ஆன்லைனில் அரசியல் விளம்பரங்கள்: தமிழகம் முதலிடம்; அதிகம் செலவு செய்த கட்சி எது தெரியுமா?

05:00 PM Apr 05, 2021 |

இணையத்தில் அரசியல் விளம்பரங்களுக்காக செலவு செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, கூகுள் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இணையம் மற்றும் சமூக ஊடக பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.


தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விவாதம் தீவிரமாக நடைபெறுவதோடு, அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பரம் செய்வதும் அதிகரித்துள்ளது.


சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறது என்றால் இணையத்தில் கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனமான யூடியூப்பில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுகிறது.


மக்கள் மத்தியில் இணைய விளம்பரங்கள் மிகுந்த தாக்கம் செலுத்துவதால், கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் வகையில், கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக செலவிடும் தொகை பற்றிய விவரத்தை வெளியிட்டு வருகின்றன.

கூகுள் நிறுவனம் அண்மையில், இத்தகைய டிரான்ஸ்பரன்சி ரிப்போர்ட்டை (Google Transparency Report) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் தகவல்படி, இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்காக அதிகமாக செலவிடும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.


2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த மார்ச் மாதம் வரையான காலத்திற்கான விவரங்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது. இந்த காலத்தில் இந்திய அளவில் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள், சுமார் ரூ.59.50 கோடி அளவில் விளம்பரம் செய்துள்ளன. 21,504 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்,

தமிழ்நாடு 24.2 கோடி ரூபாய் அதாவது கூகிளில் செலவிடப்பட்ட மொத்த அரசியல் கட்சி விளமபரங்களில் 43 சதவீதத்துக்கும் மேல் செலவிட்டுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கம்- ரூ.2.85 கோடி, கேரளா - ரூ.36 லட்சம் மற்றும் அசாம் - ரூ.17 லட்சம் என்ற வரிசையில் செலவிட்டுள்ளது என்று அறிக்கை மூலம் அறியமுடிகிறது.

இந்திய அளவில் அரசியல் விளம்பரத்திற்காக செலவிட்டுள்ள கட்சிகள் மற்றும் தொகை விவரம்:


  • பாஜக கூகுள் மேடைகளில் ரூ.18.09 கோடி அரசியல் விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. பாஜக செலவிட்டு தொகையில் பெரும் பகுதி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கானது. தற்போதைய தேர்தலில் மேற்கு வங்கத்தில் அக்கட்சி அதிக தொகை செலவிட்டுள்ளது என பிஸினஸ் லைன் செய்தி தெரிவிக்கிறது.


  • கூகுள் விளம்பரத்திற்கான செலவு செய்வதில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. அக்கட்சி, 940 விளம்பரங்களுக்கு ரூ.18.96 கோடி செலவிட்டுள்ளது. இதில் பெரும்பகுதி யூடியூப் விளம்பரங்களுகாக செலவிடப்பட்டுள்ளது.


  • ஆளும் கட்சியான அதிமுக ஆன்லைன் விளம்பரத்துக்காக ரூ.4.52 கோடி செலவிட்டுள்ளது. இந்த தொகை.


  • நாம் தமிழர் கட்சி- ரூ.12 லட்சம், மக்கள் நீதி மய்யம்- ரூ.1.34 லட்சம், மார்க்சிஸ்ட் கட்சி- ரூ.10.94 லட்சம் உள்ளிட்ட கட்சிகளும் விளம்பரம் செய்துள்ளன.


கட்சிகள் அல்லாமல் சில வேட்பாளர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் விளம்பரத்துக்காக செலவிட்ட தொகை விபரம்:


  • பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (திமுக ) - 1 லட்சத்து 14 ஆயிரம்
  • பொன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்) - 33,500 ரூபாய்


இதே போல முன்னணி சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் கடந்த 90 நாட்களில், ரூ.13.77 கோடி அரசியல் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் ரூ.3.42 கோடி செலவிட்டுள்ளது. இதில் திமுக முதலிடம் வகிக்கிறது. அக்கட்சியின் ஒன்றினைவோம் வா உள்ளிட்ட விளம்பரங்கள் பட்டியலில் முதலில் உள்ளன.


கூகுள் அறிக்கைக்கான இணைப்பு!