
மாறு… மாற்று... என்ற வித்தியாசமான கொள்கை முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெறும்பூரில் களமிறங்கியுள்ளார் திருச்சியைச் சேர்ந்த எம்எம்எம் என்ற அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ம. முருகானந்தம்.
EXCEL GROUP OF COMPANIES நிறுவனர் என்ற முறையிலும், சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்ற முறையிலும், ரோட்டரி சங்கத்தில் நீண்ட காலமாக தொண்டாற்றியவர் என்ற வகையிலும் இவர் திருச்சி பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
திருவெறும்பூரில் சாதாரண அரசுப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கியவர், பிஇ., எம்பிஏ முடித்து, எம்எப்டி மற்றும் MS (MM) என பிட்ஸ் பிலானி வரை தனது கல்வியை தொடர்ந்து பல்வேறு டிகிரிகளை தனது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டே செல்கிறார். அநேகமாக நிகழும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகம் படித்த வேட்பாளர் இவராகத்தான் இருப்பார். மேலும், தொடர்ந்து பட்டயப் படிப்புகளை படித்து தனது கல்வி தாகத்தை தணிக்க முயன்று வருகிறார்.

கூலி வேலை செய்து வருபவர்களின் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவர், இரு அரசுப் பள்ளிகளுக்குத் தாளாளராக செயல்பட்டு வருகிறார். தனது, EXCEL அறக்கட்டளை மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
முசிறியில் உள்ள குழந்தைகள் இல்லத்துக்கு உணவு வழங்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ள முருகானந்தம், மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்துவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவது என இவரின் சேவைகளின் பட்டியலும் தொடர்கிறது.
இவர் 1 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தனது ஊக்கமிகு பேச்சின் மூலம் உறசாகத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக உதவி இருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால் மக்களின் கஷ்டங்களை அறிந்த இவர், இளம் வயதிலேயே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார். மிகவும் இளம் வயதில் 2017ல் ரோட்டரி கவர்னராக மக்கள் சேவையாற்றி வந்தவர் என்பதும்,
மக்கள் சேவைக்காக ரோட்டரி செயல்படுத்தும் திட்டங்களுக்காக தனது சொந்தப் பணத்தில் சுமார் 2.5 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என்பதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்கள்.
திருச்சி பகுதி மக்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், ரோட்டரி மூலமும் சேவை செய்தது போதாதென மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து, மாநிலச் செயலாளராக தொடங்கி, இன்று கட்சியின் கட்டமைப்பு பொதுச்செயலராக செயலாற்றி வருகிறார்.

இவ்வாறு தனது தனிப்பட்ட கல்வி, கடின உழைப்பால் இன்று திருச்சியில் ஓர் தொழில் சாம்ராஜியத்தை ஏற்படுத்தியதோடு, இடைவிடாமல் மக்கள் சேவையையும் உயிர் மூச்சாகக் கொண்டு களப் பணியாற்றி வருகிறார்.
திராவிடக் கட்சிகளை ஓதுக்கிவிட்டு மாற்றுத்துக்கான அரசியல், மக்கள் சேவையாற்றும் அரசியல்தான் தேவையென திருச்சியின் கந்தக பூமி வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களின் தேவைகளைத் தேடிச் சென்று தீர்த்து வைக்கும் முருகானந்தத்தை மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்.
தொகுதியில் பல்வேறு தேவைகள், பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தாலும், ஏற்கெனவே சொந்த ஊரில் சாதாரண மனிதனாக நடமாடி இன்று திருச்சியே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் தேவைகளும் தனக்குத் தெரியும் எனவே திருவெறும்பூர் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற்றவுடன் விரைந்து நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் ஓட்டு வேட்டையில் இறங்கி இருக்கிறார் முருகானந்தம்.
இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 229 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 603 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 53 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 891 நபர்கள் உள்ளனர். இத்தொகுதியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவெறும்பூரில் கடந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அன்பில் பொய்யாமொழி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் என மாறி மாறி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் திருச்சியை வென்றுள்ளது. எனவே புதிதாக இத்தொகுதியில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் வெற்றிக் கனியை பறிக்க மிகுந்த சிரமம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கெனவே மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் முருகானந்தம் வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாகவே இருப்பதாகத் தெரிகிறது.
வேட்பாளர் விவரம்
பெயர்: ம. முருகானந்தம்
கல்வித்தகுதி: BE., MBA., MFT., MS (MM).,
தொழில்: தொழிலதிபர், excel group pf companies.
கட்சி: மக்கள் நீதி மய்யம்
தொகுதி: திருவெறும்பூர்
பதவி: கட்சியின் கட்டமைப்பு பொதுச்செயலர்
சிறப்பம்சங்கள்: ரோட்டரி கவர்னராக இருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சொந்த பணத்தில் நிறைவேற்றியவர், மாணவர் மற்றும் இளைஞர் முன்னேற்றத்துக்காக பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருபவர், ஏழை எளியோருக்கு வலிய சென்று உதவுபவர் என்பதால் மக்களிடையே நன்கு பரிச்சயமானவர்.
எதிரணி வேட்பாளர்கள்: அன்பில் பொய்யாமொழி (திமுக), ப. குமார் (அதிமுக), செந்தில்குமார் (தேமுதிக), வே. சோழசூரன் (நாதக).
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)