ஆண்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற நிலையில் இருந்த தொழில்துறையில் தொழிலாளர்களாக மட்டுமல்லாது தொழில் முனைவோராகவும் சாதித்த பெண்கள் ஏராளம். அப்படி 2021ம் ஆண்டில் தடைகளைத் தகர்த்து தொழில் துறையின் தலைப்புச் செய்தியாக மாறிய ‘பிசினஸ் வுமன்கள்’ பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
இந்திய பெண் தொழில்முனைவோர், இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். 2018 மெக்கென்ஸி அறிக்கையின்படி, பெண்களின் சமத்துவத்தை முன்னேற்றுவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கான உலகின் மிகப்பெரிய வாய்ப்புள்ள நாடாக இந்தியா உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் 2025ம் ஆண்டுக்குள் 770 பில்லியன் டாலர் வரை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரங்களும் அழித்த நிலையில், வணிகத்துறையில் கால்பதித்த சில பெண்கள் கொரோனா அலைகளை எல்லாம் வென்று, 2021ம் ஆண்டிற்கான வணிகச் செய்திகளின் தலைப்பாக மாறியுள்ளனர்.
பெயின் அன்ட் கம்பெனி அறிக்கையின் படி,
“இந்தியாவில் 13.5 மில்லியன் முதல் 15.7 மில்லியன் பெண்கள் சொந்தமாக நடத்தி வரும் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மூலமாக 22 மில்லியனில் இருந்து 27 மில்லியன் வரையிலான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.”
இப்படி பெண்கள் வணிகத்தில் குறிப்பிட்ட அளவிற்கு முன்னேறி வரும் சமயத்தில், 2021ம் ஆண்டில் வணிகத்தில் சாதித்த 7 பெண்கள் குறித்த உத்வேகம் கொடுக்கக்கூடிய செய்திகளை தற்போது பார்க்கலாம்...
ஃபால்குனி நாயர் (Nykaa):
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசும் போது, இந்தியாவின் பணக்காரப் பெண் கோடீஸ்வரரான ஃபால்குனி நயாரின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஃபால்குனி நயார் தலைமையிலான நைகா அன்லைன் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவில் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாகவும் நைகா உருவெடுத்துள்ளது.
இந்திய பெண்கள் விரும்பும் வகையிலான குறைவான விலையில் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததோடு அதனை ஆன்லைன் மூலமாகக் கொண்டு சேர்த்து ஃபால்குனி நயாரின் வெற்றிப் பயணம் உருவானது.
இந்திய சந்தையில் முதல் முறையாகப் பியூட்டி துறை சார்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது என்றால் அந்த தனித்துவமான பெருமையும் ஃபால்குனி நாயரின் ‘Nykaa’ நிறுவனத்தை தான் சாரும். இதன் மூலம் சொந்த முயற்சியில் பில்லியனர் ஆன பெருமையோடு, ஓரே நாளில் இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற பெருமையும் ஃபால்குனி நயாருக்கு கிடைத்தது.
“நைகா நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே மூலதனத்தை சிறப்பாக திட்டமிடும், ‘கேப்பிட்டல் எஃபெக்டிவ் பிசினஸ்’ முறையை கையாண்டு வருகிறது. வாடிக்கையாளர்களை பொருட்களை வாங்க வைப்பதற்காக சலுகைகளை கொடுக்காமல், அதை ஆக்கப்பூர்வமான வேறு சில வழிகளில் பயன்படுத்தியது,” என முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரியங்கா சோப்ரா ஜோனஸ் (Anomaly):
பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் முன்னணியாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் 2021ம் ஆண்டு முடி பராமரிப்பு சம்பந்தமான பொருட்களை தயாரிக்கும் ’அனோமலி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 100 சதவீதம் நச்சுத்தன்மையற்ற, வேகன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான ஷாம்பூ, கண்டிஷ்னர் உள்ளிட்ட ஹேர் கேர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்தியாவிற்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் இடையே ஓயாமல் பறந்து கொண்டிருக்கும் பிசியான நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹேர் கேர் மட்டுமல்லாது மற்றொரு தொழிலும் இந்த ஆண்டு கால்பதித்தார். நியூயார்க் நகரில் ‘சோனா’ என்ற இந்திய உணவகத்தையும் திறந்துள்ளார்.
