+

ஒரே மேடையில் மகனுடன் பட்டம் பெற்ற தாய் - ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

45 வயதான அம்மாவும், அவரது 21 வயது மகனும் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஐஐடி மெட்ராஸில் நடந்துள்ளது.

கற்பதற்கு வயது என்றுமே தடையாக இருப்பதில்லை. ஆனாலும், பெண்கள் பலர் திருமணத்திற்குப் பிறகு கல்வி, வேலை எனப் பலவற்றில் இருந்து விலகி நின்று விடுகின்றனர். குடும்பப் பொறுப்புகள், குழந்தை வளர்ப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இது சரியல்ல...

திருமணத்திற்குப் பிறகும் பெண்களால் படிக்க முடியும் என்றும், மகன் பட்டம் வாங்கும் பட்டமளிப்பு விழாவிலேயே தானும் பட்டம் வாங்க முடியும் எனவும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஜிகிஷா டெய்லர்.

IIT madras

மகனால் துளிர்த்த படிப்பு ஆசை

45 வயதாகும் ஜிகிஷா டெய்லர், குஜராத்தைச் சேர்ந்தவர். இவரது 21 வயது மகன் ஆதித்யா கபாடியா. நன்கு படித்தவரான ஜிகிஷா, திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகள் காரணமாக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்லூரி பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதை மட்டுமே தனது கடமையாக நினைத்து செயல்பட்டு வந்தவருக்கு, கொரோனா லாக்டவுன் ஒரு திருப்புமுனையைத் தந்தது. லாக்டவுன் காரணமாக அனைத்து கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க, ஆதித்யா ஐஐடி மெட்ராஸில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் கொண்ட அந்தப் பாடப்பிரிவை முடித்தப் பிறகு நேரடி கல்லூரியில் பயின்றதைப் போலவே சான்றிதழ் கிடைக்கும் என்பதால் அதில் அவர் சேர்ந்துள்ளார்.

மகன் படிக்கும் போது, அதில் தனக்குப் பிரியமான மின்னணு தொடர்பான பாடங்கள் இருப்பதை ஜிகிஷா கண்டுள்ளார். எனவே, அவரும் ஆர்வமாக அதனைப் படிக்கத் தொடங்கியுள்ளார். தாயின் இந்த ஆர்வத்தைப் பார்த்த ஆதித்யா, ஜிகிஷாவையும் ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஜிகிஷாவுக்கும் இந்த யோசனை பிடித்துப் போகவே அவரும் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து விட்டார்.

“பல ஆண்டுகளுக்குப் பிறகு மாணவியாக மாறியது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கணிதமும், புள்ளியியலும் சற்று கடினமாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவை எளிதாகி விட்டன. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, 7 மணி வரை என் பாடங்களைப் படிப்பேன். பின்னர், வீட்டு வேலைகள் செய்யத் தொடங்கி விடுவேன். மதியம் மீண்டும் எனது பாடங்களைப் படிப்பேன்,” என்கிறார் ஜிகிஷா.
IIT madras

ஊக்கம் தந்த அம்மாவின் ஆர்வம்

தன் அம்மாவின் ஆர்வம் கண்டு, அவருக்கு படிப்பில் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்துள்ளார் ஆதித்யா. அதோடு, வாட்சப் மூலம் தனது சக மாணவர்களின் உதவியோடும் படித்துள்ளார் ஜிகிஷா.

“உண்மையில் இந்தப் படிப்பு எங்களை மேலும் நெருக்கமாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அம்மா எவ்வளவு கடினமாகப் படித்தார் என்பதைப் பார்த்து நானும் ஊக்கமடைந்தேன். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருக்கும் எனது அம்மாவின் இன்னொரு முகத்தை நான் பார்த்தேன்,” எனப் பெருமையுடன் கூறுகிறார் ஆதித்யா.

அம்மாவும், மகனும் ஒரே நாளில் பட்டம் பெறப் போகிறார்கள் என்ற விபரம், பட்டமளிப்பு விழாவிற்கு முந்தைய தினம் தான் ஐஐடி மெட்ராஸிற்கு தெரிய வந்துள்ளது. உடனே, அந்தத் தருணத்தை அவர்கள் இருவருக்குமே மறக்க முடியாததாக மாற்றும் வகையில், ஒரே நேரத்தில் இருவரையும் மேடைக்கு அழைத்து பட்டம் அளித்து கௌரவித்து விட்டது ஐஐடி மெட்ராஸ்.

IIT Madras

புதிய கல்வி.. புதிய நம்பிக்கை!

ஆதித்யா தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஜிகிஷா, தனது இளைய மகன் 12ம் வகுப்பு படித்து வருவதால், வேலைக்குச் செல்லும் திட்டத்தை சற்று தள்ளி வைத்துள்ளாராம்.

“எனக்கு இப்போது புதியக் கல்விப் பின்னணி கிடைத்துள்ளது. அதனால் முன்பைவிட இன்னும் சிறப்பாக கற்பிக்க முடியும் என்று நம்புகிறேன்," என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜிகிஷா.

படிப்பதற்கு வயதோ, சூழ்நிலையோ நிச்சயம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ள ஜிகிஷாவிற்கு சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

facebook twitter