பது உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் உயர்த்துவது என்பதில் நம்பிக்கை கொண்டவர் அவர்,” என்கிறார் டெஸ்ஸி தாமஸ்.
அது ஒரு கைனடிக் காலம்...
1988-ஆம் ஆண்டில் அவர் பணியில் சேர்ந்த தொடக்கக் கட்டத்தில், சில மாதங்களிலேயே ஒரு ‘கைனடிக் ஹோண்டா’ இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டிய முடிவை எடுத்தார். ஏனெனில் அவர்களின் பணிக்கு நிலையான நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எத்தனை மணிநேரம் ஆனாலும் குறிப்பிட்ட பணிகளை முடிப்பதே முதன்மை தேவையாக இருந்தது. வாகனத்தை எப்படி ஓட்டுவது என்று தெரியாமலேயே அதை வாங்கி, பின்னரே ஓட்டக் கற்றுக்கொண்டார்.
“ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்றால், அதைச் செய்துதான் தீர வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
அக்காலத்தில் இத்தகைய முக்கியப் பொறுப்புகளில் மிகக் குறைந்த பெண்களே பணியாற்றினர். அதனால் தேவையான ஆதரவு அமைப்புகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அவரது கணவர் கடற்படையில் பணியாற்றியதால், டெஸ்ஸி தாமஸின் பொறுப்புகளின் தன்மையையும் பணிச்சுமையையும் நன்கு புரிந்துகொண்டார்.
அதிகாலையிலேயே எழுந்து முழு குடும்பத்திற்கும் மகனுக்கும் சமையல் செய்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்வதும், இரவு எப்போது வீடு திரும்புவோம் என்று தெரியாத நிலையில் வாழ்வதுமாக வாழ்க்கை அமைந்தது. கவனமான திட்டமிடல் மூலமே இதைச் சமாளிக்க முடிந்தது என்கிறார்.
பெருமித தகவல்கள்...
பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ‘தற்சார்பு இந்தியா’ குறித்துப் பேசிய அவர், மூலப்பொருட்கள், வடிவமைப்பு, ஆல்காரிதம் உருவாக்கம், ஏவியானிக்ஸ் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகள் வரை தேவையான அனைத்துத் தொழில்நுட்பங்களையும் இந்தியா நிறுவியுள்ளது என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.
“விண்வெளி மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத் துறையில் இந்த அனைத்துத் திறன்களையும் இந்தியா சாதித்துள்ளது. தொழில்நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள அறிவுசார் தகவல்களில் நாம் முழு சுயசார்பை அடைந்துள்ளோம். எனவே, இந்தப் பிரிவுகளில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது என்றும், நாம் சுயசார்புடன் இருக்கிறோம் என்றும் அழுத்தமாகக் கூற முடியும்,” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
வரலாறு படைத்த தருணங்கள் மற்றும் தடைகள் குறித்துப் பேசிய அவர், DRDO ஒரு அமைப்பாக அனைவருக்கும் முழு வாய்ப்புகளையும் வழங்கியதாகத் தெரிவித்தார்.
“ஆரம்பத்திலிருந்தே நான் சொல்வது என்னவென்றால், அறிவியலுக்குப் பாலின வேறுபாடு கிடையாது. உங்களின் திறன், அறிவுத்திறன், புதிய அறிவைப் பெறுதல் மற்றும் சரியான முடிவுகளை எடுப்பது மட்டுமே முக்கியம். அதுவே நமது பயணம் முழுவதும் முக்கியப் பங்காற்றியது. அமைப்பில் இருந்த மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஜூனியர் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அந்த வழிகாட்டலே DRDO-வின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது,” என்று சுட்டிக்காட்டுகிறார்.
தொழில்நுட்பப் பிரிவில் நுழைய விரும்பும் இளம் பெண்களுக்கும் பொறியாளர்களுக்கும் அவர் வழங்கும் ஆலோசனை என்னவென்றால், அறிவியல் அறிவைக் கற்றுக்கொள்வதிலும், அந்தக் கற்றலைத் தொடர்ந்து தக்கவைத்துச் செயல்படுத்துவதிலும் தெளிவான கவனக் குவிப்பு இருக்க வேண்டும் என்பதுதான்.
“அமைப்பின் தேவைகளும் வாய்ப்புகளும் தேடி வரும். ஆனால், தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்களின் சுய முடிவும், வேலையின் மீதான கவனமுமே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்கிறார்.
அந்த 3 வெற்றி மந்திரங்கள்
அறிவியல் தனக்குக் கற்றுக்கொடுத்த தலைமைத்துவ பாடம் பற்றிக் குறிப்பிட்ட டெஸ்ஸி தாமஸ்,
“ஒவ்வொரு திட்டமும் முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவியல் கற்றுக் கொடுத்தது. ஒரு திட்டம் போல மற்றொரு திட்டம் இருக்காது. எனவே, அமைப்பின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார்.
தனது தொழில்வாழ்க்கையில் தன்னம்பிக்கையைச் சோதித்த தருணங்களாக ஒவ்வொரு முக்கியமான ஏவுகணை ஏவுதலையும் குறிப்பிடுகிறார்.
“ஒவ்வொரு ஏவுதலும் உங்களைச் சோதிக்கும்; ஆனால் ஒவ்வொரு வெற்றியும் உங்களுக்குப் புதிய தன்னம்பிக்கையைத் தரும்,” என்கிறார்.
ஒரு விஞ்ஞானி, பொறியாளர் மற்றும் தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாக நேர்மையைச் சுட்டிக்காட்டும் அவர், “உங்களது அறிவிலும், உங்களது தனிப்பட்ட நடத்தை மற்றும் செயல்பாட்டிலும் நேர்மை இருக்க வேண்டும்,” என்று தெரிவிக்கிறார்.
நாட்டின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்க்கையில் இருந்து ஒரு செய்தியைப் பகிரும் டெஸ்ஸி தாமஸ்,
“என்னால் இதைச் செய்ய முடிந்தது என்றால், உங்களால் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இன்று வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் மிகவும் சிறப்பாக உள்ளன. தெளிவான கவனக் குவிப்புடன் செயல்படும் எவராலும் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும்,” என்கிறார்.
இறுதியாக, தங்களது மனதிற்குள்ளேயே வரம்புகளையும் தடைகளையும் வைத்துள்ள பெண்களுக்கு ‘அக்னி புத்திரி’ தரும் ஆலோசனை என்னவென்றால், “தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கான உங்களது இயல்பான ஆர்வமும், முடிவெடுக்கும் திறனுமே உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வலுவான தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் மன உறுதியைக் கொண்டிருங்கள்,” என்பதுதான்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan