
கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி இந்தியா திணறி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த அமெரிக்காவையே இரண்டாம் இடத்திற்கு தள்ளி, தினந்தோறும் கொரோனா பாதிப்பில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது இந்தியா.
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் உயிர் காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமை போன்றவை அதிகரித்து வருகிறது. அதிக தொற்று பாதிப்பில்லாதவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனபோதும், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சைப் பெற வேண்டியவர்கள் கட்டாயம் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று, சிகிச்சைக்காக மேலும் அலையாமல் இருக்க அரசும், தனியார் மருத்துவமனை, ஆய்வகங்கள் மற்றும் தன்னார்வலர்களும் பல்வேறு வசதிகளை மக்களின் வீடுகளுக்கேக் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
அப்படி கொரோனா சிகிச்சை தொடர்பான எல்லா தகவல்கள், விவரங்கள் மற்றும் தொடர்பு எண்களை தொகுத்து வழங்கி இருக்கிறோம்:
வீட்டிற்கே வரும் பரிசோதனைகள் மையங்கள்
ஐசிஎம்ஆர் (ICMR) அங்கீகாரம் பெற்ற சில தனியார் ஆய்வகங்களுக்கும் நேரடியாக வீடுகளுக்கேச் சென்று கொரோனா தொற்று பாதிப்பு உரியவர்களாக சந்தேகப்படுபவர்களிடம் இருந்து சாம்பிள்ஸ் எடுத்துக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
அவைகளின் விபரமாவது:
- மெட் ஆல் ஹெல்த்கேர் (Medall Healthcare) : 7550177777
- நியூபெர்க் டயாக்னடிக்ஸ் (Neuberg Diagnostics) : 97003 69700 (தமிழில் ஹெல்ப்லைன்)
- ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் (Aarthi Scans and Labs) : 75500 75500.
இங்கு பதிவு செய்த மறுநாளே நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று சாம்பிள்ஸ் எடுக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சோதனை முடிகள் தரப்படுகின்றன. இதற்குக் கட்டணமாக ரூ. 1,700 வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்பவர்களிடம் ஆதார் அட்டை அடையாளச் சான்றாகப் பெறப்படுகிறது.
- ஒய் ஆர் ஜி கேர் (YRG Care) - 9940034333.
முதல் நாள் காலை 10 மணி முதல் அடுத்த நாள் காலை 8.30 மணி வரை எடுக்கப்படும் சாம்பிள்களின் சோதனை முடிவுகள் இரண்டாம் நாள் மதியம் 2 மணி அளவிலேயே இங்கு தரப்படுகிறது. இதற்கு ரூ.1,700 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வீட்டிற்கே வந்து சாம்பிள்களைப் பெறுவதற்கு கோசல் என்பவரது தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே இங்கு அரசு பரிசோதனை மையங்கள் மட்டுமின்றி பல தனியார் பரிசோதனை மையங்களுக்கும் வீடுகளுக்கே சென்று சாம்பிள்ஸ் எடுத்து சோதனை செய்து முடிவுகளைத் தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் மேலும் சில முக்கிய நகரங்களிலும் இந்த வசதி உள்ளது. அதன்படி,
- கோவை பயோலைன் லேபரட்டரி (Bioline Laboratory, Coimbatore) : 04224200099. இங்கு பரிசோதனைக் கட்டணமாக ரூ. 1,500 வசூலிக்கப்படுகிறது.
- கன்னியாகுமரியில், விவேக் லேபரட்டரிஸ் (Vivek Laboratories, Kanyakumari): 04652230108. இங்கு 7 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் அளிக்கப்படுகிறது.
படுக்கை வசதிகள் விவரம்:
கடந்த முறையே அரசு போதுமான முன்னேற்பாடுகளுடன் செயல்பட்ட போதும், பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் சமூகவலைதளங்களில் வதந்திகளாக உலா வந்து மக்களின் பீதியை அதிகப்படுத்தியது.
கடந்த முறையை விட கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி ஏற்கனவே மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ள நிலையில் மேற்கூறியது போன்ற வீண் வதந்திகளை தவிர்க்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றில் ஒன்று தான், தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு காலியாக உள்ள படுக்கை வசதிகளைத் தெரிந்து கொள்ளும் இணையதள முகவரி. அரசு அளித்துள்ள https://stopcorona.tn.gov.in/beds.php இந்த அதிகாரப்பூர்வ தளத்தில் தினமும் ஒவ்வொரு மணிக்கும் ஒருமுறை, காலியாக உள்ள படுக்கை வசதிகள் பற்றி அப்டேட் செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் விபரங்களை தொடர்பு எண்களோடு இதில் பெற முடிகிறது. ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள், அவை இல்லாத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் என விபரம் வாரியாக தரப்படுகிறது. எனவே தேவைப்படுவோர் அதிக அலைச்சலின்றி இதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதோடு தேவையான படுக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற வதந்திகளையும் தவிர்க்க இயலும்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி அரசின் அனுமதியோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ள தனியாக ஒரு இணையதளப் பக்கம் உள்ளது. stopcoronatn.github.io என்ற இந்தப் பக்கத்திலும் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள், அவை இல்லாத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் எனத் தனித்தனியாக காலியாக உள்ள படுக்கைகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் தேவை:
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக இந்தியாவில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உரிய நேரத்தில் கிடைக்காததால் பல நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களைப் பதற வைத்துள்ளது.

Representational Image (Credits: Unsplash)
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சரி செய்ய மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு மட்டுமின்றி சில தன்னார்வலர்களும் தேவையானவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்க தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
- Sports365 என்ற தனியார் நிறுவனம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 நகரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இருந்தால் 24-30 மணி நேரத்தில் ஏற்பாடு செய்து அனுப்புவதாக அறிவித்துள்ளது. இதில் சென்னையும் அடங்கு. இவர்களை தொடர்பு கொள்ள: Contact: Ashish Bhiwani - ashish@sports365.in Number: 9986966909 / 6304495317
- டிவிட்டரில் இயங்கி வரும் ரஹ்மான் என்பவரும் அவர்களில் ஒருவர். @aleem_rahman என்ற இவரது பக்கத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் கையிருப்பு பற்றிய தகவல்களையும், தேவைப்படுவோருக்கு டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் இருந்து பெற்றுத் தருவதாக பதிவு செய்துள்ளார்.
- Psychotech Services நிறுவனம் இதற்கென தனியாக இணையதளப் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் கொரோனா தாக்கத்திற்கு ஆளான மக்களின் உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை விபரங்கள், மருந்துகள் போன்றவை இதில் அப்டேட் செய்யப்படுகின்றன.


ஆம்புலன்ஸ் வசதிகள்:
அவசர கால மருத்துவ உதவிக்கு தமிழக அரசு 108 என்ற எண்ணிற்கு அழைத்து ஆம்புலன்ஸ் வசதியைப் பெற இயலும் என்பது நாமறிந்த ஒன்று தான். நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சில தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களும் இணைந்துள்ளன.
அரசு அளித்துள்ளது போல் இலவச வசதி கிடையாது இது. உரிய கட்டணம் செலுத்தி ஆம்புலன்ஸ் வசதியைப் பெற இயலும்.
- ஸ்டன்பிளஸ் (StanPlus) என்ற தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் நோயாளிகள் பயனுரும் வகையில் இந்த வசதியை செய்துள்ளது. அவர்களது தொடர்பு எண் : 1800 121911911.
- ஆம்புலன்ஸ் ஆன் கால் (Ambulance on Call) என்ற தனியார் நிறுவனம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப உயிர்காக்கும் கருவிகளுடன் இவர்களது ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. https://www.ambulanceoncall.com/ என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது +91 98846 39400 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ இவர்களது சேவையைப் பெற இயலும்.
இவற்றைத்தவிர அந்தந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்சுகளும் வீட்டுக்கே வந்து கொரோனா நோயாளிகளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்கின்றனர்.
பிளாஸ்மா டோனர்கள்
கொரோனா பாதிப்பு மிக மோசமாகி விட்டால் , நோயாளிகளைக் காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை பெரிதும் உதவுகிறது. இதனால் பிளாஸ்மா டோனர்களை, நோயாளிகளின் குடும்பத்தார் தேடி வருவதை சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடிகிறது.
