சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தகமையத்தில் நடைபெற்று வரும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களைத் தாக்கும் கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசியை, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த விலையில்லாத ஹெச்.பி.வி. தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் 3.38 லட்சம் சிறுமிகள் பயனடைவார்கள், என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கருப்பைவாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி
உலகளவில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் எதிரியாக இருக்கும் நோய்களில் ஒன்று கருப்பைவாய்ப் புற்றுநோய் ஆகும். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்கள் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெண்களை அதிகளவில் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்த இடத்தில் கருப்பைவாய் புற்றுநோய்தான் அச்சுறுத்துகிறது.
ஹெச்.பி.வி. வைரஸ் (HPV - Human Papilloma Virus) தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க, ஹெச்.பி.வி. தடுப்பூசி உள்ளது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இரண்டு தவணைகளாகவும், அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மூன்று தவணைகளாகவும் இந்தத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசிகளுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், பெரும்பாலானோர் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதில்லை.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசி
பெண்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இந்த விலையில்லாத ஹெச்.பி.வி தடுப்பூசித் திட்டத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“தமிழ்நாட்டில் கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கவும், அந்நோயினை அறவே ஒழித்திடவும் இந்த தடுப்பூசியை, 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, இந்த தடுப்பூசித் திட்டத்தை சென்னையில் நடைபெற்று வரும் 'உலக மகளிர் உச்சி மாநாட்டில்', தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக தர்மபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுக்குட்பட்ட 30,209 மாணவிகளுக்கு இந்த ஹெச்.பி.வி தடுப்பூசி வழங்கப்படுகிறது.
அடுத்தடுத்த கட்டங்களாக, மற்ற மாவட்டங்களில் உள்ள 3,38,649 பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியைப் போட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலவச தடுப்பூசி திட்டமானது, பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நல்லதொரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம், கட்டணம் செலுத்தி இந்த தடுப்பூசிகள் போட இயலாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் வாழும் பெண் குழந்தைகள் பெரும் பயனடைவார்கள்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கம்
தமிழ்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களில், புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கமும் ஒன்று. இந்த இயக்கமானது நோய்த் தடுப்பு, ஆரம்பநிலையில் நோய் பாதிப்பைக் கண்டறிதல், முறையான சிகிச்சை, வலி நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தரமான வாழ்க்கைமுறை போன்றவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதோடு, முன்கூட்டிய இறப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம் வரும் 5 ஆண்டுகள் பல தொலைநோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் செயல்திட்ட ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் வெளியிட்டார்.