பிரியங்கா ஜில்: (POPxo)
பெண்களுக்கான பிரத்யேக டிஜிட்டல் தளமாக தொடங்கப்பட்டு, தற்போது மேக்கப் பொருட்கள் விற்பனையில் களைகட்டி வரும் POPxo நிறுவனத்தின் நிறுவனர் பிரியங்கா ஜில். உள்ளடக்கத்தில் இருந்து வணிகம் என்ற யுக்தியை கையில் எடுத்த பிரியங்கா ஜில், POPxo என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
இந்த நிறுவனத்தை குட் கிளாம் குழுமம் வாங்கிய பிறகு நிறுவனர் தர்பன் சங்க்வியுடன் இணை நிறுவனர் மற்றும் தலைவராக நிறுவன குழுவில் இணைந்தார். MyGlamm வழங்கும் POPxo மேக்அப் கலெக்ஷன் இந்த ஆண்டு 13 சிறப்புத் தொகுக்கப்பட்ட ‘ஆல் இன் ஒன்’ மேக்கப் கிட்களை மலிவு விலையில் சந்தைபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உபாசனா டக்கு:
MobiKwik நிறுவனத்தின் இணை நிறுவனர் & COO உபாசனா டக்கு, Fintech துறையில் பெண் தொழில்முனைவோருக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான ’மொபிக்விக்’ (MobiKwik) நிறுவனத்தின் பங்குகளை அடுத்த இரண்டு மாதத்திற்குள் பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்த உபாசனா திட்டமிட்டுள்ளார். அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் (ADIA) 20 மில்லியன் டாலர் முதலீட்டைத் தொடர்ந்து MobiKwik ஆனது கடைசியாக $750 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உபாசனா கூறுகையில்,
“‘மொபைல் வாலட்’ மற்றும் ‘பை நவ் பே லேட்டர்’ (பிஎன்பிஎல்) போன்ற தீர்வுகளை வழங்கும் MobiKwik, அபுதாபி முதலீட்டு ஆணையத்திடம் (ADIA) இருந்து ஒரு பங்கின் மதிப்பு ரூ. 895.80 என்ற அளவில் $20 மில்லியன் நிதி திரட்டியுள்ளது. இது ஊழியர்களின் ESOP-களில் சராசரியாக 600 சதவீத லாபத்தை குறிக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திரா நூயி (Former PepsiCo Chairperson)
பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இந்திரா நூயி இந்த ஆண்டு தனது நினைவு குறிப்பான ‘மை லைஃப் இன் ஃபுல்’ (My Life in Full) என்ற புத்தகத்தை வெளியிட்டார், அதில் அவர் தனது வாழ்க்கையின் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக பெண்கள் வெற்றியின் உச்சத்தை எட்டுவதைப் பற்றி எண்ணி கூட பார்க்காத காலத்தில், தான் உலகின் தலைசிறந்த வணிக நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தது பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
"நான் தினமும் வேலைக்கு புடவை அணிந்து செக்வேன். அதனால், என்னை இண்டியானாபோலிஸில் உள்ள வாடிக்கையாளர் கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல என் சக ஊழியர்கள் தயங்குவார்கள். அன்றைய காலகட்டத்தில் அதை நான் புரிந்து கொண்டேன். என் பணி வாழ்க்கையில் நான் கொடுத்த சிறிய விலை இது என நினைத்துக்கொள்வேன்,” என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அமீரா ஷா (Metropolis Healthcare)
கொரோனா கால சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த பிசினஸ்வுமன் பட்டியலில் அடுத்ததாக இடம் பிடித்திருப்பவர் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேரின் புரமோட்டர் மற்றும் மேனேஜிங் டைரக்டரான அமீரா ஷா. இது ஹெல்த்கேர் துறையில் பெண் தலைமையில் செயல்படும் நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 2,500 சேகரிப்பு மையங்களைக் கொண்டுள்ளது.
மேலும், மார்ச் 2021 இல் முடிவடைந்த நிதியாண்டின் கணக்கின் அடி ரூ.997 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதிகளவில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் உள்ள தனக்கென தனி இடம் பிடித்துள்ள சாதனை பெண்களில் சமீராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரண் மஜும்தார்-ஷா ( Biocon)
ஆசியாவிலேயே முன்னிலை வகிக்கும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மஜும்தார்-ஷா இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளார். மலிவு விலையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் மலிவு விலையில் மருந்துகளை உருவாக்கியதால், கிரண் மஜும்தார் ஷா உயிரி தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவராக உள்ளார். அதுமட்டுமின்றி சொந்த முயற்சியில் பில்லியனர் ஆன பெண்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் நியூயார்க்கில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சித் தலைவரான மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரின் (MSK) அறங்காவலர் குழுவில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் யுவர் ஸ்டோரி டெக்ஸ் பார்க்ஸ் 2021க்கு அவர் அளித்த பேட்டியில்
“நமக்கான அடுத்த வாய்ப்பு, பூர்த்தி செய்யப்படாத மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உலகச் சுகாதாரத் துறையிலும் நமது வழியைப் புதுமைப்படுத்துவதாகும். இதுவரை, நாங்கள் மலிவு விலையை பூர்த்தி செய்யாத தேவையாகக் கருதி வந்தோம், ஆனால் இப்போது நாம் புதுமை மற்றும் புதுமையைப் பார்க்க வேண்டும், பல சந்திக்கப்படாத மருத்துவ நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான தேவையாக இருக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்:பூர்வி குப்தா | தமிழில் - கனிமொழி