இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சின் மாநில அரசுகளுக்கு ரூ.600 எனும் விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 எனும் விலையிலும் வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்களையும் அரசு தீவிரமாக்கியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி திட்டமும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்படுவதை பரவலாக்கும் வகையில், மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி கொள்முதல் தொடர்பான புதிய நடைமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,
இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியான Covaxin மாநில அரசுகளுக்கு ரூ.600 எனும் விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 எனும் விலையிலும் வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசுக்கு தடுப்பூசி ரூ.150 எனும் விலையில் வழங்கப்படுவதாகவும், இது அரசால் இலவசமாக போடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 50 சதவீத தடுப்பூசி உற்பத்தி மத்திய அரசுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஆய்வுக்கான தொகையை மீட்டெடுக்கவும், கோவிட்-19 இண்ட்ராநேசல் தடுப்பூசி உள்ளிட்ட எதிர்கால தடுபூசிகளை உருவாக்கவும் இது அவசியம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் தன்மை மற்றும் இந்த தடுப்பூசியை பாட்டில் பிரித்த பின் 28 நாட்கள் பயன்படுத்தலாம் என்பது வீணாகும் தன்மையை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி தொடர்பான மூன்றாம் கட்ட சோதனை 78 சதவீத செயல்திறனை உணர்த்துவதாகவும், இது தொடர்பான ஆய்வு முடிவுகள் அறிவியல் சஞ்சிகைகளில் வெளியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.