எனவே, Fridays for Future என்ற அமைப்பு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி, பிளாஸ்மா தானம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு கூகுள் ஷீட் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் கிளிக் செய்து பார்த்தால் அந்தந்த மாநிலத்தில் உள்ள நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை இந்த ஷீட் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது என்பதால் சமீபத்திய தகவல்களைப் பெற முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
இது தவிர, @joshephradhik, @ Vibhusha Chauhan, @Isha Chauhan போன்ற சில தன்னார்வலர்களும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பிளாஸ்மா டோனர்கள் பற்றிய தகவல்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். கீழ்வரும் இந்த இணையதளங்கள் மூலமாகவும் பிளாஸ்மா டோனர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கூகுள் பிளே ஆப்பிலும் பிளாஸ்மா டோனர்களைக் கண்டறியும் வகையில் பல ஆப்கள் உள்ளன. அவற்றில் பல இலவசமாக சேவைகளை வழங்குகின்றன. டிவிட்டரில் இயங்கி வரும் சில தன்னார்வலர்கள் சேர்ந்து https://covidresource.glideapp.io என்ற இலவச ஆப்பை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பிளாஸ்மா டோனர்கள் பற்றிய தகவல்களை சுலபமாகப் பெற முடியும்.
ரெம்டெசிவிர்

கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளில் ஒன்றான, Remdesivir தனது எம்ஆர்பி விலையில் இருந்து 20% விலை சலுகையை நோயாளிகளுக்கு வழங்குகிறது. கூகுள் மூலமாக அல்லது 8939169999 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவைப்படுவோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள இயலும்.
தமிழக அரசின் உதவி எண்கள்:
மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டிய கொரோனா நோயாளிகள் மட்டுமே தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றபடி அதிக பாதிப்பில்லாத, அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன்மூலம் மருத்துவமனைகளில் அதிக கூட்டம் சேர்வது தவிர்க்கப்படுவதுடன், தேவையானவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி பெறுவதும் எளிதாகிறது.
ஆனால் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் பதற்றத்தை, மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், தேவையான மருத்துவ அறிவுரைகளை வழங்கவும் தமிழக அரசு 044-29510400, 044-29510500 என்ற உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் 24 மணி நேரமும் பயனடைந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் கொரோனா பாதிப்பின் அளவு மிக மிக அதிகம் என்பதால், சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தனியாக கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெற ‘தொலைபேசி வழி ஆலோசனை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஒரே நேரத்தில் 100 பேர் தொடர்பு கொள்ள முடியும். 044– 46122300, 25384520 ஆகிய எண்களில் இந்த மையத்தை தொடர்புகொள்ளலாம்.

சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் சுமார் 80% பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமக்கள் கொரோனா அவசர உதவி, அறிகுறிகள் குறித்த மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மையம், தடுப்பூசி மையம் குறித்த தகவல்களை இந்த மையத்தை தொடர்புகொண்டு பெறலாம்.
வீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் உதவிகள், மருத்துவ அவசர உதவிகளும் இந்த மையம் மூலம் தரப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளைத் தருவதையும் இந்த மையம் செய்து வருகிறது.
கடந்த ஆண்டே இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுமார் 4 லட்சம் அழைப்புகள் வந்தது. பின்னர் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்ட இந்த மையம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,
"கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானதால் இந்த மையத்தை மீண்டும் திறந்துள்ளோம். வீட்டு தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க, தேவையற்ற நிகழ்வுகளை தடுக்கவும் இந்த மையம் பெரிதும் உதவுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவியை இந்த மையம் மூலம் பெற முடியும்,” என்றார்.
இந்த வருடம் கூடுதலாக கொரோனா தடுப்பூசி குறித்து எழும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறலாம். மூன்று ஷிப்டில் பணிபுரியும் தன்னார்வலர்களுடன் 24 மணி நேரமும் இந்த மையம் இயங்கும். மேலும், சென்னையில் உள்ள வீடுகளில் கிருமிநாசினி தெளிக்க விரும்புவோர் மற்றும் கோவிட் தொடர்பான எந்தவொரு உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
கவனிப்பு மையங்கள்:
கோவிட் கவனிப்பு மையங்களை பராமரிக்க 61 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கோவிட் கவனிப்பு மையங்களை அதிகப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்', என தலைமைச் செயலர் ராஜிவ்ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கவனிப்பு மைய எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட கூடுதலாக உயர்த்த வேண்டும் என்றும், தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3-ந்தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த மாதம் 16-ந்தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடன் போராடுகிறவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அடுத்த மாதம் 1-ந்தேதி 3-வது கட்டத்தை இந்த தடுப்பூசி திட்டம் சந்திக்க இருக்கிறது. அப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்த தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.