+

‘கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் பொது முடக்கம் தேவையில்லை’ - நாட்டு மக்களுக்கு பிரதமர் அறிவுரை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்தாலும் சரியான கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் முழுமுடக்கம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மருத்துவ வல்லுநர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஏப்ரல் 20ம் தேதி இரவு 8.45 மணியளவில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, கொரோனா இரண்டாம் அலை புயலாக வீசி வருகிறது. தற்போதைய பாதிப்பில் இருந்தும் நம்மால் மீண்டு வர முடியும். மக்கள் நினைத்தால் கொரோனாவை வெல்ல முடியும். முதல் அலையின் போது முன்களப்பணியாளர்கள்.

சுகாதாரத்துறையினர், மருந்தாளுனர்கள் காவல்துறையினர், ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் என அனைவரும் தங்களது உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரை பாதுகாத்தனர்.

மோடி

தற்போதும் அவர்கள் தங்களது சுக, துக்கங்களை மறந்து மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். நம்முடைய பொறுமையை நாம் எப்போதும் இழந்து விடக்கூடாது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நான் துணை நிற்கிறேன்.


நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து தயாரிப்பு அதிகரித்துள்ளது, தடையின்றி மருந்துகள் கிடைக்க தயாரிப்பை உறுதி செய்ய மருந்து நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன, அதனால் மக்கள் கவலை கொள்ள வேண்டாம். ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்படுகிறது. முன்களப்பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், மூத்த குடிமக்கள் என இதுவரை 12 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.


ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும். நாட்டில் உள்ள அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்க உறுதி செய்யப்படும்.

மே1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம். பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிரை காக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முயற்சியாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள மாநிலங்களை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து இருக்க அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தடுப்பூசிகள் போட வேண்டும். முகக்கவசம், பிபிஇ கவசம், வென்டிலேட்டசர் என அனைத்து மருத்துவ சாதனைகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


கடந்த வருடத்தைப் போன்ற மோசமான சூழ்நிலை தற்போது இல்லை. நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள், மற்றும் நாட்டில் வளிமையான சகாதார கட்டமைப்பும் உள்ளது.


கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை இளைஞர்கள் முன் எடுக்க வேண்டும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் அனைவரும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். நாம் கட்டுப்படுவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெருக்கள் தோறும் குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிப்பதன் மூலம் முழு முடக்கம் வருவதைத் தடுக்கலாம். நாட்டு மக்கள் முழு கவனத்துடன் இருந்தால் இந்த கொரோனா இரண்டாம் அலையையும் நம்மால் விரட்ட முடியும். மாநிலங்கள் கடைசி வாய்ப்பாகவே முழு ஊரடங்கை கருத வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

facebook twitter