பிளாஸ்டிக் இல்லா வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காரணம் மண்ணை மட்டுமின்றி புதிதாக பிறந்த குழந்தையின் வயிறு வரை பிளாஸ்டிக்கின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான்.
என்னதான், பிளாஸ்டிக் இல்லா சமையலறை, பாலீதீன் கவர் இல்லா வாழ்க்கை முறை எனப் பல மாற்று சிந்தனைகளைக் கைக்கொண்டாலும், பால் பாக்கெட்டுகள் வழியாக பிளாஸ்டிக் பைகள் வீட்டிற்குள் நுழைவதும், பின் அதன் கழிவுகள் மண்ணை பாழாக்குவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது. கண்ணாடி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் என அதற்கு பல மாற்றுகள் சிந்தித்தாலும், பால் பாக்கெட்டுகளின் உபயோகம் அதிகளவில் உள்ளது.
எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான 'மதர் டெய்ரி' (Mother Dairy), இந்தியாவிலேயே முதன்முறையாக இயற்கையாகவே மண்ணில் மக்கும் (Biodegradable) பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த பாக்கெட்டுகள் மைக்ரோபிளாஸ்டிக் (Microplastics) எச்சங்களை விட்டுச்செல்லாமல், சில ஆண்டுகளில் மண்ணில் முழுமையாக மட்கிப்போகும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
மெழுகாக மக்கிப் போகும் பால் பாக்கெட்டுகள்
இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்ட இந்த பாக்கெட்டுகளை, உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூன்.5) டெல்லியில் மதர் டெய்ரி அறிமுகப்படுத்தியது. சுமார் நான்கு ஆண்டு கால ஆய்வுகளுக்குப் பிறகு இந்த மக்கும் பால் பாக்கெட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள சாதாரண பால் பாக்கெட்டுகள், கழிவுகளாக மண்ணில் வீசப்படும்போது, அவை ஆண்டுக்கணக்கில் மக்காமல், மண்ணிற்கு கேடு விளைவிக்கின்றன. ஆனால், மதர் டெய்ரி அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய பால் பாக்கெட்டுகள், கழிவுகளாக மண்ணில் வீசப்படும் போது, அவை மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் உடைக்கப்பட்டு, இயற்கையான மெழுகு போன்ற பொருளாக மாறி, எளிதாக மக்கி விடுகின்றன.
பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்தப் பாக்கெட்டுகளால், உள்ளே இருக்கும் பாலிற்கு எவ்வித ரசாயன விளைவும் ஏற்படாது என்கின்றனர். அதோடு, தற்போது புழக்கத்தில் உள்ள பாக்கெட்டுகளைப் போலவே இவையும் தரமானதாகவும், பால் கசிவு ஏற்படுத்தாததாகவும் இருக்கும் என்றும் மதர் டெய்ரி நிறுவனத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
பால் விலையில் மாற்றம் இல்லை
மதர் டெய்ரி, டெல்லியில் நீண்டநாட்களாக பால் விநியோகம் செய்து வருகிறது. அதில், டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதிகளில் முதற்கட்டமாக இந்த மக்கும் பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
”இந்தப் புதிய பாக்கெட்டுகள் அறிமுகத்தால், பால் பாக்கெட்டுகள் விலையில் மாற்றம் இருக்காது, என மதர் டெய்ரி மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மீனேஷ் ஷா தெரிவித்துள்ளார். அதே பழைய விலைக்கே, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத புதிய பாக்கெட்டுகளில் பால் விநியோகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மட்டுமின்றி நெய், பனீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களையும் மதர் டெய்ரி உற்பத்தி செய்கிறது. ஆனால் முதல்கட்ட பால் பாக்கெட்டுகளில் மட்டும் இந்த மக்கும் பால் பாக்கெட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. படிப்படியாக இந்த திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், மற்ற பொருட்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
நாட்டில் தினமும் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகள் குப்பையில் வீசப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மதர் டெய்ரியின் இந்த புதிய தொழில்நுட்ப அறிமுகம் விரைவில் மற்ற நிறுவனங்களுக்கும் விரிவாகும் பட்சத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு விரைவாக குறையும், என எதிர்பார்க்கப்படுகிறது.