
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-ன் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் களம் சூழு பிடிக்கத் தொடங்கியது. பெரும்பாலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது என்றாலும், இந்த முறை தேர்தல் அந்த இரு பெரிய கட்சிகளின் பெருந்தலைவர்களான கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெ ஜெயலலிதா உயிருடன் இல்லாது நடைபெறும் தேர்தல் ஆகும். இது தமிழகத்துக்கு புதிது.
இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மய்யம் கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக என அவரவர்கள் தனியாக மற்றும் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாம், நான்காம், ஐந்தாம் அணி என அமைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளன
அரசியல்வாதி என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி என்ற காலம் மாறி, கழுத்தில் ஸ்டெத் உள்ளவர்கள் முதல், கையில் கலப்பைப் பிடித்தவர்கள் வரை இந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் புதுமுகங்களாக போட்டியிடுகிறார்கள்.

கட்சி சார்பைத் தாண்டி இவர்களுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் ஒரு நல்ல அடையாளம், நற்பெயர் இருப்பது மறுப்பதற்கு இல்லை. அப்படிப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அரசியலுக்கு நுழைந்த பின்னணி, சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம், அரசியலுக்கு அப்பால் மக்கள் மனதை கவர்ந்த அவர்களின் செயல்கள் என தினம் ஒரு வேட்பாளரை யுவர்ஸ்டோரி தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்து, கடந்த இரு வாரங்களாக தினம் ஒரு வேட்பாளரைப் பற்றி கட்டுரையாக வெளியிட்டது.
அப்படி நாங்கள் வெளியிட்ட 17 மாற்றத்துக்கான வேட்பாளர்களின் கட்டுரை தொகுப்பு இதோ:
1. ஆயிரம் விளக்கில் களம் காணும் மருத்துவர் எழிலன் நாகநாதன்!
சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் சமூக செயற்பாட்டாளர், மருத்துவருமான டாக்டர்.எழிலன்.
2. நேர்மையான அரசியலை நோக்கி முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபு!
படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனும் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார் நிர்வாகத் திறமைக்காக அறியப்படும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு.
3. ‘சமூகமே வீடு, பட்டினி இல்லா நாடு’ - பொதுச் சேவை டு அரசியலில் சினேகா மோகன்தாஸ்!
சென்னையை சேர்ந்த சினேகா, விஸ்காம் பட்டதாரி. ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர். ஃபுட் பேங்க் இந்தியா என்ற அறக்கட்டளையின் நிறுவனர். டப்பிங் ஆர்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்துள்ள சினேகா, ம.நீ.ம கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர். சமூக ஆர்வலர் டூ அரசியல்வாதியாகிய சினேகாவின் பயணமிது.

4. தேர்தல் களத்தில் ‘ஜல்லிக்கட்டு மனிதர்’ - கார்த்திகேய சிவசேனாபதி!
காங்கேயம் காளைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் முன்னின்றவர்களில் ஒருவரமான கார்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார்.
5. மக்கள் தொண்டாற்றும் எளிமையான வேட்பாளர் ‘மாரிமுத்து’
தமிழக தேர்தல் களத்தில் மிக எளிமையான வேட்பாளராக கவனத்தை ஈர்க்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து. சொந்த வீடு இல்லாமல் குடிசையில் வசிக்கும் இவர், தன்னலமற்ற பணியால் மக்களை கவர்ந்திருக்கிறார்.
6.சுயேட்சையாகக் களம் காணும் கோவை தொழில் முனைவர்!
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக அறியப்படும் கோவையின் சிங்காநால்லூர் தொகுதியில், தொழில்முனைவோரான மனிராஜ் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
7.தொழிலாளர் நலன் காக்கத் துடிக்கும் கோவில்பட்டி தோழர் சீனிவாசன்!
தொழிலாளர் நலன் மற்றும் மக்கள் நலன் காக்க கோவில்பட்டி தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் வேட்பாளரான கே. சீனிவாசன்.

8.பூம்புகார் தொகுதியை தெறிக்கவிடும் களப்போராளி காளியம்மாள்!
எளிமையானத் தோற்றம், யதார்த்தமான நகைச்சுவை பேச்சு, தெளிவான உச்சரிப்பு, பேச்சில் நறுக்,சுருக் - இதுவே காளியம்மாள். இதனாலே பொதுமக்களிடம் எளிதாகச் சென்றடைந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை பற்றிய தொகுப்பு.
9.பாளையங்கோட்டையில் மக்களுக்கான போராட்ட நாயகன் நெல்லை முபாரக்!
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்காக, மண்ணின் உரிமைகளுக்காக, சிறுபான்மையினர் நலனுக்காக, பாதிக்கப்பட்டோரின் குரலாக, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார் நெல்லை முபாரக்.
10.எளிமையான வேட்பாளர்; ஆனால் வலிமையாக முழக்கமிடும் பொன்னுதாய்!
தமிழக சட்டமன்ற தேர்தலில், நட்சத்திர வேட்பாளர்களுக்கு மத்தியில், ஆட்டோ ஓட்டுனரின் மனைவி என்ற முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய்.
11.டி.நகர் தொகுதிப் பிரச்சனைகளைத் தீர்க்க களத்தில் இறங்கிய ஐடி பெண்!
அமைதியான குடும்பம், ஐடி துறையில் கை நிறைய சம்பளம், மகிழ்ச்சியான வாழ்க்கை. இவற்றையெல்லாம் விட்டு இப்போது பரபரப்பான அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள 33 வயதான சிவசங்கரி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் தி.நகர் தொகுதி வேட்பாளர்.

12.ஆலந்தூரில் போட்டியிடும் சாமானிய இளைஞர், தொழில் முனைவர் சரத்பாபு ஏழுமலை!
ஏழ்மையான பின்னணியில் இருந்து படித்து முன்னேறி வெற்றிகரமான தொழில் முனைவோராக விளங்கும் சரத்பாபு ஏழுமலை, சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
13.அரசியல் குடும்பத்தில் இருந்து தனித்தன்மையுடன் தேர்தலில் கால் பதிக்கும் மோகன் குமாரமங்கலம்
அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருந்தாலும் , ஓமலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மோகன் குமாரமங்கலம், தனக்கான தனித்தன்மையோடு வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.
14.தாம்பரம் தொகுதி மக்களின் பிரதிநிதியாக களம் காணும் சமூக செயற்பாட்டாளர்!
பத்திரிகையாளராக பணியை துவக்கி, சமூக செயற்பாட்டாளராக மாறி, சட்ட பஞ்சாயத்து இயக்கம் மூலம் ஊழலுக்கு எதிரான செயல்பாடு, தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு என பல விதங்களில் மக்கள் மத்தில் பணியாற்றி வரும் சிவ இளங்கோ.
15.துறைமுகம் தொகுதியை மேம்படுத்த விரும்பும் இளம் அரசியல்வாதி வினோஜ் பி.செல்வம்
நம்மால் முடியும் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு சமூகப் பணிகளில் அயராது ஓடிக்கொண்டிருந்த முதல் தலைமுறை அரசியல்வாதியான வினோஜ் பி.செல்வம் துறைமுகம் தொகுதியில் தேர்தல் களம் காண்கிறார்.

வினோஜ் பி.செல்வம், துறைமுகம் தொகுதி வேட்பாளர், தேஜகூட்டணி
16.மாறு; மாற்று, கொள்கை முழுக்கத்துடன் திருவெறும்பூர் வேட்பாளர் முருகானந்தம்!
மாறு… மாற்று... என்ற வித்தியாசமான கொள்கை முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெரும்பூரில் களமிறங்கியுள்ளார் EXCEL GROUP OF COMPANIES நிறுவனர் எம்எம்எம் என்ற அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ம. முருகானந்தம்.
17.வந்தவாசி தொகுதியில் கோல் அடிக்க விரும்பும் இளம் வேட்பாளர் முரளி சங்கர்!
கால்பந்தாட்ட வீரராக , பயிற்சியாளராக வெளிநாடுகளில் பணிபுரிந்தவர் அரூர் அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த முரளி சங்கர். ‘அரசியல், விளையாட்டு என இரண்டுமே ஒரு மனிதனை ஒழுக்கம் தவறாமல் நடக்க வழி நடத்தும்’ என்ற நம்பிக்கையோடு வந்தவாசி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.